என் வயது 34. பீரியட்ஸ் நாள்களில் அந்தரங்க உறுப்பில் கடுமையான அரிப்பு ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்? தீர்வுகள் உண்டா?
- விஷாகா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.
``பீரியட்ஸ் நாள்களில் ஏற்படும் இந்த அரிப்புக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். முதல் காரணம் நாப்கின் அலர்ஜியாக இருக்கலாம். இந்தவகை அலர்ஜிக்கு `கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்' (Contact Dermatitis) என்று பெயர். அதாவது, நாப்கினானது, சருமத்துடன் நேரடித் தொடர்பில் இருப்பதால் ஏற்படும் ஒவ்வாமை. நாப்கினில் உள்ள பசை, பெர்ஃபியூம், மேல் லேயரில் உள்ள பாலிஓலிஃபின் (Polyolefin) எனப்படும் கெமிக்கல் போன்றவை சருமத்தை உறுத்தி, அதன் விளைவாக அரிப்பு ஏற்படலாம். தவிர பீரியட்ஸ் நாள்களில் அந்தரங்க உறுப்பைச் சுற்றி சூடு, ஈரப்பதம் போன்றவை இருக்கும். அதனால் அதிகம் வியர்க்கும்.
Also Read: Covid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்டதும் பீரியட்ஸ் சுழற்சி மாறுவது ஏன்?
நம் உடலில் இயல்பிலேயே பாக்டீரியா கிருமிகள் இருக்கும். பீரியட்ஸ் நாள்களில் அந்தரங்க உறுப்பைச் சுற்றியுள்ள ஈரப்பதம் மற்றும் சூட்டின் காரணமாக அந்த பாக்டீரியா வளர்ச்சி அதிகரிக்கும்.
அந்த நாள்களில் நாப்கின் வைத்துக்கொண்டு நடக்கும்போது அது தொடைகளில் உராய்ந்து அதன் விளைவாகவும் அரிப்பை உண்டுபண்ணலாம். அந்தப் பகுதியில் உள்ள சருமம் ஏற்கெனவே ரொம்பவும் சென்சிட்டிவ்வாக இருக்கும். இந்தப் பிரச்னையும் சேரும்போது, அதைக் கவனிக்காமல் விட்டால் அரிப்புடன் வீக்கம், சருமம் சிவந்து தடித்துப்போவது போன்றவையும் சேர்ந்துகொள்ளலாம். அதன் விளைவாக பூஞ்சைத்தொற்று அல்லது ஈஸ்ட் தொற்று வரவும் வாய்ப்புகள் அதிகம்.
எனவே, நீங்கள் வழக்கமாக உபயோகிக்கும் நாப்கினைத் தவிர்த்து வேறு நிறுவனத் தயாரிப்பை உபயோகித்துப் பார்க்கலாம். வாசனை சேர்க்காத நாப்கினாக இருப்பது சிறந்தது. தரமான, பயோடீக்ரேடபுள் காட்டன் நாப்கின்கள் இன்று கிடைக்கின்றன. விலை சற்று அதிகம் என்றாலும் இவை சருமத்துக்கு எந்தத் தொந்தரவையும் கொடுப்பதில்லை.
Also Read: PCOD இருக்கறவங்க இதை செய்தால் குணமாகிடும்! | Gynaecologist Explains | Say Swag | PCOS
தளர்வான, காட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டியது முக்கியம். இதனால் உள்ளாடையும் நாப்கினும் தொடைப்பகுதியில் உராய்வது தடுக்கப்படும். குறிப்பிட்ட இடைவெளியில் நாப்கினை மாற்ற வேண்டும். அதிக ப்ளீடிங் இல்லாதவர்களும் நாப்கின் முழுவதும் நனையட்டுமே என்று காத்திருக்காமல் குறிப்பிட்ட இடைவெளியில் அதை மாற்ற வேண்டும்.
எப்படிப்பட்ட நாப்கினும் அலர்ஜியை ஏற்படுத்துவதாக உணர்பவர்கள், மென்ஸ்ட்ருவல் கப் உபயோகிக்கலாம். அவற்றை உபயோகிப்பதும் எளிது. என்ன செய்தாலும் பீரியட்ஸ் நாள்களில் இன்ஃபெக்ஷனை தவிர்க்க முடியவில்லை என்றால், பீரியட்ஸ் வருவதற்கு முன், சரும மருத்துவரைக் கலந்தாலோசித்து ஆன்டிஃபங்கல் க்ரீம், பவுடர் மற்றும் மாத்திரைகளை உபயோகிக்கலாம்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/how-to-get-rid-off-itching-during-periods
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக