Ad

செவ்வாய், 5 அக்டோபர், 2021

`சிங்கூர் போராட்டம் டு பவானிப்பூர் தேர்தல் வெற்றிவரை' -`தீதி' மம்தா பானர்ஜியின் வெற்றிக் கதை!

பவானிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட மம்தா அபார வெற்றிபெற்று, தனது முதல்வர் பதவியைத் தக்கவைத்திருக்கிறார். நாடுமுழுவதும் உற்று கவனிக்கப்பட்டு, பெரும் பேசுபொருளாக மாறியிருக்கும் இந்த வெற்றியோடு, மம்தா பானர்ஜி அரசியலில் காலடி எடுத்துவைத்தது முதல் இப்போது வரையில் அவர் கடந்து வந்த வெற்றிப் பாதையைப் பற்றி முழுமையாக இக்கட்டுரையில் பார்ப்போம்.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, மேற்கு வங்கத்தின் ஆட்சி அரசியலை மூன்று சகாப்தமாக பிரிக்கலாம். முதல் சகாப்தத்தை எழுதியது காங்கிரஸ் கட்சி. அதை முடிவுக்கு கொண்டுவந்து, இரண்டாவது சகாப்தத்தை எழுதியது கம்யூனிஸ்ட் கட்சி. இந்த இரண்டு கட்சிகளையும் தவிர்த்துவிட்டு தற்போது மூன்றாவது சகாப்தத்தை எழுதிக்கொண்டிருப்பது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

மம்தா பானர்ஜி

திரிணாமுல் என்ற வங்கச் சொல்லுக்கு அடித்தட்டு மக்கள் என்று பொருள். அதைப்போலவே, யாருடைய பின்புலமும் இல்லாமல், அரசியலில் அடித்தட்டிலிருந்து வளர்ந்து வந்தவர்தான் மம்தா பானர்ஜி. 1955-ம் ஆண்டு கொல்கத்தாவின், அஸ்ரா பகுதியில் பிறந்த மம்தா, 1970-ம் ஆண்டு தனது 15-வது வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் 17 வயதில் தந்தையை இழந்த அவர், ஒருபக்கம் கல்வி மற்றொரு பக்கம் அரசியல் என இரண்டிலும் தன் கவனத்தைக் குவித்தார். வரலாறு, சட்டம் இரண்டு படிப்புகளிலும் பட்டம் பெற்றவர், போராட்டக் களத்தில் அரசியலைக் கற்றுக்கொண்டார்.

1975-ம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம், எமர்ஜென்சியை அறிவித்தபோது அதற்கு நாடுமுழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, சுதந்திரப் போராட்ட வீரரும், சோசலிஸ்ட் அரசியல் தலைவருமான, `லோக் நாயக்' ஜெயபிரகாஷ் நாராயணன் (ஜே.பி) எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்துப் பல்வேறு மாநிலங்களுக்குப் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். அப்படி, மேற்குவங்கத்தின் கொல்கத்தா நகருக்கு ஜே.பி. நுழைந்தபோது, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாதி வழியிலேயே காங்கிரஸ் தொண்டர்களால் வழிமறிக்கப்படுகிறார்.

இளம் வயதில் மம்தா

அப்போது, அந்தப் போராட்டத்திலும் 20-வயது இளம்பெண்ணாக கலந்துகொண்ட மம்தா பானர்ஜி, ஜெயபிரகாஷ் நாரயணனின் காரின் மீது ஏறி நின்று நடனமாடி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். மம்தாவின் இந்த வித்தியாசமான போராட்டம் லோக்கல் மீடியாக்களில் வைரல் செய்தியாகப் பரவ, உள்ளூர் தலைவர்கள் முதல் காங்கிரஸ் தலைமை வரை கவனம் பெற்றார். விளைவு, மாநில மகிளா காங்கிரஸ் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

மம்தா பானர்ஜி

1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, டிசம்பர் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடுமுழுவதும் காங்கிரஸ் அனுதாப அலை வீசியது. அந்தத் தேர்தலில் போட்டியிட முதல் முறையாக மம்தாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஜாதவ்பூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை எதிர்த்து மம்தா போட்டியிடுகிறார். சோம்நாத் சாட்டர்ஜி இதுவரை 10 முறை தேர்தலில் போட்டியிட்டு 9 முறை நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தவர். ஒரே ஒரு முறைதான் தோற்றிருக்கிறார். ஆம், அவரைத் தோற்கடித்தவர் இளம்பெண்ணான மம்தா! இந்த அபார வெற்றியின் மூலம், தனது 29-ம் வயதில் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார்.

ராஜீவ்காந்தி பிரதமரான பிறகு போஃபர்ஸ் ஊழல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கின. நாடுமுழுவதும் காங்கிரஸ் எதிர்ப்பு அலை வீசிட 1989-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட மம்தா தோல்வியடைந்தார். தேர்தலில் தோற்றாலும், கம்யூனிஸ்ட் ஆட்சி எதிர்ப்பைக் கைவிடாத மம்தா, தொடர்ந்து தனது போராட்ட வேலைகளில் ஈடுபடத்தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த சிபிஎம் தொண்டர்கள், 1991-ம் ஆண்டு நடந்த பந்த் ஒன்றின்போது, மம்தா பானர்ஜியை குறிவைத்துத் தாக்கினர். இதில் மம்தாவின் மண்டை உடைந்தது. ஆனாலும் அதை பொருட்படுத்தாத மம்தா, தலையில் கட்டுடன் மீண்டும் போராட்டத்தில் இறங்கினார்.

மம்தா பானர்ஜி

1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி மரணத்திற்கு பின்பு நடைபெற்ற தேர்தலில், கொல்கத்தா தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மம்தா வெற்றிபெற்றார். மத்தியில் நரசிம்ம ராவ் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க, மனிதவளம் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் மம்தா பானர்ஜி. அதேவேளையில், தனது தாய் நிலமான மேற்குவங்கத்தில் இந்த முறையும் ஜோதிபாசு தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே ஆட்சியில் அமர்ந்தது. இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முறைகேடு செய்துதான் ஆட்சியைக் கைப்பற்றியது என குற்றம் சுமத்திய மம்தா, வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படத்தையும் இணைக்க வேண்டும் எனக்கோரி, ரைட்டர்ஸ் கோட்டையை நோக்கிப் பேரணி நடத்தினார். இந்தப் பேரணியை காவல்துறையைக் கொண்டு அடக்கியது சிபிஎம் கட்சி. காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்ட மம்தா பானர்ஜி, சுயநினைவை இழந்து சாலையிலேயே சுருண்டு விழுந்தார். இந்த கலவரத்தில் மொத்தம் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி களம்கண்ட அனைத்து போராட்டங்களும், அவர் மீதான தாக்குதல்களும் அவருக்கு காங்கிரஸ் கட்சியின் அடையாளத்தையும் தாண்டி, `மம்தா' என்ற ஆளுமையை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது. மம்தாவின் தனிப்பட்ட வளர்ச்சி, மக்களிடம் பெருகும் ஆதரவு மற்றும் மம்தாவின் தன்னிச்சையான அதிரடி செயல்பாடுகளால் காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல் உருவானது. பொதுவெளியில் ஆதரவு என்றாலும், சொந்த கட்சிக்குள் எதிர்ப்பையே சந்தித்தார் மம்தா. அந்த எதிர்ப்பு இறுதியில் அவரை கட்சியை விட்டே வெளியேற்றும் அளவுக்கு வளர்ந்தது. 1997-ம் ஆண்டு காங்கிரஸை விட்டு நிரந்தரமாக நீக்கப்பட்டார் மம்தா பானர்ஜி.

காங்கிரஸின் இந்த முடிவு மம்தாவை முடக்கிப்போடுவதற்கு பதிலாக, அவரை சுதந்திரமாக விடுவித்ததுபோல அமைந்தது. 1998-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதுக்கட்சித் தொடங்கி, தனக்கென ஒரு பட்டாளத்துடன் தனிநடை போட்டார் மம்தா பானர்ஜி. கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்த காங்கிரஸில் இருந்து செயல்பட்ட மம்தா, காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட பின், காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சி போன்றுதான் என குற்றம் சுமத்தினார். இரண்டையும் ஒரே புள்ளியில் வைத்து வீழ்த்த, பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக அமைச்சரவையில் ரயில்வே துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர், பல்வேறு புதிய திட்டங்களை தனது ரயில்வே துறையில் கொண்டுவந்து, செயல்படுத்தினார்.

Also Read: வழிவிடும் காங். ‘வியூகம்' - மத்தியில் பாஜக-வுக்கு எதிரான தலைவராக உருவெடுக்கிறாரா மம்தா?

திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக

அதன்பின்னர், பாஜகவுடன் களம்கண்ட அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர் சரிவையே சந்தித்தார். மேற்குவங்கத்தில் கால்நூற்றாண்டுகளைக் கடந்து, 2000 மற்றும் 2006-ம் ஆண்டு தேர்தலிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் இம்முறை வயதுமுதிர்வு காரணமாக 5 முறை முதல்வராக இருந்த ஜோதிபாசு, அரசியல் ஓய்வு பெறவே, புத்ததேவ் பட்டாச்சார்யா இருமுறையும் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

புத்ததேவ் பட்டாச்சார்யா

கம்யூனிஸ்ட் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றக் காத்திருந்த மம்தா, சிங்கூர் மக்களின் போராட்டத்தைக் கையிலெடுத்தார். 2006-ம் ஆண்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்கூர் நகரத்தில், கார் தொழிற்சாலை ஒன்று அமைப்பதற்காக, சுமார் 997 ஏக்கர் விவசாய விளைநிலங்களை டாடா நிறுவனத்திடம் தாரைவார்த்துக் கொடுத்தார்.

டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ்

Also Read: “மோடிக்கு எதிராக மம்தா..!” - கிஷோரின் கில்லாடி அரசியல் எடுபடுமா?

இதனால் வெகுண்டெழுந்த விவசாய மக்கள், அரசின் முடிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, அவர்கள் இழந்த நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனக்கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார் மம்தா பானர்ஜி. சுமார் 26 நாட்கள் நீடித்த இந்தப் போராட்டத்தால், மொத்த மாநிலமே அதிர்ந்தது. இதன் விளைவாக, 2008-ம் ஆண்டில் டாடா நிறுவனம் தனது திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, குஜராத் பக்கம் கரை ஒதுங்கியது.

இதிலும் பாடம் கற்கவில்லை புத்ததேவ் பட்டாச்சார்யா. 2007-ம் ஆண்டு கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் கிராமத்தில், சலீம் குரூப் எனும் இந்தோனேசிய நிறுவனம், கெமிக்கல் தொழிற்சாலை அமைப்பதற்காக 14,500 ஏக்கர் விவசாய நிலங்களை, வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியது புத்ததேவ் பட்டாச்சார்யா அரசு. இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள் மிகத்தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 4,000 காவலர்களை நந்திகிராமுக்கு அனுப்பி போராட்டத்தை கட்டுப்படுத்திய அரசு, 14 பேரை சுட்டுக்கொன்றது. இதனைக் கண்டித்து, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்து வழிநடத்தியது.

மம்தா பானர்ஜி

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் சிபிஎம் கட்சிக்கு பெரும் அவப்பெயர் உண்டானது. பாட்டாளி வர்க்கம், விவசாயிகள் நலன் என்ற அடிப்படையில் விளிம்புநிலை மக்களுக்காக உருவான கம்யூனிஸ்ட் கட்சியே, கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக, முதலாளிகள் நலனை முன்வைத்து செயல்பட்டதை அறிந்து மேற்குவங்க மக்கள், ஏமாற்றத்தைப் பொறுக்க முடியாமல் அதிருப்தியில் உறைந்தனர். கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக செயல்பட்ட சிபிஎம் கட்சியின் மீதான மக்களின் கோபத்தை, எதிர்ப்பை, மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய திரிணாமுல் காங்கிரஸ் தங்கள் பக்கம் திருப்பிக்கொண்டது. மக்கள் மத்தியில் ஒரு போராளியாக செல்வாக்கு பெறத்தொடங்கினார் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்க முதல்வர் மம்தா

Also Read: காங்கிரஸ், மம்தா தேசிய அரசியலில் பா.ஜ.க-வை வீழ்த்தும் வல்லமை யாரிடமிருக்கிறது? - ஓர் அலசல்!

மேற்கு வங்க மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்த இந்த சம்பவங்கள் அனைத்தும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எதிரொளித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக இருந்த மேற்கு வங்கம், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் வசம் சென்றது. கூட்டணியுடன் 227 இடங்களை வென்ற மம்தா, தனித்து 184 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். சுமார், 34 ஆண்டுகால சிபிஎம் ஆட்சிக்கு முடிவுரை எழுதி, சபதமேற்றபடியே புதிய முதல்வராகக் கோட்டையில் கொடியேற்றினார் மம்தா பானர்ஜி.

பல்வேறு சர்ச்சைகள், ஊழல் புகார்கள், மத்திய அரசின் அழுத்தங்கள் என அத்தனைத் தடைகளையும் தாண்டி, 2011, 2016 மற்றும் 2021 என அடுத்தடுத்த மூன்று சட்ட மன்றத்தேர்தல்களிலும் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தார் மம்தா பானர்ஜி.

மம்தா பானர்ஜி

2021 சட்டமன்றத் தேர்தலில், மேற்குவங்கத்தின் மொத்தமுள்ள 293 தொகுதிகளில் 213 தொகுதிகளைக் கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியைப்பிடித்தது. இருந்தபோதும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுவேந்து அதிகாரியிடம் மிகக்குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த நிலையிலேயே முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் மம்தா. பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும், அப்போதுதான் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும் என்ற கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.

மம்தா பானர்ஜி

எனவே, மம்தா போட்டியிடுவதற்காக, பவானிப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சுபன்தீப் சந்தோபத்யாயே தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் போட்டியிடாத சூழலில், கம்யூனிஸ்ட், பாஜக கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட மம்தா 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றிருக்கிறார்.

காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், மூன்றாவது அணி அமையுமானால், அதில் பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜி இருப்பார் என்ற அரசியல் வல்லுநர்களின் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக இந்த வெற்றி அமைந்திருக்கிறது. இருப்பினும், மூன்றாவது அணி அமைப்பாரா இல்லை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.



source https://www.vikatan.com/news/politics/story-about-west-bengal-chief-minister-mamata-banerjees-political-journey

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக