Ad

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

இளங்கோவனின் சகோதரி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை! - கரூர் ரெய்டு நிலவரம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் உள்ள முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு, தொழில் நிறுவனங்கள் மற்றும் அவரது ஆதரவாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில், ஏராளமான கணக்கில் வராத சொத்துகளுக்கான ஆதாரங்கள், பத்திரங்கள் கைப்பற்றியதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், அந்த ஆதாரங்களை வைத்து, அதனோடு தொடர்புடையவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையம் மாநில கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் மாவட்ட அ.தி.மு.க பேரவையின் செயலாளருமான இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க பிரமுகர் இளங்கோவின் சகோதரி இந்திராணி கலியபெருமாள், கரூர் மாவட்டத்தில் உள்ள லாலாபேட்டையில் வசித்து வருகிறார்.

Also Read: 'காற்றில் பறந்தது சமூகநீதி' ; அண்ணாமலை Vs அமைச்சர் கயல்விழி! -பரபரக்கும் அடுத்த ட்விட்டர் பஞ்சாயத்து

இந்திராணி வீட்டில் சோதனை

இந்திராணியின் கணவர் கலியபெருமாள் உயிரிழந்த நிலையில், தனது மகன் கிருஷ்ணமூர்த்தியுடன் லாலாபேட்டை பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவரது வீட்டில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி நாகராஜ் தலைமையில், ஐந்துக்கும் மேற்பட்ட போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், இந்திராணியின் சொத்து விபரங்களை சரி பார்ப்பதற்காக, வருவாய் துறையினரை அழைத்து வந்து, கணினி மூலம் சொத்து விவரங்கள் சரிபார்க்கப்பட்டது. இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தெரிகிறது. லாலாபேட்டை பகுதியில் வசிக்கும், இளங்கோவனின் சகோதரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/controversy/article-about-raid-at-salem-elangovans-sister-house

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக