நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கடந்த மாத தொடக்கத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது, ஆர்யனை விடுவிக்கப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பண பேரத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், சாட்சியாகச் சேர்க்கப்பட்ட, கேபி கொசாவி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு, ஷாருக் கான் தரப்பிடம் பேரம் பேசியதாகப் பிரபாகர் என்பவர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
பிரபாகர், இந்த போதைப்பொருள் வழக்கில் சேர்க்கப்பட்ட மற்றொரு சாட்சி என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு நீதிமன்றத்தில் பிரபாகர் தாக்கல் செய்திருந்த மனுவில், கொசாவி இடைத்தரகர் சாம் டிசோசா என்பவருடன் சேர்ந்து, ஷாருக் கானின் மேனேஜர் பூஜாவிடம் பேசி, ஆர்யனை விடுவிக்க ரூ.50 லட்சம் பேரம் பேசியதாகவும், அதைத் தான் வாங்கி கைமாற்றியதாகவும், அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரபாகரின் இந்த வாதத்தை இடைத்தரகர் சாம் டிசோசாவும் உறுதி செய்திருக்கிறார். ஆர்யன் கான் வழக்கில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பிரபலங்களை மிரட்டி பணம் பறிப்பதாக மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் குற்றம்சாட்டியிருந்தார். அதையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து, மும்பை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மும்பை லோயர் பரேலில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஷாருக் கானின் மேனேஜர் பூஜா, கொசாவி, இடைத்தரகர் சாம் டிசோசா ஆகியோர் சந்தித்துக்கொண்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை தற்போது மும்பை போலீஸார் கைப்பற்றியிருக்கின்றனர். காரில் இருந்து இறங்கிச்சென்று கொசாவியைச் சந்தித்து விட்டு, பூஜா மீண்டும் தனது காருக்குத் திரும்பும் வீடியோ காட்சிகள் போலீஸாருக்கு கிடைத்திருப்பதால், ரூ.50 லட்சம் லஞ்சப்பணம் கைமாறியது தொடர்பாக பூஜாவிடம் விசாரணை மேற்கொள்ள மும்பை போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர்.
Also Read: ஆர்யன் கான் வழக்கு: ``ஷாருக் கான் மேனேஜரிடம் ரூ.50 லட்சம் வாங்கினேன். ஆனால்..." - சாம் டிசோசா
source https://www.vikatan.com/news/india/did-shah-rukh-khan-spend-rs-50-lakh-to-free-aryan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக