பிக்பாஸ் வீட்டில் தீபாவளிக் கொண்டாட்டம். ஆட்டம், பாட்டம், விருந்து என்று முழுநாளும் அவர்களுக்கு மகிழ்ச்சியாகக் கழிந்திருக்கும். ஆனால் நமக்கு? இரண்டு மூன்று uncut எபிசோட்களை ஏராளமான விளம்பரங்களோடு ஒரே அமர்வில் பார்த்தது போல் சலிப்புதான் வந்தது. அமாவாசையும் அதுவுமாக இவர்கள் வீட்டிலிருந்து வரிசையாக வந்து கொண்டிருந்த விதவிதமான பிரியாணி டப்பாக்களைப் பார்த்து காண்டாவதற்கு நாம் நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா? ‘மதுமிதாவை குளிக்க வைக்க வேண்டும்’, ‘நிரூப்பிற்கு கொண்டை மாற்ற வேண்டும்’ என்பது போன்ற அதிபயங்கர சாகசங்களை இவ்வளவு நேரம் காத்திருந்துதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமா?
‘தீபாவளி அவர்களுக்கு... தலைவலி நமக்கு’ என்பதாகக் கடந்த இந்தக் கொண்டாட்டத்தில் கொஞ்சூண்டு சுவாரசியங்களும் இருந்தன.
காலை ஆறு மணிக்கே ‘தீபாவளி... தீபாவளி...’ பாட்டைப் போட்டு மக்களை எழுப்பி விட்டார் பிக்பாஸ். ‘பண்டிகையை வீட்டில் கொண்டாட முடியவில்லையே’ என சோகத்தில் அமர்ந்திருந்த பிரியங்காவை, பாவனி தேற்றினார். “சாப்பாட்டுக்கு அழறாங்களா?” என்று சரியான பாயின்ட்டைப் பிடித்தார் ராஜூ. இருந்தாலும் இருக்கும்.
புத்தாடைகள் அணிந்து மலர்ச்சியாக வந்து அமர்ந்த போட்டியாளர்களை, “பார்க்க நல்லாயிருக்கீங்க” என்று பாராட்டினார் பிக்பாஸ். அவர் ஒருவேளை பழைய பட்டாபட்டி மட்டுமே அணிந்திருந்தால் கூட நமக்குத் தெரியாது.
‘சினிமா சினிமா’ டாஸ்க்கில் சிறப்பான பங்கேற்பாளர்களாகத் தேர்வான ராஜூ மற்றும் மதுமிதாவை தனியாக அழைத்து சிக்கன், மட்டன் உணவுகளின் புகைப்படங்களைக் காட்டி “உங்களுக்கு இதெல்லாம் பரிசு. ஆனா அப்புறம்தான் கொடுப்போம்” என்று வெறுப்பேற்றினார் பிக்பாஸ். “ஸ்மெல் செமயா இருக்கு... ஒண்ணுத்துலதான் பெப்பர் தூக்கலா இருக்கு” என்று பதிலுக்கு பிக்பாஸை வெறுப்பேற்றினார் ராஜூ. வெளியே சென்ற பிறகும் புகைப்படங்களை உற்றுப் பார்த்த பிரியங்காவிடம் “ரொம்ப நேரம் பார்க்காத. அளவு குறைஞ்சிடும்” என்று சொன்ன கமெண்ட் சூப்பர்.
ஒருபக்கம் இவர்களுக்கு ஆசை காட்டி விட்டு இன்னொரு பக்கம் பிரியங்காவை அழைத்த பிக்பாஸ், ‘‘நான்கு ரகசிய டாஸ்குகள் செய்ய வேண்டும். அதற்காக வேண்டிய கூட்டுக் களவாணிகளை இணைத்துக் கொள்ளலாம்” என்று ஒரு சீக்ரெட் ஆப்ரேஷனை ஒப்படைத்தார். ‘ராஜூவை சட்டை மாற்ற வைக்க வேண்டும்; மதுமிதாவை குளிக்கும்படி செய்ய வேண்டும்; ராஜூவை சக போட்டியாளரைப் போல் மிமிக்ரி செய்ய வைக்க வேண்டும்; மதுமிதாவை வைத்து நிரூப்பின் ஹேர்ஸ்டைலை மாற்ற வேண்டும்’ என்பவை அந்த நான்கு அதிபயங்கர சவால்கள். இவையெல்லாம் பிக்பாஸ் வீட்டில் தினசரி நிகழ்பவைதான். இதைப் போய் ரகசிய ஆப்ரேஷனாக தேர்வு செய்த பிக்பாஸின் புத்திசாலித்தனத்தை என்னவென்று சொல்வது?
அவர்தான் கூறுகெட்ட குக்கராக இப்படி டாஸ்குகள் தந்தார் என்றால், பிரியங்காவும் அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு, ‘பாஸ்! முதல் ஆப்ரேஷனை முடித்து விட்டேன். ஓவர்... ஓவர்...’ என்று சி.பி.ஐ சீஃப் ஆபீஸர் போல வாக்கி டாக்கியில் தகவல் பரிமாறியது கூடுதல் காமெடி.
ராஜூவிடம் நான்வெஜ் புகைப்படங்கள் அடங்கிய கார்டுகளைத் தந்த பிக்பாஸ், ‘இவற்றை இழக்காமல் வைத்திருங்கள்’ என்று குறிப்பிட்டது ஒரு ரகசிய ஹிண்ட். ஆனால் ராஜூ அப்பாவித்தனமாக அதை நேரடியாகப் புரிந்து கொண்டு, கார்டுகளை தன் உடைக்குள் மறைத்து வைத்திருந்தார். ‘என்ன இது... என் ஆடையில் கறை ஏற்படுத்த மக்கள் முயல்கிறார்களே?’ என்கிற சிறிய சந்தேகம் கூட வரவில்லை. அவரையும் குறை சொல்ல முடியாது. இந்த ரகசியம் பார்வையாளர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதால், “பார்த்து உஷாரா இருங்க” என்று நாம்தான் மைண்ட் வாய்ஸில் அலற வேண்டியிருந்தது.
ஆனால் பிரியங்காவும் தாமரையும் இணைந்து இந்த டிராமாவை சிறப்பாக நடத்தி முடித்தார்கள். “எனக்கு நிறைய கோபம் வரும். ஆனா முகமூடி போட்டு மறைச்சிருக்கேன்” என்று ராஜு முன்பு எப்போதோ சொன்னதை குறித்து வைத்துக் கொண்ட பிக்பாஸ் ‘‘உம்மைச் சோதிக்கவே யாம் இந்த திருவிளையாடலை நடத்தினோம்” என்று முடிவு செய்து கொண்டார். ராஜூ ஆடையை சாமர்த்தியமாக கறையாக்கினாலும், பிரியங்காவும் தாமரையும் அதற்காக உள்ளூற நடுங்கியதை உணர முடிந்தது. தாமரை பயந்து பாத்ரூமில் ஒளிந்து கொண்டு விட்டார். “நீ எது சொன்னாலும் இனி கேக்கறேன்” என்று பிரியங்கா சரணாகதி அடைந்தார். ராஜூ கோபத்தில் அனல் கக்கியதைப் பார்த்து தாமரை உண்மையாகவே அழ ஆரம்பித்து விட்டார்.
ராஜூ பயங்கர கோபத்தில் இருப்பதை நம்மாலேயே உணர முடிந்தது. ஆனால் அதை அவர் சிறப்பாகக் கட்டுப்படுத்திக் கொண்டார். “டிரஸ் முக்கியம் இல்லண்ணே.. வீட்ல இருந்து எவ்ளோ ஆசையா அனுப்பியிருப்பாங்க” என்று அதற்கான காரணத்தையும் இமானிடம் சொன்னார். மற்றவர்கள் புத்தாடையில் வலம் வரும்போது, தான் மட்டும் சாதாரண உடையில் இருப்பது அவரை கோபப்படுத்தியிருக்கும். ‘ஆத்திரம் கண்ணை மறைக்கும்’ என்பது இதுதான். பிரியங்காவும் தாமரையும் ஏன் இப்படிச் செய்தார்கள் என்பதை அவர் சற்று நிதானமாக யோசித்திருந்தால் ‘இது ரகசிய டாஸ்க்’ என்பதை மோப்பம் பிடித்திருக்கலாமோ, என்னவோ!
‘மதுரை முத்து’ தலைமையில் ஒரு பட்டிமன்றம் நடைபெற்றது. (இதுக்கு ஜி.பி.முத்துவையே கூப்பிட்டிருக்கலாம்!) ‘குக் வித் கோமாளி’ அரங்கில் மதுரை முத்து மொக்கை ஜோக் முயலும்போதெல்லாம் ‘மதுர வீரன்தானே’ என்கிற வரியை பின்னணியில் ஒலிபரப்புவார்கள். இந்தப் பட்டிமன்றத்தில் முழுக்கவே அந்த வரியை ஒலிக்க விட்டிருக்கலாம். அப்படி மொக்கை நகைச்சுவைகளை அள்ளித் தெளித்துக் கொண்டேயிருந்தார் முத்து. இவர் செய்த ராவடிகள் போதாதென்று, ‘‘மைக்கை கூட ‘ஆன்’தான் செய்ய முடியும். ‘பெண்’ செய்ய முடியாது” என்று கூடுதல் இம்சையை அடுக்கிக் கொண்டிருந்தார் ராஜூ.
‘பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் சிறந்தவர்களா, பெண்கள் சிறந்தவர்களா?’ என்ற அரதப்பழசான டாபிக்கில் நடந்தது வாக்குவாதம். இதில், பிக்பாஸ் வீட்டில் நடந்த ரகசிய சம்பவங்கள் தெருவில் இறைபட்டன. “சமையல் அறையில் பொருட்களை சிக்கனமாக உபயோகிப்பது ஆண்களே” என்று அண்ணாச்சி அழிச்சாட்டியம் செய்தபோது வாய் விட்டு சிரித்த இசை, தன்னுடைய முறை வரும்போது இதற்காக அவர்களைக் கழுவி கழுவி ஊற்றினார். “ஆண்கள்தான் ஒற்றுமையாக இருப்பதாக கமல் சொல்லியிருக்கிறார்” என்று ஞாபகமாகக் குறிப்பிட்டு கைத்தட்டல் வாங்கினார் அபினய். ‘பெண்களுக்கு மட்டுமே உதவும்’ விசேஷமான நோய் அபினய்க்கு இருப்பதாக குறிப்பிட்டு ‘சேம் சைட் கோல்’ போட்டார் ராஜூ.
‘‘ஒரு பெண் இருந்தால்தான் அது வீடாக இருக்கும்” என்று தாமரை குறிப்பிட்டது ஆண்களே மறுக்க முடியாத பாயிண்ட். ‘தீர்ப்பை பின்னாடி பார்த்துக்கலாம். இப்போ தீபாவளியைக் கொண்டாடுங்க” என்று பாதுகாப்பாக தீர்ப்பு சொல்லி எஸ்கேப் ஆனார் முத்து.
ரகசிய ஆப்ரேஷனுக்காக ஒவ்வொரு முறையும் வாக்குமூல அறைக்குச் சென்று திரும்பிய பிரியங்கா, அதற்கேற்ப விதவிதமான பொய்களை நம்பும்படி அள்ளி விட்டது சிறப்பு.
அடுத்து நிகழ்ந்தது ஒரு நீண்ட அழுகாச்சி டாஸ்க். சோற்றையும் போட்டு விட்டு, அதை நிம்மதியாக சாப்பிட விடாமல் ‘நொய் நொய்’ என்று ஒப்பாரி வைப்பார்கள் சில வீடுகளில்! அப்படி இருந்தது இது. பண்டிகை நாளும் அதுவுமாக, இத்தனை கண்ணீர் தேவையா பிக்பாஸ்?
போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வீட்டிலிருந்து பிடித்தமான உணவு வரும். கூடவே அவர்களின் புகைப்படங்களும் தொலைக்காட்சியில் தெரியும். ‘இந்தியாவின் தேசிய உணவாக பரோட்டாவை அறிவித்து விடலாம்’ என்று எழுதினார் நாஞ்சில் நாடன். அதனுடன் பிரியாணியையும் சேர்த்துக் கொள்ளலாம். அந்தளவிற்கு பலரின் வீடுகளிலிருந்து விதவிதமான பிரியாணிகள் வந்து கொண்டே இருந்தன. போட்டியாளர்கள் குழந்தையாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொலைக்காட்சியில் வர, சம்பந்தப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால் சில விதிவிலக்குகள் இருந்தன. சிறுவனாக இருந்தாலும் ராஜூவின் கண்கள் காட்டிக் கொடுத்தன. இதைப் போலவே பாவனியின் மூக்கை வைத்து அவரது பாப்பா போட்டோவை அடையாளம் காண முடிந்தது. சிறுமி ஒப்பனையில் இருந்த வருணை யாருக்குமே தெரியவில்லை.
அசைவ உணவு சமைக்கத் தெரியாது என்பதால் ராஜூவிற்கு பிடித்த உணவை அனுப்பியிருந்தார் அவரது மனைவி. கூடவே இருந்த ஒரு பேப்பரைப் பார்த்ததும் ஓவென்று கதறி அழுதார் ராஜூ. ஒருவேளை ராஜூவின் மனைவி, ஹோட்டல் பில்லையும் கூடவே மறதியாக வைத்து விட்டாரோ என்று தோன்றியது. இல்லை, தன் மனைவியின் அன்புக் கடிதத்தை பார்த்த துயரக் கண்ணீர்தான் அது.
அக்ஷரா தனக்கு வந்த கடிதத்தை ஆவலாகப் பிரிக்க முயல, “அதெல்லாம் இருக்கட்டும். டப்பால என்ன இருக்குன்னு முதல்ல பாரு” என்று காரியத்தில் கண்ணாக இருந்தார் பிரியங்கா. அது யாருடைய உணர்வாக / உணவாக இருந்தாலும் தானும் அதில் இணைந்து தொடர்ந்து கலங்கிக் கொண்டிருந்தார் பிரியங்கா. (இதெல்லாம் உண்மையா? இல்ல, நடிப்பா கோப்பால்?!).
தனது மகனை புகைப்படத்தில் பார்த்ததும் அடக்க முடியாமல் கதறித் தீர்த்து விட்டார் தாமரை. ‘என் குடும்பத்தில் இருந்து கடிதம் வரவில்லையே? மூன்றாம் மனிதர் போல் என்னை கையாண்டிருக்கிறார்களே?” என்று மதுமிதா கலங்கியதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அவருக்கு பாவனி சிறப்பான முறையில் ஆறுதல் சொன்னார்.
ராஜூவை மிமிக்ரி செய்ய வைப்பதெல்லாம் ஒரு சவாலா? சிபியை இதற்காக பிரியங்கா கூட்டு சேர்த்துக் கொண்டார். சிபி லைட்டாக கொளுத்திப் போட, முதலில் முரண்டு பிடித்த ராஜூ பிறகு பெரிய கச்சேரியே செய்து விட்டார். ‘தன் பிரியாணியில் தானே கொள்ளி வைத்துக் கொள்கிறோம்’ என்பது அவருக்கு அப்போது தெரியவில்லை. நிரூப்பின் தலைமுடியை மதுமிதா மாற்றி வாருவதெல்லாம் சுவாரசியமே இல்லை. மதுமிதா பார்ட் டைமாக எல்லோருக்கும் அந்த வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.
மதுமிதாவை குளிக்க வைக்க பாவனியை கூட்டுக்களவாணியாக நியமித்தார் பிரியங்கா. “பாத்ரூம் ஏரியா... உதவி... சதி…” என்றவுடனே பாவனியின் மூளைக்குள் மின்னல் அடித்திருக்க வேண்டும். முன்னர் நடந்த சதியின் எதிர்வினைகள் அப்படி. ஆனால் அவரோ உற்சாகமாக ஒப்புக் கொண்டு, ஏற்கெனவே துயரத்தில் அமர்ந்திருந்த மதுமிதாவை ‘உன் மேல நாத்தம் அடிக்கற மாதிரி இருக்கு. குளிச்சுட்டு வந்தா ஃப்ரெஷ்ஷா இருக்கும்” என்று சொல்லி எளிதாக சம்மதிக்க வைத்து விட்டார். பாவம் மதுமிதா, எளிதான டார்கெட். பிள்ளைப்பூச்சியை நசுக்குவதற்கு எல்லாம் ஒரு ரகசிய ஆப்ரேஷன்.
சூப்பர் சிங்கர் டீம் வந்தவுடன் ‘பிக்பாஸ்’ பிரியங்கா ஸ்விட்ச் போட்டது போல் தொகுப்பாளராக மாறி விட்டார். ‘Feel at home’ உணர்வை அடைந்திருப்பார் போல. “இவன்தான் சூப்பர் சிங்கர் டைட்டில் ஜெயிச்சவன்” என்ற பிரியங்கா, “காசுல்லாம் கொடுத்திட்டாங்களா?” என்று கேட்டது அநியாயக் குறும்பு. சொந்த சானலையே பங்கமாக கலாய்க்கும் கிண்டலாக இருந்தாலும்கூட அதை அனுமதிப்பதை விஜய் டிவி மட்டும்தான் செய்கிறது என்று நினைக்கிறேன். “மணி அண்ணா.. நீங்கதான் பிக்பாஸ் wild entry contestant-ன்னு பேசிக்கறாங்க” என்று பிரியங்கா சொன்னதற்கு பயந்து போய் பின்வாங்கினார் மணி. “உனக்கு நல்ல பொண்ணா கிடைக்கும்” என்று கார்த்திக்கை வாழ்த்தினார் தாமரை.
பிறகு மாகாபாவின் என்ட்ரி. தாய்ப்பசுவைப் பார்த்ததும் ஓடும் கன்றுக்குட்டி மாதிரி பாய்ந்து ஓடிய பிரியங்காவைப் பார்க்க நெகிழ்வாக இருந்தது. ஆனால் மாகாபா அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக ஹாண்டில் செய்தார். இவர் வந்து சேர்ந்ததுமே, பிக்பாஸ் என்பது முழுமையாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியாக மாறியது. தனக்கிருந்த தொகுப்பாளர் அனுபவத்தை பிரியங்கா சிறப்பாக பயன்படுத்தியதால்தான் இந்தப் பகுதி சுவாரசியம் அடைந்தது. இல்லையென்றால் மக்கள் ஆடுவதற்கு வெட்கப்பட்டு நெளிந்து அப்படியே அமர்ந்திருப்பார்கள். (ஆனால், ‘மக்களே... இவருக்கு ஒரு பெரிய கைத்தட்டல் கொடுத்துடுங்க’ என்று ஹைடெஸிபலில் கத்தி வாழ்த்தை மிரட்டி வாங்குவது மட்டும்தான் சகிக்கவில்லை!)
தாமரையின் தோற்றம் குறித்து ராஜூவும் இமானும் வழக்கம் போல் கிண்டலடித்துப் பேச, அதற்காக இமான் மீது அப்செட் ஆகி அழுது கொண்டிருந்தார் தாமரை. “இந்த கிண்டல் எனக்குப் பிடிக்கலைன்னு சொல்லிடுங்க. அப்பதான் நிறுத்துவாங்க” என்று அக்ஷராவும் வருணும் ஆலோசனை தந்தது சிறப்பு. தாமரை சொன்னது போல் ‘புண்படுத்தாத நகைச்சுவை’தான் சிறப்பானது.
க்ளைமேக்ஸில் வந்த பாலா, நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை டாப் கியரில் அடித்து தூக்கினார். அதுவரை தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு பார்த்தவர்கள் கூட தூக்கம் கலைந்து நிமிர்ந்திருப்பார்கள். ‘போஸ்ட்மேன் பொட்டுக்கடலை’ என்கிற பெயரில் கடிதம் கொண்டு வந்த பாலா, ஒவ்வொரு போட்டியாளரையும் தனது கலாய்ப்பால் பிரித்து மேய்ந்தது சிறப்பு. கிளம்பும்போது மறக்காமல், ‘யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை. நகைச்சுவைக்காக மட்டுமே’ என்று disclaimer போட்டார்.
தங்கள் உறவுகளின் நினைவாக வானத்தில் ‘பறக்கும் விளக்கு’ அனுப்புவது சீனக்கலாசாரம். பட்டாசு வெடித்து மகிழ்ந்த பிக்பாஸ் மக்கள், இந்த பறக்கும் விளக்குகளை அனுப்பி உறவுகளுக்கு தீபாவளி வாழ்த்து சொன்னது சிறப்பு. டிரோன் ஷாட்டில் இதை அழகாகப் பதிவு செய்திருந்தார்கள். தன் ஆடையின் மீது கறை பட்டது போல், மற்றவர்களின் ஆடைகளில் நடந்தால் என்னவாகியிருக்கும் என்பதை ராஜூ ரகளையாக செய்து காட்டிய நகைச்சுவையோடு எபிசோட் முடிந்தது.
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-season-5-contestants-in-the-house-celebrates-deepavali
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக