Ad

செவ்வாய், 2 நவம்பர், 2021

தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள்: தமிழக வீரர் மாரியப்பன் மற்றும் ரஞ்சித் குமாருக்குக் கௌரவம்!

இந்திய விளையாட்டுத்துறையின் உயரிய விருதுகளான ராஜீவ் காந்தி கேல் ரத்னா (தற்போது மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா) மற்றும் தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் மற்றும் ரஞ்சித் குமாருக்கு முறையே டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன.

விருது பெற்றவர்கள்

சமீபத்தில் டோக்கியாவில் நடந்த பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை புரிந்தார் மாரியப்பன். ஏற்கெனவே 2016-ல் ரியோவில் நடந்த பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்று நம் நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவப்படுத்தியது. அதேபோல் மத்திய விளையாட்டுத்துறை அவருக்கு அர்ஜூனா விருதும் அளித்தது.

இந்நிலையில் 2020-ம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது 5 பேருக்கு அறிவிக்கப்பட்டது. அதில் தமிழக வீரர் மாரியப்பனும் ஒருவர்.

மாரியப்பன்

இதேபோல், மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு பயிற்சியாளரான மதுரையை சேர்ந்த ரஞ்சித் குமாருக்கு தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. 2001 முதல் வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தேசிய அளவில் பல பதக்கங்களை வென்றார். இதுவரை இந்திய அளவில் 38 தங்கப் பதக்கங்களும், சர்வதேச அளவில் 10 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு 7 வருடங்களாக பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் 400-க்கு மேற்பட்டவர்களை தேசிய அளவிலும், 100-க்கும் மேற்பட்டவர்களை சர்வதேச அளவிலும் கலந்துகொள்ளும் வகையில் தயார்படுத்தியுள்ளார். இந்த சேவைக்காகத்தான் தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

ரஞ்சித் குமார்

இந்த நிலையில், தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் டெல்லியில் நடந்த தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2020 விழாவில் மொத்தம் 66 விருதுகள் வழங்கப்பட்டன. அதில் மாரியப்பனுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும், ரஞ்சித் குமாருக்கு தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டன.

விருதுபெற்ற இருவரையும் தமிழக மக்கள் வாழ்த்தி வருகிறார்கள்.



source https://sports.vikatan.com/sports-news/national-sports-and-adventure-awards-2020-two-people-from-tamil-nadu-honoured

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக