Ad

திங்கள், 25 அக்டோபர், 2021

``அரசியலே வேண்டாம் என்றுதான் எங்கள் குடும்பம் ஒதுங்கியிருக்கிறது!''- சொல்கிறார் எம்.ஜி.ஆர் பேரன்

பொன்விழா கொண்டாடிவரும் அ.தி.மு.க-வினர், சசிகலா ஆதரவு - எதிர்ப்பு என இரு அணிகளாக பிரிந்துநின்று மோதிக்கொள்கின்றனர். அண்மையில், எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் 'அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா' என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டினை சசிகலா திறந்துவைக்க... இரு அணியினருக்கிடையேயான மோதல் உச்சம் தொட்டு வருகிறது.

இதற்கிடையே, இந்த விவகாரம் எம்.ஜி.ஆர் குடும்ப வாரிசுகளுக்கிடையேயும் முட்டல் மோதலை ஏற்படுத்தியிருக்கிறது. ``சசிகலா அரசியல் செய்வதற்கு எம்.ஜி.ஆர் குடும்பத்தினரே துணை போயிருப்பது வருந்தத்தக்கது'' என எம்.ஜி.ஆர் பேரனான `ஜூனியர் எம்.ஜி.ஆர்' என்கிற ராமச்சந்திரன் விமர்சனம் செய்திருக்கிறார். இந்த விமர்சனத்துக்குப் பதில் கொடுத்த எம்.ஜி.ஆர் நினைவு இல்ல நிர்வாகியும் எம்.ஜி.ஆரின் மற்றொரு பேரனுமாகிய குமார் ராஜேந்திரன், ``சசிகலா, நினைவு இல்லத்துக்கு வந்து சென்றதில் எந்தவித அரசியலும் இல்லை'' என மறுத்திருக்கிறார். இந்த நிலையில், குமார் ராஜேந்திரனிடம் பேசினேன்....

எடப்பாடி பழனிசாமி - சசிகலா

``அ.தி.மு.க- வுக்கும் சசிகலாவுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஆனால், நீங்களோ `அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா' என கல்வெட்டு வைக்க அனுமதிக்கிறீர்களே எப்படி?''

(சிரிக்கிறார்) ``அவர் அப்படி... நான் இப்படி அவ்வளவுதான்! கல்வெட்டு வைப்பற்கு முன்னரே, `சசிகலா அ.தி.மு.க பொதுச்செயலாளர் அல்ல' என்பதற்கான நீதிமன்ற ஆவணத்தை அவர்கள் காட்டியிருக்க வேண்டும். அல்லது `நீங்கள் இப்படி கல்வெட்டு வைக்கக்கூடாது' என்று சசிகலாவிடமாவது சொல்லியிருக்க வேண்டும். இப்படி எதையுமே அவர்கள் செய்யவில்லையே. இந்த நிலையில், இப்போது கல்வெட்டு வைத்தாகிவிட்டது... இனி என்ன செய்ய முடியும்?''

``ஆனால், எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்துக்கு வந்து அடிக்கல் நாட்டிய சசிகலாவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறாரே?''

``அண்ணன் ஜெயக்குமார், இதே எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தை எப்போது வந்து பார்த்தார்? எனக்கு நினைவு தெரிந்து அவர் இங்கு வரவேயில்லை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர்தான் அவரே கட்சியில் பொறுப்புக்கு வந்திருப்பார்.

எம்.ஜி.ஆர் நினைவு இல்ல நிர்வாகி என்ற முறையில், எல்லா தலைவர்களையுமே நினைவு இல்லத்துக்கு வருமாறு அழைப்பேன். ஆனால், எல்லோரும் வருவதில்லை. உதாரணமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைக்கூட இல்லம் வருமாறு அழைத்திருந்தேன். இருவருமே வரவில்லை. ஆனால், அமைச்சர் பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் என இருவரையும் அனுப்பிவைத்தார் எடப்பாடி பழனிசாமி!''

'ஜூனியர் எம்.ஜி.ஆர்' ராமச்சந்திரன்

``உங்கள் சகோதரர் ராமச்சந்திரன், அ.தி.மு.க-வில் இருக்கிறார். நீங்களோ சசிகலா ஆதரவாளராக இருக்கிறீர்கள். எனவே உங்களிருவரிடையே....''

(கேள்வியை இடைமறித்துப் பேசுகிறார்) ``நான் யாருடைய ஆதரவாளரும் கிடையாது. அ.தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினரும் கிடையாது. அரசியலே வேண்டாம் என்றுதான் நானும் என் குடும்பத்தினரும் ஒதுங்கியிருக்கிறோம். அதேசமயம், எம்.ஜி.ஆர் குடும்ப வாரிசாக, `எல்லோரும் வேண்டும்' என்று நினைப்பவன் நான். அதனால்தான் `எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்துக்கு வாருங்கள்' என்று இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்-ஸில் ஆரம்பித்து மு.க.ஸ்டாலின் வரை அனைவரையும் அழைத்திருக்கிறேன்.

அந்தவகையில், எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்துக்கு யார் வந்தாலும் அவர்களை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு சாதி, மதம், அரசியல் கட்சி என எந்தப் பாகுபாடும் கிடையாது!''

Also Read: சசிகலா அதிமுக-வில் இணைப்பு?! `கழகத் தலைமை முடிவெடுக்கும்!' - ஓ.பி.எஸ்-ன் புதிய ட்விஸ்ட்

``சசிகலாவை நீங்கள் அன்பு பாராட்டுவதன் பின்னணிதான் என்ன?''

``எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சிக்கு இது 50-வது ஆண்டுவிழா. கட்சியில் இல்லாத நானே இதனை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறேன். எங்களுடைய காவல் தெய்வம் எம்.ஜி.ஆரை எங்களோடு சேர்ந்து கொண்டாடுவதற்கு யார் வந்தாலும் மகிழ்ச்சியோடு வரவேற்போம். அந்த வகையில், எம்.ஜி.ஆர் நினைவு இல்லம், காது கேளாதோர் பள்ளிக்கு வருகை தரும் சசிகலாவையும் மகிழ்ச்சியோடு நாங்கள் வரவேற்கிறோம். மேலும், `என்னுடைய குழந்தைகளே இவர்கள்தான்' என்று சொல்லி இங்குள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வருடம்தோறும் பண்டிகை நாள்களில் இனிப்பு வழங்குகிறார். அவர்களோடு சரிசமமாக அமர்ந்து உணவு உண்கிறார். இவையெல்லாம்தான் காரணம்!''

எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்

``எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில், யார் வேண்டுமானாலும் கொடியேற்றி, அடிக்கல் நாட்ட முடியும் என்றால், நாளை கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் வந்தும் அடிக்கல் நாட்டிவிட்டுப் போய்விட முடியும்தானே என்று உங்கள் சகோதரர் `ஜூனியர் எம்.ஜி.ஆர்' ராமச்சந்திரன் கேட்டிருக்கிறாரே?''

(சிரிக்கிறார்) ``கம்யூனிஸ்ட் தலைவர்கள் நாகரிகம் தெரிந்தவர்கள். அவர்களுக்கென்று மிகப்பெரிய அலுவலகம் ஒன்றையும் இதே தி.நகர் பகுதியில்தான் வைத்திருக்கிறார்கள். அவர்கள் எப்படி மற்றவர்கள் இடத்துக்கு வந்து தங்கள் கட்சிக் கொடியை ஏற்றுவார்கள், அடிக்கல் நாட்டுவார்கள்?

எம்.ஜி.ஆர் மீது பற்று கொண்டவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களானாலும் நினைவு இல்லத்துக்கு வந்து சுற்றிப் பார்க்கலாம். அவர்களை நாங்களும் அன்போடு வரவேற்போம். ஏனெனில், இது எல்லோரும் வந்து சுற்றிப்பார்க்க வேண்டும் என்பதற்காகத்தானே இருக்கிறது.''

Also Read: "கையெழுத்து போட மாட்டேன்" - முரண்டு பிடித்த பன்னீர்

``அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் குடும்ப வாரிசுகளுக்கு உரிய அங்கீகாரம் அளிப்பதில்லை என அண்மையில் கூறியிருக்கிறீர்கள். உங்கள் தம்பியான `ஜூனியர் எம்.ஜி.ஆர்' என்ற ராமச்சந்திரனுக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதுதானே?''

``ஆனால், அவர் விரும்பிக் கேட்ட எம்.எல்.ஏ சீட் கொடுக்கப்படவில்லைதானே...!அப்படிக் கொடுக்கப்பட்டிருந்தால், நிச்சயம் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியிருப்பார் ராமச்சந்திரன். அந்தளவு கட்சிக்காக உழைத்திருக்கிறார். தனது சொந்தப் பணத்தை செலவு செய்து நிறைய நல்லதும் செய்திருக்கிறார்.''

எம்.ஜி.ஆர்

``எம்.ஜி.ஆர் குடும்ப வாரிசு நீங்கள். அ.தி.மு.க-வை வழிநடத்த இப்போதைய தலைவர்களில் யார் பொருத்தமானவர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?''

``எம்.ஜி.ஆரை நேசிக்கின்ற மக்கள் அனைவரும் எம்.ஜி.ஆரின் வாரிசுகள்தான். தன்னலமற்று, மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைக்கிற தலைவர்தான் அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும். அப்படிப்பட்ட தலைமை யாரென்பதை அந்தக் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களே முடிவு செய்ய வேண்டும். மற்றபடி இதுகுறித்த அரசியல் விழிப்புணர்வு எல்லாம் என்னிடம் இல்லை! ஏனெனில், என்னுடைய சின்ன வயதிலேயே, என் பாட்டி ஜானகி அம்மாள், `அரசியல் வேண்டாம்; அறம் செய்' என்று சொல்லிச்சொல்லி என்னை வளர்த்துவிட்டார்.''



source https://www.vikatan.com/government-and-politics/politics/mgrs-grandson-interview-about-the-sasikalas-visit-to-mgr-memorial-house

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக