Ad

செவ்வாய், 2 நவம்பர், 2021

கேரளா: நார்க்கோட்டிக் ஜிகாத்; சர்ச்சைப் பேச்சு! - பிஷப் மார் ஜோசப் மீது போலீஸார் வழக்கு பதிவு

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது பாலா மறை மாவட்டம். இந்த மறை மாவட்ட பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட், சமீபத்தில் குருவிலங்காடு சபையின் யூடியூப் சேனலில் `லவ் ஜிகாத்’, `போதை ஜிகாத்’ ஆகியவற்றைக் குறித்துப் பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மார் ஜோசப் கல்லறங்காட் அந்த வீடியோவில், "கத்தோலிக்கப் பெண்களையும் இளைஞர்களையும் லவ் ஜிகாத், நார்க்கோட்டிக் ஜிகாத் ஆகியவை மூலம் வீழ்த்துகிறார்கள். ஏற்கெனவே, கேரள மாநிலம், பயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல் கேந்திரமாக இருப்பதாக முன்னாள் டி.ஜி.பி லோக்நாத் பெகரா கூறியிருந்தார். உலகத்தில் நீதியையும், சமாதானத்தையும், இஸ்லாத்தையும் நிலைநாட்ட யுத்தமும் போராட்டங்களும் செய்ய வேண்டும் என சில முஸ்லிம் குழுக்கள் நினைக்கின்றன. அவர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த இயலாத இடங்களில், சில சூழ்ச்சிகளைச் செயல்படுத்துகிறார்கள். அவற்றில் லவ் ஜிகாத், நார்க்கோட்டிக் ஜிகாத் ஆகியவை முக்கியமானவை. இந்த விஷயத்தில் கத்தோலிக்கக் குடும்பங்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்று பேசியிருந்தார்.

பினராயி விஜயன்

பிஷப்பின் இந்தப் பேச்சு கேரள அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதையடுத்து, காங்கிரஸ், சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் பிஷப்பின் பேச்சுக்குத் தங்கள் எதிர்பைத் தெரிவித்தன. இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனும், நார்க்கோட்டிக் ஜிகாத் என்ற ஒன்று கேரளாவில் இல்லை என்று நீண்ட விளக்கம் கொடுத்தார். அதேசமயம் பா.ஜ.க மத்திய அமைச்சர் வி.முரளீதரன் உள்ளிட்டவர்கள் பிஷப்பின் பேச்சில் உண்மை இருப்பதாகக் கூறியதுடன், பிஷப்பை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Also Read: கேரளத்தை அதிரவைத்த நார்க்கோட்டிக் ஜிகாத்! - பிஷப் பேசியதன் பின்னணி என்ன?

இந்த நிலையில், பிஷப்பின் பேச்சு மத மோதலைத் தூண்டும்விதமாக இருப்பதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இந்திய இமாம் கவுன்சில் மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ் மெளலவி குருவிலங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதையடுத்து, இமாம் கவுன்சில் நிர்வாகிகள் பாலா மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தை நாடினர்.

பாலா பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட்

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து விசாரணை நடத்தும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பாலா பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட் மீது குருவிலங்காடு போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இந்த விவகாரத்தில், சட்ட நடவடிக்கைகள் தொடரும் என அகில இந்திய இமாம் கவுன்சில் அறிவித்திருக்கிறது. அதே சமயம், இந்த வழக்கைச் சட்டப்படி சந்திப்போம் என பாலா பிஷப் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kerala-police-filed-a-case-against-the-bishop-joseph-kallarangatt-over-a-controversial-speech

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக