மனக்கசப்பில் மாவட்டச் செயலாளர்கள்!
’அரசியலில் நேர்மை; பொது வாழ்வில் தூய்மை’ என்ற லட்சியத்துடன் செயல்பட்ட ம.தி.மு.க-வில் வாரிசு அடிப்படையில் துரை வைகோவை வலிந்து திணிப்பதாக கட்சி நிர்வாகிகள் சிலரே வருத்தம் தெரிவிக்கிறார்கள். கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கப்பட இருப்பதைப் புரிந்து கொண்டதன் காரணமாகவே கூட்டத்துக்குத் தலைமையேற்க வேண்டிய கட்சியின் அவைத்தலைவரான திருப்பூர் துரைசாமி கூட்டத்தைப் புறக்கணித்துள்ளார்.
Also Read: `இது வாரிசு அரசியல் இல்லை எனில், எது வாரிசு அரசியல்?!’ - துரை வைகோவுக்காக சமாளிக்கிறாரா வைகோ?
கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போதிலும், கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்கள் பலர் கட்சிக்குள் துரை வைகோ வருவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதன் காரணமாகவே புலவர் செவந்தியப்பன், புதுக்கோட்டை சந்திரசேகர், விருதுநகர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வழக்கறிஞர் அழகு சுந்தரம், கோவை ஈஸ்வரன் உள்ளிட்ட சீனியர்கள் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர். 20-க்கும் அதிகமான கட்சியின் சீனியர்கள் கூட்டத்துக்கு வரவில்லை என்பதில் இருந்தே வாரிசு அரசியல் தொடர்பான பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இது பற்றி நம்மிடம் பேசிய ம.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர், “தி.மு.க-வில் வைகோவுக்கு கலைஞர் கருணாநிதி அதிக முக்கியத்துவம் கொடுத்து வைத்திருந்தார். இளம் வயதிலேயே அவரிடம் இருந்த பேச்சாற்றலையும் செயல் திறனையும் புகழ்ந்த கருணாநிதி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக்கினார். தி.மு.க-வில் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்க கலைஞர் முடிவெடுத்தபோது அதற்கு அச்சுறுத்தலாக வைகோ இருந்ததைப் புரிந்துகொண்டார்.
அதனால் வைகோவை கட்சியில் இருந்து ஓரங்கட்ட முயற்சிகள் நடந்தன. அந்தச் சூழலில் தி.மு.க ஆட்சி காலத்தில் எம்.பி-யாக இருந்த வைகோ யாருக்கும் சொல்லாமல் ஈழத்துக்குச் சென்று விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து 23 நாள்கள் தங்கியிருந்து திரும்பினார். இது தமிழகத்தில் உள்ள இளைஞர்களிடம் வைகோவுக்கு செல்வாக்கை அதிகரித்தது.
தீக்குளித்தவர்களின் ஆவி மன்னிக்குமா?
வைகோ ஈழத்தில் இருந்து கலைஞருக்கு எழுதிய கடிதத்தில், ’சிங்கள ராணுவத்திடமோ, இந்திய ராணுவத்திடமோ நான் பிடிபட நேர்ந்தால் நமது கழக அரசுக்கோ இயக்கத்துக்கோ கடுகளவு பிரச்னை எதுவும் ஏற்படாவண்ணம் செயல்படுவேன். என்னைப் பலியிட்டுக் கொள்ளவும் சித்தமாக இருப்பேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த அளவுக்கு கலைஞரின் மீது பற்று கொண்டிருந்த வைகோ மீது கொலைப்பழி சுமத்தப்பட்டதால் தொண்டர்கள் திகைத்தனர்.
தி.மு.க-வின் வாரிசு அரசியல் காரணமாக வைகோ கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டபோது அதைக் கண்டித்து நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோர், தீக்குளித்து மடிந்தனர். அதன் பின்னர் தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோ 1994 மே 6-ம் தேதி ம.தி.மு.க-வைத் தொடங்கினார். அப்போது அவருடன் தி.மு.க-வின் ஒன்பது மாவட்டச் செயலாளர்களும், 400 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் வந்தார்கள்.
எந்த வாரிசு அரசியலைக் கண்டித்து தி.மு.க-வில் இருந்து வெளியேறினாரோ அதே வாரிசு அரசியலுக்கு வைகோவும் வந்து நிற்கிறார். அவருக்காக தீக்குளித்த தொண்டர்களின் ஆவியே இந்தச் செயலை ஏற்றுக் கொள்ளாது. அந்த தொண்டர்களின் உயிருக்கு வைகோ கொடுக்கும் மரியாதை இது தானா? கடந்த மூன்று வருடங்களாகவே துரை வைகோவை கட்சிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் திட்டமிட்டு நடந்தது.
துரை வையாபுரியாக இருந்த அவரை துரை வைகோ என பெயர் மாற்றினார்கள். கட்சி நிகழ்ச்சிகளில் அவருடைய படத்தையும் போட்டு அச்சடிக்க வேண்டியதிருந்தது. இப்போது கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்கள் பற்றி எதுவும் தெரியாத அவருக்கு கட்சிப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பதன் மூலம் கார்ப்பரேட் கம்பெனி போல கட்சி மாறிவிட்டதோ என்ற சந்தேகம் வருகிறது” என்றார்.
கட்சிக்குள் வெடிக்கும் கலகக்குரல்!
துரை வைகோவுக்கு ம.தி.மு.க-வில் தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதற்குக் கட்சியின் சீனியர் நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளராக இருந்த கோவை ஈஸ்வரன் தன் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
28 வருடங்கள் ம.தி.மு.க-வில் பயணித்து "தலைவரை விடக் கொள்கையே முக்கியம்" என்று வாரிசு அரசியலை நேரடியாக எதிர்த்துள்ள ஈஸ்வரனை சந்தித்துப் பேசினோம். ” தி.மு.க என்றால், அங்கு உள்ளே போகும்போதே வாரிசு அரசியல் என்பதையெல்லாம் ஏற்றுக் கொண்டே செல்வார்கள். ம.தி.மு.க அப்படி இல்லை. இது ஒரு ஜனநாயக இயக்கம்.
ஒரு தலைவரின் மகன் கட்சிக்கே வரக்கூடாது என்று சொல்லவில்லை. வரலாம். பதவியும் கொடுக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் இயக்கத்தைத் தலைமையேற்க இவருக்கே தகுதி இருக்கிறது, ஆங்கிலப் புலமை இருக்கிறது என்பதெல்லாம் என்ன? 28 ஆண்டுகளாக இயக்கத்தை வழிநடத்தும் அளவுக்கு நீங்கள் யாரையும் தயாரிக்கவில்லை என்பதே வருத்தமானது அல்லவா?
தலைவர்களை காலம்தான் முடிவு செய்யும் என்று தலைவர் வைகோ சொல்வார். அண்ணா யாரையும் அடையாளம் காட்டவில்லை. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கூட அப்படித்தானே? ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி வருவார் என யார் நம்பினார்கள்? அப்படி இருக்கும்போது ம.தி.மு.க-வில் மட்டும் அது ஏன் நடக்காது?. அதை காலமும் தொண்டர்களும் முடிவு செய்யட்டும். யாரையும் திணிக்கக் கூடாது.
வாரிசு அரசியல்!
மு.க ஸ்டாலினுக்காக தலைவர் வைகோவை தி.மு.க-வில் இருந்து தூக்கி வீசியபோது, வாரிசு அரசியல் சரியல்ல என்பதற்காகத் தான் வைகோவுடன் வந்தோம். கடந்த 2 வருடங்களாகவே துரை வையாபுரியின் ஆதிக்கம் எல்லா மட்டத்திலும் இருந்தது. தேர்தல் நேரத்தில் கூட அவரிடம் கேட்டே எதையும் செய்ய வேண்டியதிருந்தது.
Also Read: ``அரசியல்வாதியாக இருப்பேனே தவிர அரசியல் `வியாதி' யாக இருக்க மாட்டேன்" - துரை வைகோ
அப்போதே மன வேதனையில் நான் , கட்சியை விட்டு விலகுவதாகக் கடிதம் எழுதினேன். 'எல்லாம் சரியாகிவிடும்' என்று சொன்னதால் அப்போதைக்கு அந்த முடிவைக் கைவிட்டேன். இதுவரை தலைவர் வைகோ என்ன சொன்னாரோ அதைத்தான் எல்லோரும் கேட்டோம். அப்படி இருக்கும்போது அவர் கொள்கையை அவராலேயே நிலை நாட்ட முடியவில்லை என்பது வேதனையான சூழல். அதனால் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டேன்" என்றார்.
ம.தி.மு.க-வில் துரை வைகோவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது கட்சியின் நீண்டகால தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் எற்புடையதாக இருக்கவில்லை. ஆனாலும், கட்சியின் பொதுச் செயலாளரும் சில மாவட்டங்களின் நிர்வாகிகளும் துரை வைகோவை கட்சிக்குள் வலிந்து கொண்டுவந்திருப்பதற்கு எதிர்ப்பு அலையை எழுப்பியிருக்கிறது.
வாரிசு அரசியல் என்பதைை எதிர்த்துத் தொடங்கப்பட்ட ம.தி.மு.க, தன் பயணத்தின் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தால் அதே வாரிசு சுழலில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து மீண்டு கரை சேருமா என்பதைக் காலம் தான் தீர்மானிக்கும். அதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/mdmk-executives-oppose-the-monarchy-system-in-mdmk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக