Ad

புதன், 3 நவம்பர், 2021

வன்னியர் இடஒதுக்கீடு: 40 ஆண்டுகாலப் போராட்டம் முதல் 10.5% ரத்து வரை - ஒரு டைம்லைன் பார்வை!

``மாணவச் செல்வங்களே, அரசு வேலையில் இணைந்த, அரசு வேலைக்காக காத்திருக்கும் சொந்தங்களே, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எண்ணி நீங்கள் கலங்க வேண்டாம். உங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுக்க வேண்டியது எனது கடமை. அதை நிறைவேற்றாமல் ஓய மாட்டேன். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்; வன்னியர் இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்போம். கவலை வேண்டாம். இதுவும் கடந்து போகும். நீதி வெல்லும்''

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவிகித இட ஒதுக்கீடு உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அந்தச் சமூக மாணவர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக அளித்த உத்தரவாதம் இது.

கடந்த அ.தி.மு.க அரசின் கீழ் நடந்த கடைசி சட்டமன்றக் கூட்டத்தொடரில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில், 10.5 சதவிகதத்தை வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்து தமிழக அரசிதழிலும் அது வெளியிடப்பட்டது. தொடர்ந்து தி.மு.கவின் தலைமையிலான ஆட்சி அமைந்ததும் அது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி

ஆனால், இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக 25-க்கும் மேற்பட்ட அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு அந்த வழக்குகளை விசாரித்து வந்தது. இந்த நிலையில், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான 7 வினாக்களுக்கு அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் போதுமானதாக இல்லை என்று கூறி, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று கடந்த ஒன்றாம் தேதி தீர்ப்பளித்தது. இது வன்னிய சமூகத்தைச் சேர்ந்த மக்களையும் இந்த இட ஒதுக்கீட்டை ஆதரித்து வந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ``இது மிகப்பெரிய ஏமாற்றம் ''என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் அவர், ``தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த ஆட்சியில் இயற்றப்பட்டது என்றாலும் அதிலுள்ள நியாயத்தை தமிழகத்தின் இன்றைய ஆட்சியும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு. அதை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். 10.5% உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட அனைத்து சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்'' என்று கோரிக்கையை முன்வைத்தார்.

'உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது' என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டார். மேலும்,. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து கோரிக்கையும் முன்வைத்திருக்கிறார். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் இதுகுறித்துப் பேசும்போது ``தீர்ப்பு விவரம் முழுமையாக கைக்கு வந்தவுடன், அது குறித்து சட்ட வல்லுநர்கள், முதலமைச்சருடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கும்'' என கருத்துத் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், இந்த விவகாரம் அடுத்தகட்டமாக எப்படி நகரும் எனப் பார்ப்பதற்கு முன்பாக, வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் கடந்து வந்த வரலாற்றைப் பார்ப்போம்.

கருணாநிதி

வன்னியர் இட ஒதுக்கீட்டுப்போராட்டம்!

தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள்தொகையைக் கொண்ட சமூகங்களில் ஒன்றான வன்னிய சமூகம், 1989-ம் ஆண்டுக்கு முன்புவரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்தான் இருந்தது. அதில், ``மொத்தமுள்ள 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் தங்கள் சமூக மக்கள் வெறும் ஒரு சதவிகிதப் பலன்களைத்தான் அனுபவிக்கிறார்கள். ஏற்கெனவே சமூக, பொருளாதாரரீதியாக முன்னேறிய சமூகங்களுடன் போட்டியிட முடியவில்லை; அது நியாயமுமில்லை. அதனால், எங்கள் சமூகத்துக்கு எங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப, 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்'' என வன்னியர் சங்கம் எனும் அமைப்பைத் தொடங்கி போராட்டம் தொடங்கப்பட்டது. அந்த அமைப்பை மருத்துவர் ராமதாஸ் தலைமையேற்று நடத்தினார். ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டபோதும் 1987-ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட ஒருவாரத் தொடர் சாலை மறியல் போராட்டம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்த்தது. துணை ராணுவம் வரவழைக்கப்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில், 21 பேர் பலியானார்கள்.

தொடர்ந்து, தமிழக முதலைமைச்சர் எம்.ஜி.ஆருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவரின் மறைவுக்குப் பிறகு, அவரின் மனைவி ஜானகி முதலமைச்சர் ஆன பிறகு அவருடன் பேச்சுவார்த்தை, கவர்னர் அலெக்ஸாண்டரிடம் கோரிக்கை, பிரதமர் ராஜீவ் காந்தியிடம் கோரிக்கை, குடியரசுத் தலைவரான ஆர்.வெங்கட்ராமனிடம் கோரிக்கை எனப் பலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டும், அந்தக் கோரிக்கை நிறைவேறவில்லை.

1989-ல் நடந்த நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வரான கருணாநிதி, வன்னிய சமூகத்துடன் சேர்த்து 108 சமூகங்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக்கான மொத்த இட ஒதுக்கீட்டான 50 சதவிகிதத்திலிருந்து தனியாக 20 சதவிகிதத்தைப் பிரித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனத் தனிப்பிரிவை உருவாக்கினார். இதற்கு வன்னிய சமூகத் தலைவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்தபோதும், மருத்துவர் ராமதாஸ், மிகக்கடுமையாக விமர்சித்தார். அதே காலகட்டத்தில்தான், பாட்டாளி மக்கள் கட்சியையும் தொடங்கினார். வன்னியர் சமூகத்துக்கு கருணாநிதி துரோகம் இழைத்துவிட்டதாகவே கருதினாலும், பின்னாளில் கருணாநிதிக்குப் பாராட்டு விழா நடத்தினார் மருத்துவர் ராமதாஸ். தொடர்ந்து, 20 சதவிகித தனி இட ஒதுக்கீட்டுக்கும் குரல் கொடுத்து வந்தார்.

சட்டமன்றம்

இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தார் மருத்துவர் ராமதாஸ். தொடர்ந்து அது தொடர்பாக கடிதமும் எழுதினார். பா.ம.கவின் பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அரசுத் தரப்பில் இருந்து எந்த ரியாக்‌ஷனும் வராமல் இருக்கவே, நவம்பர் 22, 2020-ல் பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்திய கூட்டுப் பொதுக்குழுவில், தமிழக அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தொடர்போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, டிசம்பர் 1-ம் தேதி, சென்னை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் அருகே, பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போதே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பின்பேரில் அவரை நேரில் சந்தித்து கோரிக்கையை முன்வைத்தார் அன்புமணி. தொடர்ந்து மாவட்ட அளவிலும் கிராம அளவிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் பா.ம.க பிடி கொடுக்காமலே இருந்து வந்தது.

இந்த நிலையில், பிப்ரவரி 26-ம் தேதி, 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'வன்னியர்களுக்கான 10.5 சதவிகித தனி ஒதுக்கீடு தற்காலிகமாக வழங்கப்படுகிறது சாதி வாரியான கணக்கெடுப்பு வந்தபிறகு இந்த அளவு மாற்றியமைக்கப்படும்' என்றார். தொடர்ந்து, தென் மாவட்டங்களில் அதிமுகவினர் தேர்தல் பிரசாரம் செய்தபோது இதற்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. அப்போது, ஓ.பி.எஸ், ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்டோர், வன்னியர் இட ஒதுக்கீடு தற்காலிகமானதே என்று பேச, மருத்துவர் ராமதாஸ் உடனடியாக அதற்குப் பதிலடி தந்தார். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் 10.5 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வருமா என்கிற சந்தேகம் எழுந்தது. பலரும் அதுகுறித்த கோரிக்கைகை முதல்வர் ஸ்டாலினுக்கு முன்வைத்தனர். கடந்த ஜூலை 26-ம் தேதி அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என செப்டம்பர் 2-ம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வேல்முருகன் - ஸ்டாலின்

ஆனால், வன்னியர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்ததை எதிர்த்து சில அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதன் தீர்ப்புதான் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன் பேசும்போது, '' தீர்ப்பு முழுவதையும் படித்துவிட்டேன். அதில் வன்னியர்களுக்கோ இட ஒதுக்கீட்டுக்கோ எதிராக எந்தக் கருத்தும் இல்லை. உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதற்கான தரவுகள் இல்லை என்பது மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. அதனால், இந்தத் தீர்ப்புக்கு மாறாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவே'' என்கிறார்.

ஆனால், ''வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை மூன்றாக பிரிப்பதாகும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சமூகத்தினரின் சமூக நிலையை இறக்கியோ, ஏற்றியோ இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அவர்கள் அனைவரையும் அதே நிலையில், அதாவது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற நிலையில் வைத்து தான் அவர்களுக்கான இட ஒதுக்கீடு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதனால், அவர்களின் வேலைவாய்ப்பு விகிதம், சமூக, கல்வி நிலைமை ஆகியவை தேவையில்லை. மூன்று பிரிவினருக்கும் அவர்களின் பிரதிநிதித்துவத்துக்கு ஏற்ற வகையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அவர்களின் மக்கள்தொகை குறித்த புள்ளி விவரம் மட்டும் போதுமானது.

மருத்துவர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் 1983-ம் ஆண்டில் அம்பாசங்கர் ஆணையம் பிற்படுத்தப்பட்ட மக்களின் மக்கள்தொகையை வீடு வீடாக சென்று சேகரித்தது. அதன்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவு 1989-ம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது அதில் இடம்பெற்றிருந்த 108 சாதிகளின் மக்கள்தொகை, ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 24.64% ஆகும். அவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்த அடிப்படையில் 13.01 மக்கள்தொகை கொண்ட வன்னியர்களுக்கு 10.50%, எம்.பி.சி மற்றும் சீர்மரபினர் மக்கள்தொகை 8.56% என்பதால் அவர்களுக்கு 7%, பிற எம்.பி.சி வகுப்பினரின் மக்கள்தொகை 3.05% என்பதால் அவர்களுக்கு 2.5% இட ஒதுக்கீடு என பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுக்கான கணக்கீட்டை இதை விட துல்லியமாக செய்ய இயலாது. அந்த வகையில் தேவையான புள்ளி விவரங்களின் அடிப்படையில் தான் வன்னியர்களுக்கும், பிற சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது'' என மருத்துவர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-vanniyar-reservation-from-40-years-of-struggle-to-cancellation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக