திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் கடந்த 2- ம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்திற்குத் தனக்கு அழைப்பு விடுக்காதது குறித்து, அதிமுகவைச் சேர்ந்த கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழுத் தலைவர் சிவகுமார் கூட்டத்தில் கேள்வி எழுப்பியபோது, திமுகவைச் சேர்ந்த ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவி உஷாவின் கணவர் ஸ்ரீதர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், சிவகுமாரைத் தாக்கி கீழே தள்ளியே விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுகவினர், ஒன்றியக்குழு தலைவர் சிவகுமாரைத் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி சர்ச்சையைக் கிளப்பியது.
இருதரப்பு மோதலால் கிராமசபைக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒன்றியக்குழுத் தலைவர் சிவகுமார் தன்னைத் தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவி உஷாவின் கணவர் ஸ்ரீதர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதியிலேயே நிறுத்தப்பட்ட கிராமசபைக் கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
சிவகுமார் தனது புகார் மனுவில், ``கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈகுவார்பாளையம் ஊராட்சியில் கடந்த 2-ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் கிராமசபைக் கூட்டத்திற்கு முறைப்படி எனக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும். ஆனால், திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவி உஷா , வேண்டுமென்றே திட்டமிட்டு என்னைக் கூட்டத்திற்கு அழைக்காமல் புறக்கணித்தார். அதுகுறித்து நான் கேள்வி எழுப்பியபோது, என்னுடைய சாதியைக் குறிப்பிட்டு என்னை உஷா அவதூறாக ஒருமையில் திட்டினார். பதிலுக்கு நானும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தேன். அப்போது, உஷாவின் கணவர் ஸ்ரீதர் கூட்டத்திலிருந்த திமுகவினருடன் என்னைப் பாய்ந்து மார்பில் தாக்கிக் கீழே தள்ளினார். அவர்கள் தொடர்ந்து, என்னைத் தாக்க முயன்றபோது எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தடுத்து என்னைக் காப்பாற்றி அழைத்துச் சென்றனர்.
திமுகவினரின் இந்த கொலைவெறி தாக்குதலால் கிராமசபைக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, கிராம மக்கள் தங்கள் கோரிக்கைகளைச் சபையில் வைக்க முடியாமல் போனது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக உடனடியாக நான் பாதிரிவேடு காவல்நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவி உஷா மற்றும் அவரது கணவர் ஸ்ரீதர் ஆகியோர்மீது புகார் அளித்தேன். ஆனால், போலீஸார் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டு என்னுடைய புகார் மனு மீது எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர். ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் ஸ்ரீதர், நான் ஒன்றியக்குழு தலைவராகப் பொறுப்பேற்ற நாள் முதற்கொண்டு இது நாள் வரை என்னை ஊராட்சி பணிகளை மேற்கொள்ள விடாமல்தடுத்து கொண்டும், சாதியைக் குறிப்பிட்டு அவதூறு பரப்பியும் வருகிறார். ஆளுங்கட்சி என்று கூறிக் கொண்டு அராஜகம் செய்து வரும் ஸ்ரீதரால், என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, ஸ்ரீதர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு கிராமசபைக் கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சிவகுமாரின் புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட பொன்னேரி வருவாய்க் கோட்டாட்சியர் செல்வம், விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். அதையடுத்து, சிவகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர். இரு தரப்பு மோதலால், ஈகுவார்பாளையம் ஊராட்சியில் பதற்ற நிலை நிலவுகிறது.
Also Read: `திமுக - அதிமுகவினர் மோதல்; கைகலப்பில் முடிந்த கிராமசபைக் கூட்டம்!' - நடந்தது என்ன?
source https://www.vikatan.com/news/politics/admk-chairman-lodged-a-complaint-against-dmk-panchayat-president
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக