Ad

திங்கள், 25 அக்டோபர், 2021

திருவாரூர்: பக்கத்து வீட்டுப்பெண்ணின் சதித்திட்டம்! -தனியே வசித்து வந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வீட்டில் தனியாக இருந்த வயதான பெண்மணியை அரிவாளால் கொடூரமாக தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை மர்ம நபர் ஒருவர், பறித்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேல முதல் தெருவில் வசித்து வருபவர் மாரியம்மாள்(60). இவரின் கணவர் சர்வானந்தம், 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவருடைய மகள், திருமணமாகி கணவர் வீட்டில் வசிப்பதால், மாரியம்மாள் மட்டும் இங்கு தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு 8 மணி அளவில் தெருவில் அதிகமாக ஆள் நடமாட்டம் இல்லாத தருணத்தில் மாரியம்மாளின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அரிவாளால் மாரியம்மாளை கொடூரமாக தாக்கி விட்டு அவரின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் எங்கோ தப்பி ஓடி மாயமாகியிருக்கிறார்.

அரிவாளால் வெட்டப்பட்டதால், உடலில் பயங்கர காயங்கள் ஏற்பட்டு, வலியினால் மாரியம்மாள் அலறியிருக்கிறார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து விடுகளில் வசிப்பவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, மாரியம்மாள் ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார். மர்ம நபர் அரிவாளால் கொடூரமாக தாக்கியதில், மாரியம்மாளின் தலை, காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர வெட்டுக்காயங்கள் இருந்திருக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் வெட்டுக்காயங்களுடன் கிடந்த மாரியம்மாளை மீட்டு மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கு மாரியம்மாளுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 4 பவுன் தங்க சங்கிலிக்காக, வயதான பெண்மணியை, கொஞ்சமும் இரக்கம் இல்லாமல், மர்ம கொடூரமாக தாக்கிய சம்பவம் இப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மாரியம்மாளை, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், மன்னார்குடி நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் உள்ளிட்டவர்கள் சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை கேட்டறிந்தனர். இந்த கொடூர தாக்குதல், சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக, மன்னார்குடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமையில் அடங்கிய டீம், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட அந்த மர்ம நபரை தேடியது.

Also Read: திருவாரூரில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்: தந்தையின் துக்கத்திற்கு சென்ற ஆசிரியை வீட்டில் துணிகரம்!

இந்நிலையில்தான் மன்னார்குடி மீனாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த, 26 வயது இளைஞரான கார்த்திக், அவருக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்படும் 37 வயதான ராணி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்துப் பேசும் காவல்துறையினர், ‘’மாரியம்மாளின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்தான் ராணி. இவர் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார். மாரியம்மாள் தனியாக வசித்து வருவதையும் தங்க சங்கிலி அணிந்திருப்பதையும் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த ராணி, தனது ஆண் நண்பரான கார்த்திக்குடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி, மாரியம்மாளை கொடூரமாக தாக்கிவிட்டு, தங்கசங்கிலியை பறித்துச் சென்றதாக” தெரிவித்தனர். நகையை பறித்து சென்ற கார்த்தி, தனது நண்பரான விக்னேஷிடம் மது போதையில் இதுகுறித்து உளறியிருக்கிறார். இதன் மூலமாகவே தகவல் வெளியில் கசிந்து காவல்துறையினரிடமும் கார்த்திக்கும் ராணியும் சிக்கியதாக சொல்லப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே, இதுபோன்ற பயங்கர கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இதற்கு காவல்துறையினர் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/women-attacked-for-chain-snatching-in-thiruvarur-two-arrested

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக