பிரான்ஸ் நாட்டிலுள்ள கத்தோலிக்க திருச்சபைகளில் 1950 முதல் 2020 வரையில் மத குருமார்கள் மற்றும் சபை ஊழியர்களால் சுமார் 3.30 லட்சம் சிறார்கள் பாலியல் சீண்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பதாகவும், குறிப்பாக ஆண் சிறுவர்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. பிரெஞ்சு நிர்வாக அறிவியல் மையத்தின் தலைவரும், மாநில கவுன்சிலின் முன்னாள் தலைவருமான ஜீன்-மார்க் சாவ் தலைமையில் சுமார் இரண்டரை வருடங்களாக நடைபெற்ற இந்த 'சிறார் பாலியல் வதை' விசாரணையில், பிரான்ஸ் கத்தோலிக்க திருச்சபை மத குருக்கள் மற்றும் ஊழியர்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்ட சுமார் 6500 பேரிடம் விசாரணை மேற்கொண்டு, அதில் கிடைக்கப்பெற்ற தரவுகள் மற்றும் பத்திரிகை செய்திக்குறிப்புகள் உள்ளிட்டவரை கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 70 ஆண்டுகாலமாகப் பிரான்ஸ் கத்தோலிக்கத் திருச்சபைகளில் அரங்கேறிய இந்த பாலியல் குற்றங்கள் தொகுக்கப்பட்டு, அசோஸியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தால் நேற்று அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
Also Read: அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்... - மூன்றாம் இடத்தில் தமிழகம் - சிறுமிகள் பத்திரம்!
அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில், "பிரான்ஸ் நாட்டிலுள்ள கத்தோலிக்க திருச்சபைகளில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகளவில் நடைபெற்று வருவதாகவும், பாலியல் குற்றங்களைத் தடுக்க வேண்டிய திருச்சபை நிர்வாகம், குற்றம் புரிந்தவர்களுக்கு உறுதுணையாக இருந்து கொண்டு, நீண்ட காலமாக அத்தகைய குற்றங்களை வெளியில் சொல்லாமல் மூடி மறைத்து வருவதாகவும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் வந்து குவிந்த வண்ணமாக இருந்து வந்தன. பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து முறையாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர முடிவு செய்தோம். அதன்படி, விசாரணைக் குழு ஒன்றினை ஜீன்-மார்க் சாவ் தலைமையில் அமைத்தோம். முழுமையாக இரண்டரை ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் களப்பணியாற்றி தரவுகள் மற்றும் தகவல்களைச் சேகரித்தோம். பிரான்ஸ் கத்தோலிக்க திருச்சபைகளில் 1950-ம் ஆண்டு முதல் பதியப்பட்ட சிறார் பாலியல் குற்றங்கள் குறித்த விவரங்களை முழுமையாகச் சேகரித்தோம். அதற்கு, நீதிமன்றங்களிலும், காவல் நிலையங்களிலும் கத்தோலிக்க சபைகள் குறித்துப் பதியப்பட்ட பாலியல் புகார்களின் தரவுகளையும் பயன்படுத்தினோம். அதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட சுமார் 6,500 பேரிடம் தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும், விசாரணை மேற்கொண்டோம்.
குழுவின் விசாரணையில், கடந்த 70 ஆண்டுகளில் சுமார் 3.30 லட்சம் சிறுவர்கள் சபை ஊழியர்கள் மற்றும் மத குருமார்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. இந்த பாலியல் குற்றங்களில் 2900-லிருந்து சுமார் 3,200 பேர் ஈடுபட்டுள்ளனர். திருச்சபை ஊழியர்களில் தொடங்கி, மத குருமார்கள் வரை அனைவரும் இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இதில், அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், பாலியல் குற்றங்கள் புரிந்தவர்களில் மூன்றில் 2 பங்கு பேர் கத்தோலிக்க மத குருக்கள் என்பதுதான்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியாகி உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த அறிக்கையை கத்தோலிக்க திருச்சபைகளில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானவர்கள் வரவேற்றுள்ளனர். இதுதொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பினர் கூறுகையில், இத்தனை ஆண்டுகளாக மூடி மறைக்கப்பட்ட உண்மை தற்போது, வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதால் நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வாடிகன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பிரான்ஸ் கத்தோலிக்க திருச்சபைகளில் நடைபெற்றுள்ள பாலியல் குற்றங்கள் குறித்து போப் ஃபிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்களைக் கண்டு, பாதிக்கப்பட்டவர்களாக அவர் மனம் வருந்தினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/social-affairs/international/french-report-finds-over-300000-children-were-victims-of-sex-abuse-in-the-catholic-church
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக