Ad

செவ்வாய், 2 நவம்பர், 2021

நெல்லை கூலிப்படைத் தலைவன் தஞ்சையில் கைது! - விசாரணையில் தெரிய வந்த கொலை திட்டம்

திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் பகுதியைச் சேர்ந்தவர் லெட்சுமண காந்தன் என்கிற கருப்பா. கூலிப்படைத் தலைவனான கருப்பாவிடம் ஏராளமான ரௌடிகள் பணிபுரிந்து வருகின்றனர். இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. திருநெல்வேலியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய முள்ளர்பள்ளம் படுகொலையில் தொடர்புடையவர் என, கருப்பா போலீஸாரால் சந்தேகிக்கப்படுகிறார். திருநெல்வேலியில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, போலீஸார் இவரைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர். அதை அறிந்து, கருப்பா தஞ்சாவூரில் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

கூலிப்படை கும்பல்

இந்த நிலையில், தஞ்சாவூர் எஸ்.பி ரவளிபிரியா உத்தரவின் பேரில், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் ஸ்பெஷல் டீம் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது புதிய பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த கருப்பாவை பிடித்து விசாரித்திருக்கின்றனர். அப்போது, கருப்பா பிரபல கூலிப்படைத் தலைவன் என்பதும், போலீஸாரால் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

அதையடுத்து, கருப்பாவை கைது செய்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தஞ்சாவூரில் தலைமறைவாக இருக்கும் நேரத்தில், ஒரத்தநாடு அருகில் ஒருவரைக் கொலை செய்ய வந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், மேற்கொண்டு விசாரித்த போது, கருப்பா ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரைக் கொலை செய்வதற்காக அவரின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு கையில் பட்டாக்கத்தியுடன் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து, கருப்பாவிடம் இருந்து பட்டாக்கத்தியைப் பறிமுதல் செய்த போலீஸார், அவரின் கூலிப்படையைச் சேர்ந்த மோகன், முத்தமிழ் செல்வன் ஆகிய இருவரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகி விட்ட கணபதி என்பவரையும் தேடி வருகின்றனர்.

தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார்

இது குறித்து தனிப்படை போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, ``தென் மாவட்டத்தில் பிரபல கூலிப்படை தலைவனாகச் செயல்பட்டு வருபவர் லெட்சுமணகாந்தன். இவர் மீது திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. முள்ளர் பள்ளத்தில் நடந்த கொலை வழக்கில் திருநெல்வேலி மாவட்ட போலீஸார் இவரைத் தேடி வந்த நிலையில் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்தைச் சேர்ந்த கணபதி என்பவர் லெட்சுமணகாந்தனுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார். கணபதி முத்துப்பேட்டை பகுதியில் நடைபெற்ற கொலையில் தொடர்புடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. லெட்சுமணகாந்தன் அவ்வப்போது திருநெல்வேலிக்கும் சென்று வந்திருக்கிறார்.

இந்த நிலையில், பட்டுக்கோட்டை அருகே உள்ள பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை நிலப் பிரச்னையில் கொலை செய்வதற்காக ஒருவர் கணபதியை அணுகியிருக்கிறார். அதைக் கணபதி இதனை லெட்சுமணகாந்தனிடம் சொல்ல, கூலிப்படையைச் சேர்ந்த சிலருடன் இணைந்து கொலைக்கான சதித்திட்டத்தைத் தீட்டியிருக்கிறார்.

தனிப்படை போலீஸ் டீம்

எஸ்.பி ரவளிபிரியா உத்தரவின் பேரில் ஸ்பெஷல் டீம் உதவி ஆய்வாளர் ராஜேஷ் குமார், தலைமையில் தனிப்படை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கருப்பா மற்றும் கணபதி ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதனால், அவர்களின் கொலை முயற்சி தடுக்கப்பட்டிருக்கிறது" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/tanjore-special-team-police-arrested-a-rowdy-who-planned-to-execute-a-murder

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக