காயத்ரி தன் குடும்பத்தை பற்றி யோசிப்பதால் சிவாவுடைய காதலை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக புனிதா சிவாவிடம் சொல்கிறாள். நம்மூரில் பெண்கள் மீது காட்டப்படும் பாசம் எமோஷனல் பிளாக்மெயில் செய்வதற்குத்தான் பயன்படுகிறது என்று புனிதா சொல்கிறாள். காயத்ரியின் வீட்டில் அவளைக் கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைத்திருந்தாலும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கும் நோக்கம் அவளது தந்தைக்கு இல்லை. பெண்கள் வேலைக்குச் சென்றால் கெட்டுப் போய்விடுவார்கள் என்பதுதான் அவரது எண்ணமாக இருந்தது. கல்லூரி படிப்பு முடிந்ததும் காயத்ரிக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் தன்னுடைய கடமை முடிந்தது என்று அவர் நினைத்திருந்தார். காயத்ரி தன்னுடைய வேலைக்குச் செல்லும் ஆசையை சுந்தரிடம் சொல்லி அதனால் திருமணம் வேண்டாம் என்று சொன்னாள். சுந்தருக்கு காயத்ரியை கட்டாயம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதால் காயத்ரியின் கனவுக்கு துணை இருப்பதாக சொல்லி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தான். காயத்ரிக்கு சுந்தரின் மீது இருக்கும் நன்றி உணர்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம்.
இந்தச் சூழ்நிலையில் காயத்ரி நிச்சயம் முடிந்த பின்னால் ஒருவரைக் காதலிப்பதாக வீட்டில் சொல்வது இரண்டு வீட்டிலும் மிகப்பெரிய குழப்பத்தையும் சண்டையையும் உண்டாக்கும்.
காயத்ரியின் தந்தை கிராமத்தில் வளர்ந்தவர். தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்றால் ஊரில் அவப்பெயர் உண்டாகும் என்பதே தன் மகளின் வாழ்க்கையை விட அவரது முதன்மை பிரச்னையாக இருக்கும். அதுபோக காயத்ரி சுந்தருக்கு இவ்வளவு நாள்களாக நம்பிக்கையை கொடுத்திருப்பதாகவும், அதை காப்பாற்ற முடியாமல் போனால் பாவம் எனவும் எண்ணுகிறாள். சிவா கூறியது போல சரி, தவறு என்பதைத் தாண்டி இது இயல்பாக தோன்றும் உணர்வு.
காயத்ரி தன் குடும்பத்தினருக்காகவும் சுந்தரின் மேல் இருக்கும் பாவம் மற்றும் நன்றியுணர்ச்சிக்காகவும் சுந்தரை திருமணம் செய்துகொள்வது, சிவா மற்றும் சுந்தருக்கு செய்யும் துரோகம் அல்ல. அது காயத்ரி தனக்குதானே செய்து கொள்ளும் துரோகம். காலம் முழுவதும் பிரச்னைகள் வரும்போது காயத்ரிக்கு ஒருவேளை தான் காதலித்த சிவாவை திருமணம் செய்திருக்கலாம் என்கிற எண்ணம் வரக்கூடும். காயத்ரியை போல தங்களுக்கு வந்த லவ் ப்ரொபோஸல்கள் பற்றியும் தங்களுக்கு தோன்றிய காதல் உணர்வு பற்றியும் யாரிடமும் சொல்லாமல் மறைத்துக்கொண்டு, அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு வீட்டில் சொல்பவர்களை திருமணம் செய்துகொண்ட பெண்கள்தான் பெரும்பாலானவர்கள். பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள், காயத்ரியை போல ஒரே வீட்டில் ஆண்களுடன் நண்பர்களாக தங்கியிருக்கக்கூட முடிகிறது. ஆனால் தங்களுடைய சுயத்தையும் சுயமரியாதையையும் இழக்காமல் இன்னமும் தங்களுடைய காதலை வீட்டில் சொல்லி திருமணம் செய்வது என்பது மிகப்பெரும் சாதனையாக இருக்கின்றது. காயத்ரிக்கு நிச்சயம் ஆகிவிட்டதால் இது பெரிய பிரச்னையாக இருக்கின்றது என்று பலருக்கும் தோன்றலாம். நிச்சயமாக இல்லை! காயத்ரியின் உடைகள் முதற்கொண்டு அவள் குடும்பத்தினர்தான் தேர்வு செய்கின்றனர் எனும்போது சுந்தருடன் நிச்சயமாகவில்லை என்றாலும் கூட காயத்ரிக்கு காதலித்து திருமனம் செய்து கொள்ளும் வாய்ப்பே இருந்திருக்காது.
சிவா காயத்ரிக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காக தான் டீம் மாறிக்கொள்ளட்டுமா என்று புனிதாவிடம் கேட்கிறான். அதற்கு புனிதா வேண்டாம் என்று சொல்கிறாள். இந்தச் சூழ்நிலையில் சிவா பெங்களூருவில் தான் காதலித்த பெண்ணிடம் நடந்து கொண்டது நினைவிற்கு வருகிறது. திருமணத்தை பற்றி பேச வந்த தன் காதலியின் தந்தையிடம் சிவா மரியாதை இல்லாமல் பேசி அவர் முகத்தில் கோபத்தில் காபியை ஊற்றி விடுவான். அதனால் தன் காதலியை பிரிந்து விடுவான். அதன் பிறகு மனநல மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளான். சிவாவின் மன நல சிகிச்சையும், இடமாற்றமும் புதிய நண்பர்களும் அவனது நடவடிக்கைகள் மற்றும் குணத்தில் மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இப்போதாவது சிவாவுக்கு தன்னுடைய பழைய காதலி மற்றும் அவள் தந்தையிடம் தான் தவறாக நடந்து கொண்டது நினைவிற்கு வந்து, அவர்களிடம் வருத்தம் தெரிவித்திருக்கலாம். ஆனால் சிவா திடீர் நல்லவனாக ஆகி சுந்தரை தவறாக பேசுவது ஆச்சர்யமளிக்கிறது.
சுந்தர் காயத்ரியிடம் தயங்கித் தயங்கி அவளது அலுவலகம் பற்றியும் சிவாவை பற்றியும் பேசுகிறான். சுந்தர் தான் காயத்ரியிடம் காலையிலிருந்து நடந்ததைப் பற்றி சொல்வது போல காயத்ரியும் தனது அலுவலகத்தில் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்ல வேண்டும் என்று சுந்தர் எதிர்பார்க்கிறான். சுந்தர் காயத்ரியின் மீது சந்தேகப்பட்டு அவள் தன்னிடம் ஏதாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசையாக இருப்பதாக சொல்கிறான். பேச்சு சிவாவை பற்றி வந்ததும் காயத்ரி உடனடியாக தான் சிவாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டேன் என்று சொல்கிறாள். சுந்தர் பொறாமையில் சிவாவை பற்றி தவறாக காயத்ரியிடம் சொல்கிறான். மீண்டும் மீண்டும் சுந்தர் காயத்ரியிடம் தான் அவளிடம் வெளிப்படையாக இருப்பது போல அவளும் தன்னிடம் இருக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதியவைத்துக் கொண்டே இருக்கிறான்.
சுந்தரின் மனம் முழுக்க காயத்ரியின் மீது சந்தேகமும், அவநம்பிக்கையும் இருக்கின்றன. சுந்தர் திருமணத்திற்கு பிறகும் இதே போல் காயத்ரியிடம் நடந்து கொண்டால் காயத்ரி உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் இருக்கும் ஆண்களிடம் கூட பேச முடியாத நிலை ஏற்படும். புனிதாவிடம் அவளது டீம் லீடர் கிஷோர் தன்னுடன் சேர்ந்து மது அருந்த முடியுமா என்று கேட்கிறான். புனிதா பரத்தை தவிர யாருடனும் மது அருந்த மாட்டேன் என்று சொல்கிறாள். கிஷோர் பரத்தையும் அழைத்துக் கொண்டு வரச் சொல்கிறான்.
கிஷோர் புனிதாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் புனிதா தனக்கு பரத்துடன் இருக்கும் உறவைப் பற்றி சொல்லிய பிறகும் கூட புனிதாவுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்று நினைப்பதும், தன்னுடைய காதலை புனிதா ஏற்காததை காரணம் காட்டி அவளை வலுக்கட்டாயமாக மது அருந்த அழைப்பதும், பரத்தையும் அழைத்துக் கொண்டு வரச் சொல்வதும் தேவை இல்லாத ஒன்று. ஒரு பெண் முற்போக்காக இருக்கிறாள் என்பதற்காக அவளுடைய காதலன்/கணவன் அதேபோல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
Also Read: AKS - 50: திருமணங்கள் `செட்டில்' ஆன பின்தான் நடக்கவேண்டுமா? சிவா விஷயத்தில் காயத்ரியின் முடிவு என்ன?
இங்கே கிஷோருக்கு புனிதாவின் மீது அக்கறை கிடையாது. தன் எண்ணம் நிறைவேற வேண்டும் என்பது மட்டும்தான் அவனது நோக்கமாக இருக்கின்றது. தான் இவ்வாறு அழைப்பதால் அவளுக்கு பிரச்னைகள் வரலாம் என்பதை யோசித்து கிஷோர் பேசியிருக்க வேண்டும் அல்லது இன்னும் சில நாள் கழித்து புனிதா மற்றும் பரத்திடம் பழகி பிறகு மது அருந்த அழைத்திருக்கலாம். தங்களுடைய காதல் நிறைவேறவில்லை என்றால் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாங்கள் காதலிப்பவரின் மகிழ்ச்சியை கெடுப்பவர்கள் தான் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறார்கள்.
ராஜேஷும், கவிதாவும் பெங்களூருவில் ஹோட்டலுக்கு வருகிறார்கள். இரண்டு அறைகள் கேட்கும் ராஜேஷிடம் கவிதா, வேண்டாம் ஒரு அறை போதும் என்கிறாள். கவிதா செலவை மனதில் வைத்து அவ்வாறு சொல்கிறாள். ஆனால் ராஜேஷிற்கு அவள் சொல்வது அதிர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கவிதாவிற்கு ஒரே அறையில் ராஜேஷுடன் தங்குவது பிரச்னையாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் தன்னுடைய நண்பனான பாண்டியனுடன் அவள் ஒரே அறையில் தங்கி இருக்கிறாள். கவிதாவை பொறுத்தவரையில் பாண்டியன் அல்லது ராஜேஷ் யாராக இருந்தாலும் அவளுடைய பாதுகாப்பும் கட்டுப்பாடும் அவள் கையில் உள்ளது என்று நம்புகிறாள். பெரும்பாலும் பெண்களுக்கு இந்த நம்பிக்கை இருப்பதால்தான் அவர்களால் வெளியூர், வெளிநாடுகளில் தனியாகச் சென்று வேலை பார்க்க முடிகிறது.
ஆனால் ஆண்கள் ஒரு பெண் தன்னிடம் கொஞ்சம் நன்றாக பேசினாலோ அல்லது தன் மீது உள்ள நம்பிக்கையில் ஒரு அறையில் தங்க சம்பாதித்தாலும் உடனடியாக அது தங்களுக்குக் கொடுக்கப்படும் சிக்னல் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அதைத்தான் இன்று ராஜேஷ் செய்கிறான். கவிதா ஒரே அறையில் தங்கலாம் என்று சாதாரணமாக சொல்வதற்கு ராஜேஷ் மகிழ்ச்சி அடைவதற்கான காரணம் அதுதான். ஆண்கள் இதை புரிந்துகொண்டு மாறி கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் பெண்களுக்கு பிரச்னைகள் நேரும் என்பதை விட ஆண்களுக்கு அவமானம் நேருவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.
சிவா காயத்ரியிடமிருந்து எப்படி விலகி இருக்கப் போகிறான்? பரத்துடன் கிஷோரை சந்திக்க செல்கையில் கிஷோர் புனிதாவிற்கும், பெங்களூருவில் ராஜேஷ் கவிதாவிற்கும் வைத்திருக்கும் ’சர்ப்ரைஸ்’ என்ன?
காத்திருப்போம்!
source https://cinema.vikatan.com/television/aadhalinaal-kadhal-seiveer-51-gayathris-dilemma-and-rajeshs-stereotyping
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக