திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த எம்.ஜி.ஆர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் லக்ஷிதா (7). கடந்த மாதம் 27-ம் தேதி குமாரின் மகள் லக்ஷிதாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அப்போது, குமார் மற்றும் அவரது மனைவி இருவரும் தங்கள் மகளை பொன்னேரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்குக் காய்ச்சல் அதிகமாக இருந்ததால், ஊசி செலுத்திவிட்டு, மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீடு திரும்பிய சிறுமி லக்ஷிதாவிக்ரு மறுநாள் காலை ஒவ்வாமை காரணமாக உடல் முழுவதும் சிவந்து கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளன.
பதறிப்போன, சிறுமியின் பெற்றோர் அவரை தூக்கிக்கொண்டு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற அதே தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருக்கின்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுமிக்குச் சிகிச்சை அளிக்க மறுத்து, அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறியிருக்கின்றனர். அதனால், சிறுமியின் பெற்றோரும் அவரை அழைத்துக் கொண்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கின்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடல்நிலை மோசமாக இருப்பதாகக்கூறி, முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி லக்ஷிதா, நேற்று முன்தினம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அதையடுத்து, சிறுமியின் மரணத்திற்கு தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சைதான் காரணம் என்று கூறி, நேற்று முன்தினம் இரவு சிறுமியின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது, போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து களைந்து செல்ல மருத்துவமனை ஊழியர்கள் வலியுறுத்தியதால், ஆத்திரமடைந்தவர்கள் மருத்துவமனை மீது கல் வீசித் தாக்குதல் நடத்தினார்கள்.
Also Read: வயிற்றுவலியால் உயிரிழப்பு - தவறான சிகிச்சை காரணமா? சிவகங்கையில் தொடரும் மரணங்கள்
அதில், தனியார் மருத்துவமனையின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொன்னேரி போலீஸார், சிறுமி மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/girl-child-died-due-to-the-wrong-treatment-given-by-the-private-hospital
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக