மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சராகப் பதவிவகித்த அனில் தேஷ்முக் மீது மும்பை மாநகர போலீஸில் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் லஞ்சப் புகார் தெரிவித்திருந்தார். சச்சின் வாஸ் உள்ளிட்ட பல முக்கிய போலீஸ் அதிகாரிகளிடம் ஒவ்வொரு மாதமும் மும்பையிலுள்ள மது பார்கள், ஹோட்டல்களில் ரூ.100 கோடி மாமூல் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அனில் தேஷ்முக் போலீஸாரை நிர்பந்தித்ததாக பரம்பீர் சிங் குற்றம்சாட்டினார். மேலும், இது தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கும் கடந்த மார்ச் 20-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதேபோல, இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் பரம்பீர் சிங் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும், சி.பி.ஐ அதிகாரிகளும் அனில் தேஷ்முக் மீதான பணமோசடிப் புகார் குறித்து தனித் தனியாக விசாரணை நடத்தினர். அனில் தேஷ்முக் இல்லங்களில் அதிகாரிகள் ரெய்டு நடத்தியதோடு, அவரின் செயலாளர்கள் சஞ்சீவ் பாலண்டே, பிஏ குந்தன் ஆகியோரையும் கைதுசெய்தனர்.
விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அனில் தேஷ்முக்குக்கு அமலாக்கப் பிரிவு ஐந்து முறை சம்மன் அனுப்பியது. ஆனால், நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டி, அனில் தேஷ்முக் விசாரணைக்கு ஆஜராக மறுத்து, தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களாகத் தலைமறைவாக இருந்துவந்தார். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, தன் மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் அனில் தேஷ்முக் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, வேறு வழியே இல்லை என்ற நிலையில் நேற்றைய தினம் திடீரென தனது வழக்கறிஞருடன் அமலாக்கத்துறை அலுவலகத்துக்குச் சென்றார். அவரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மேலும், விசாரணையை மேற்பார்வையிடுவதற்காக டெல்லியிலிருந்து அமலாக்கத்துறையின் கூடுதல் இயக்குநர் மும்பை வந்திருந்தார். அவரிடம் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அனில் தேஷ்முக் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று அமலாக்கத்துறையினர் அவரைக் கைதுசெய்தனர்.
Also Read: மும்பை: மிரட்டிப் பணம் பறித்த வழக்கு; மாஜி போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்குக்குத் தேடுதல் நோட்டீஸ்
அனில் தேஷ்முக் உள்துறை அமைச்சராக இருந்தபோது, போலீஸ் அதிகாரியாக இருந்த சச்சின் வாஸ் மும்பையிலுள்ள ஆர்கெஸ்ட்ரா பார்களில் அனில் தேஷ்முக்குக்காக ரூ.4.7 கோடி வசூலித்ததாகவும், அதை அனில் தேஷ்முக்கின் செயலாளர் சஞ்சீவ் பாலண்டேயும், வேறு இரண்டு அதிகாரிகளும் கண்காணித்ததாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், போலீஸ் அதிகாரி சச்சின் வாஸிடமிருந்து இரண்டு முறை அனில் தேஷ்முக்கின் உதவியாளர் குந்தன் என்பவர் ரூ.4.7 கோடி வாங்கிச் சென்றதாகவும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ``வசூலிக்கப்பட்ட பணம் அனில் தேஷ்முக்கின் மகன் ரிஷ்கேஷ் உத்தரவின் பேரில் டெல்லியைச் சேர்ந்த இரண்டு ஹவாலா நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஹவாலா நிறுவனங்கள் மூலம் அனில் தேஷ்முக்கின் கல்வித் தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக அளிப்பதுபோல் பணத்தைக் கொடுத்திருக்கின்றனர்" என்றனர். முன்னதாக, அனில் தேஷ்முக் அமலாக்கப் பிரிவில் விசாரணைக்கு ஆஜரானபோது, அவர் தரப்பில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், தன்மீது தவறான குற்றச்சாட்டைச் சுமத்திவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டதாகவும், தான் தொடர்ந்து விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்துவருவதாகவும் அனில் தேஷ்முக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், அனில் தேஷ்முக் மீது புகார் தெரிவித்த பரம்பீர் சிங், தற்போது பணம் பறிப்பு புகாரில் சிக்கி வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/former-maharashtra-minister-arrested-in-money-laundering-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக