சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி சிவன் அருள் ஐ.ஏ.எஸ் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் மனைவி பெயர் சுமதி. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். மகள், டாக்டராக பணிபுரிந்து வருகிறார். மகன், கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல சிவன் அருள் வீட்டிலிருந்து வேலைக்குக் கிளம்பிச் சென்றிருக்கிறார்.
அப்போது, மகனும், மகளும் வெளியில் சென்றுவிட்டதால், வீட்டில் சுமதியும், வீட்டு வேலை செய்யும் பெண்ணும் மட்டும் இருந்திருக்கின்றனர். இந்தச் சமயத்தில் சுமதி, பாத்ரூமிற்குச் சென்றிருக்கிறார். பின், நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. அதனால் சந்தேகமடைந்த பணிப்பெண், பாத்ரூம் கதவைத் தட்டியிருக்கிறார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. சுமதியும் பதில் பேசவில்லை.
Also Read: `என் சாவுக்கு தலைமை ஆசிரியரே காரணம்’ - நண்பர்களுக்கு வீடியோ அனுப்பிவிட்டு மாணவன் தற்கொலை
அதையடுத்து, பதற்றமடைந்த பணிப்பெண் உடனடியாக சிவன் அருளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவரும், வீட்டுக்கு வந்திருக்கிறார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் பாத்ரூம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருக்கின்றனர். அப்போது, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சுமதி இறந்து கிடந்திருக்கிறார். அவரின் அருகில் பிளேடு ஒன்றும் இருந்திருக்கிறது. அதையடுத்து, சமதியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சுமதி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சுமதியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சுமதி சில மாதங்களாக மன அழுத்ததில் இருந்து வந்தது தெரியவந்தது. அதீத மன அழுத்தத்தின் காரணமாகச் சுமதி இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என போலீஸார் கூறுகின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/ias-officer-sivan-arul-wife-commits-suicide-in-chennai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக