சசிகலாவின் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகளில் தினகரனுக்கு விருப்பமில்லை என்கிற செய்திகள் வெளியாகிவந்த நிலையில், ``சசிகலா சுற்றுப்பயணம் செல்லும்போது அமமுக நிர்வாகிகள் அவருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பார்கள்'' எனும் டிடிவி தினகரனின் இந்தக் கருத்து அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களை உண்டாக்கியிருக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி, சசிகலா பெங்களூரிலிருந்து சென்னை வந்தபோது, தமிழக எல்லையான ஓசூரிலிருந்து சென்னைவரை அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதில், அமமுக நிர்வாகிகளின் பங்கு மிக அதிகம். அதனால், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சமாதியில் அஞ்சலி செலுத்த முடிவெடுத்தபோதே அதேயளவு கூட்டத்தைக் கூட்டவேண்டும் என தன் ஆதரவாளர்களுக்கு குறிப்பாக அமமுக நிர்வாகிகளை அழைத்து உத்தரவு பிறப்பித்திருந்தார் சசிகலா. ஆனால், 16-ம் தேதி சசிகலா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தியபோது பெரிய அளவில் கூட்டம் கூடவில்லை.
அதற்கு அடுத்த நாளான, அக்டோபர் 17-ம் தேதி, தி.நகரிலுள்ள எம்.ஜி.ஆரின் நினைவில்லத்துக்குச் சென்ற சசிகலா, அ.தி.மு.க கொடியை ஏற்றியும், ‘அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா’ என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டைத் திறந்தும் வைத்தார். அப்போது முதல்நாள் கூடிய கூட்டத்தில் பத்தில் ஒரு பங்கு அளவு கூட்டம்தான் கூடியது. ராமாவரம் தோட்டத்தில் நடந்த விழாவிலும் குறைவான அளவிலேயே தொண்டர்கள் கலந்துகொண்டனர். டிடிவி தினகரனிடமிருந்து, அமமுக நிர்வாகிகளுக்கு தெளிவானதொரு உத்தரவு வராததால், பல அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை, அதனால்தான் கூட்டம் எதிர்பார்த்தளவு இல்லை என்கிற தகவல்கள் அப்போது வெளியாகின. அதுமட்டுமல்லாது, சசிகலாவின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகளில் தினகரனுக்கு விருப்பம் இல்லை என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், தனியார் பத்திரிகை ஒன்றுக்கு தினகரன் அளித்த பேட்டியில்,
``சசிகலா எந்த ஊருக்கு எப்போது சென்றாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தொண்டர்கள் அவரை வரவேற்பார்கள். சசிகலா வெளிமாவட்டங்களுக்கு செல்லும் போது அவரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் சந்தித்து பேசுவார்கள்'' எனப் பதிலளித்துள்ளார். சசிகலா அடுத்த வாரம், தஞ்சை, மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செல்லவிருக்கும் நிலையில் இது அதிமுகவில் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவரின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம்,
Also Read: சசிகலா அதிமுக-வில் இணைப்பு?! `கழகத் தலைமை முடிவெடுக்கும்!' - ஓ.பி.எஸ்-ன் புதிய ட்விஸ்ட்
`` நிச்சயமாக பெரியளவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதே உண்மை. கடந்த சட்டமன்றத் தேர்தல் தொடங்கி தற்போது நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தல் வரை, அமமுக நிர்வாகிகள் தங்கள் கைக்காசைப் போட்டுத்தான் செலவு செய்து வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு கோடிக்கும் அதிகமாக செலவு செய்து அனைவரும் களைப்படைந்து விட்டனர். இனிமேல் நிர்வாகிகள் யாரும் செலவு செய்வதற்குத் தயாராக இல்லை. அதுமட்டுமல்ல, சசிகலா சுற்றுப்பயணம் செல்லும்போது, அந்தந்தப்பகுதி அமமுக நிர்வாகிகள் சென்று சந்திப்பதால் ஒரு பயனும் உண்டாகாது. அதிமுகவிலும் கீழ் மட்ட நிர்வாகிகளில் ஒருசிலர் வேண்டுமானால் சின்னம்மாவை வந்து சந்திக்கலாம்.
அதிமுகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் வந்து சின்னம்மாவைச் சந்திக்காதவரை, சின்னம்மாவின் பக்கம் வராதவரை எந்தத் தாக்கமும் ஏற்படப் போவதில்லை. மாவட்டச் செயலாளர்கள் கூட சின்னம்மா பக்கம் வராதபோது எப்படி மாற்றம் உண்டாகும் என எதிர்பார்க்கமுடியும். அவர்களாக வருவார்கள் என எவ்வளவு ஆண்டுகாலம் காத்திருந்தாலும் எதுவும் நடக்கப்போவதில்லை. சின்னம்மா நேரடியாக களத்தில் இறங்கி இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் பேசி, அவர்களை தனக்கு ஆதரவாகக் கொண்டுவரவேண்டும். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் அவர் எடுப்பதாகத் தெரியவில்லை. இந்தச் சுற்றுப்பயணத்திலாவது அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்யவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு'' என்கிறார் அவர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-sasikalas-tour-with-ammk-support
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக