‘‘விஜயபாஸ்கர் தொடர்பான 50 இடங்களில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர், அவருக்கு நெருக்கமான இன்னும் சிலரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்’’ என்ற விமர்சனக் குரல்கள் புதுக்கோட்டை வட்டாரத்திலிருந்து கேட்கின்றன. அவர்களிடம் பேசியபோது, ‘‘விஜயபாஸ்கரின் ஆஸ்தான நண்பர்கள் குரூப்பில் ‘சேட் என்ற அப்துல் ரகுமான்’ வீட்டைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, வாக்காளர்களுக்குப் பட்டுவாடா விஷயங்களைக் கவனித்துக்கொண்டவர் மருத்துவத் துறையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி பெயர்கொண்ட ஒருவர்தான். விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் இவரது குடும்பத்தினரும் உறவினர்களும் மருத்துவத்துறைப் பணியில் இணைந்திருக்கிறார்கள். இவரின் சொத்து மதிப்பும் கணிசமாக உயர்ந்திருக்கிறது.
புதுக்கோட்டை எஸ்.பி அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர் ஒருவர், அவரின் நம்பிக்கைக்குரியவராக அனைத்து விஷயங்களிலும் செயல்பட்டு வந்தார். காவல்துறை தொடர்பான விஷயங்களை அவர்தான் கவனித்துவந்தார். அவரின் சொத்து மதிப்பும் கடந்த சில வருடங்களில்தான் அதிகரித்திருக்கிறது. வாசிப்புத் துறையில் பணியாற்றும் நவரத்தின ஊழியர் ஒருவர்தான் அமைச்சரின் விளம்பர விவகாரங்கள், அரசுத்துறை பணி நியமனங்கள், ரியல் எஸ்டேட் என அனைத்து விஷயங்களையும் கவனித்துவந்தார். இவர் கைகாட்டிய பலருக்கும் டெண்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பணி நியமனம், மாறுதல் எனப் புகுந்து விளையாடி தன் சொத்து மதிப்பை உயர்த்திக்கொண்டிருக்கிறார். காமெடி நடிகரின் பெயரைக்கொண்ட அரசு மருத்துவர் ஒருவரும் விஜயபாஸ்கருக்கு மிகவும் நெருக்கம். மருத்துவத்துறையில் பணி நியமனம், பணிமாறுதல் என நிறைய பசை பார்த்திருக்கிறார். சொந்த மருத்துவமனை, வீடு, நிலம் என்று கடந்த சில வருடங்களில் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. இப்படி விஜயபாஸ்கருக்கு நெருக்கமான இன்னும் சிலரின் வீடுகளில் சோதனை நடத்தியிருந்தால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கலாம்’’ என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் மறுவிசாரணை வேகமெடுத்துவருகிறது. குறிப்பாக, கனகராஜ் மரணத்தை மீண்டும் விசாரிக்க ஆரம்பித்திருப்பதால், முன்னாள் உச்சப் பிரமுகருக்கு நெருக்கமான சேலத்து பிரமுகர் வெடவெடத்துப் போயிருக்கிறாராம். இதேபோல் இந்த வழக்கில் தொடர்புடைய சஜ்ஜீவன் தரப்பு, தங்களுக்குச் சிக்கல் வந்தால் கோவை பிரமுகர் சொல்லித்தான் அனைத்தையும் செய்தோம் என்று போட்டுக்கொடுக்கத் தயாராகிவிட்டது என்கிறார்கள்.
ஏற்கெனவே கோவை பிரமுகர்மீது ஆளும் தரப்பு வழக்குகளைப் பாய்ச்சிவரும் நிலையில், இந்த விவகாரத்தில் தங்களுக்குச் சிக்கல் வந்துவிடக்கூடாது என இப்போதே சஜ்ஜீவன் தரப்பை தாஜா செய்ய ஆரம்பித்துள்ளதாம் கோவைத் தரப்பு.
தி.மு.க-வின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் ஆயிரம்விளக்கு உசேன். இவரின் உறவினர் ஒருவர் செய்தித்துறையின் அதிகாரியாக இருக்கிறார். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, அவருக்குக் கூட்டுறவு ஒன்றியத்தில் பணியிடம் தரப்பட்டது. ஆனால் கூட்டுறவு ஒன்றியத்தில், ‘எங்களுக்கு செய்தித்துறையின் ஆட்கள் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்கள்.
இதனால், கடந்த ஐந்து மாதங்களாக உசேன் உறவினருக்குப் புதிய பணியிடம் ஏதும் ஒதுக்கவில்லையாம். அதனால், எந்தத் துறையில் சம்பளம் வாங்குவது என்று புரியாமல் தவித்துவருகிறார். சமீபத்தில் முதல்வரைச் சந்தித்து தனது நிலையை எடுத்து சொன்னதும், புதிய பணியிடத்தை உடனே வழங்க முதல்வர் அலுவலகம் உத்தரவிட்டது. முதல்வர் அலுவலகம் சொல்லியும், இதுவரை அவருக்குப் புதிய பணியிடத்துக்கான ஆணை வழங்கப்படவில்லை. துறையில் அமைச்சரின் நிழலாக வலம்வரும் ராஜ நபரும், துறையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நபருமே இதற்கெல்லாம் காரணம் என்கிறார்கள். இந்த விவகாரம் எப்போது அம்பலமாகப்போகிறதோ?
ஒரு அமைச்சராகத் தலைமைச் செயலகத்தில் பணிகள் இருப்பதாலும், உடல்நலக்குறைவு காரணமாகவும் தொகுதிக்குள் அடிக்கடி வருவதை குறைத்துக்கொண்டிருக்கிறார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் குறிஞ்சிப்பாடி நிர்வாகி ஒருவர், தொகுதிக்குள் எம்.ஆர்.கே இல்லாத நேரங்களில் அமைச்சராகவே மாறி வலம்வருகிறாராம். குறிப்பாக, வேளாண்துறை அதிகாரிகளைக் கண்டபடி இடமாற்றம் செய்துவிட்டு, மீண்டும் பழைய இடத்தைக் கேட்டு வருபவர்களிடம் பேரங்களைக் கச்சிமாக முடித்துவிடுகிறாராம்.
தி.மு.க-வில் காலியாக உள்ள நகர மற்றும் ஊரகப் பதவிகளுக்கும் ஆட்களை நியமிக்கவில்லை. ‘‘கலெக்ஷன் கை மாறிவிடும் என்ற காரணத்தால்தான், தொகுதியில் முக்கிய பதவிகளுக்கு ஆட்களை நியமிக்காமல், அனைத்தையும் விழுங்கி ஏப்பம் விடுகிறார்’’ என்று புலம்புகிறார்கள் கட்சி நிர்வாகிகள்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளராக இருந்த சந்திரசேகர், அக்டோபர் 11-ம் தேதி விஷ மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் நாமக்கல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: மிஸ்டர் கழுகு: ‘அண்ணாத்த’ படத்துக்கு அட்வான்ஸ்... அரண்டுபோன தியேட்டர் உரிமையாளர்கள்!
மணியான முன்னாள் அமைச்சரின் தீவிர ஆதரவாளராக வலம்வந்த சந்திரசேகர், சுமார் 2 கோடி ரூபாய் கடனில் சிக்கித்தவித்து வந்துள்ளார். இதை மணியான முன்னாள் அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றபோது, ‘நான் ஏதாவது செய்து தர்றேன். கவலைப்படாத!’ என்று சொன்னதாகவும், அதன்பிறகு அவர் சந்திரசேகரைச் சந்திப்பதையே தவிர்த்ததாகவும் சொல்லப்படுகிறது. கடன் நெருக்கடி அதிகமானதோடு, மணியானவர் கைவிடவும் நொந்துபோன சந்திரசேகர், வேறு வழியில்லாமல் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். மணியானவர் கூடவே வலம்வந்த சந்திரசேகர், அவருக்காக நிறைய செலவு பண்ணியிருக்காரு. ஆனா, அவர் கடைசிவரை எதுவும் செய்யலை’’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முதல் ஆளாகச் சிக்கியவர், போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அவருடன் தொடர்புடைய 21 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. பல முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத 25 லட்சம் பணம் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், அவர்மீது வழக்கு பதிவு செய்தார்கள். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 30-ம் தேதி கிண்டியிலுள்ள அலுவலகத்தில் அவரை நேரில் ஆஜராகும்படி லஞ்ச ஒழிப்புத்த்துறை சம்மன் அனுப்பியது.
ஆனால், உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தைக் காரணம் காட்டி, ஆஜராவதிலிருந்து அப்போது விலக்கு கேட்டிருந்தார். இந்த நிலையில், வரும் 25-ம் தேதி கிண்டியிலுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகும்படி, இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியிருக்கிறார்கள். ‘இம்முறை என்ன காரணம் சொல்லி தப்பிப்பது?’ என்று சட்ட ஆலோசனை நடத்திவருகிறாராம்.‘ இந்த வழக்கிலிருந்து வெளிவந்தால் போதும். அதற்காக, கட்சி பதவியைக்கூட துறக்கத் தயார்’ என்று தனது ஆதரவாளர்களிடம் சொல்லிவருகிறாராம்.
உயர் மருத்துவச் சிகிச்சைக்கான போதிய வசதி வாய்ப்புகள் இல்லாத மலை மாவட்டமான நீலகிரியில், பெரும்பாலான மக்கள் அரசு மருத்துவமனையை நம்பியே இருக்கிறார்கள். ஊட்டிக்கு வரும் மருத்துவர்களில் பலரும் டிரான்ஸ்ஃபர் பெற்றுக்கொண்டு சென்றுவிடுவதால், நீலகிரியில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இந்த நிலையில், ஊட்டியில் இருக்கும் அரசு மருத்துவர்களில் சிலர், அரசு மருத்துவமனை எதிரிலேயே கிளினிக்குகளை நடத்திவருகிறார்களாம்.
ரவுண்ட்ஸ் என்ற பெயரில் தலையைக் காண்பித்துவிட்டு டூட்டி நேரத்திலும் க்ளினிக்கே கதியென இருக்கிறார்களாம். ‘‘எல்லா வேலையையும் எங்க தலையில கட்டிவிட்டு டாக்டர்கள் எஸ்கேப் ஆகிடுறாங்க. ஜி.ஹெச் எதிர்ல இருக்குற பில்டிங், ஊட்டி மணிக்கூண்டுகிட்ட இருக்குற ஒரு பில்டிங்... ரெண்டுக்கும் போனா மொத்த அரசாங்க டாக்டர்களையும் புடிச்சுடலாம்’’ என்று அரசு மருத்துவமனை செவிலியர்கள் புலம்புகிறார்கள்!
‘‘செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியைக் காலிசெய்யாமல் விடமாட்டேன்’’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கர்ஜித்திருக்கிறார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. அரவக்குறிச்சி தொகுதியில்தான் தோற்றதற்குப் பின்னால், செந்தில் பாலாஜியின் அரசியல் விளையாட்டுகளே இருக்கின்றன என நினைக்கும் அண்ணாமலை பழைய பகையை இன்னும் மறக்கவில்லை.
மின்சாரத்துறையில் கடந்த ஐந்து மாதங்களாக நடந்த அனைத்து பரிவர்த்தனைகளையும் தனக்கு நெருக்கமான அதிகாரிகள் மூலம் கையில் எடுத்துள்ள அண்ணாமலை, அதைத் தக்க சமயத்தில் வெளியிட்டு அதிர்ச்சியூட்டத் திட்டமிட்டிருக்கிறார். மற்றொருபுறம் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கப் பிரிவின் வழக்கையும் வேகப்படுத்த மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்துள்ளாராம்.
Also Read: சிபிஎம் மீது ஸ்டாலின் அதிருப்தி; உதயநிதிமீது வழக்கு பதிந்த இன்ஸ்பெக்டர்களுக்கு ஓலை கழுகார் அப்டேட்ஸ்
source https://www.vikatan.com/government-and-politics/politics/kazhugar-updates-vijayabaskar-and-annamalai-and-current-political-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக