Ad

திங்கள், 4 அக்டோபர், 2021

கடும் நிதி நெருக்கடி; மத்திய அரசிடம் ₹40,000 கோடி கடன் கேட்கும் BSNL நிறுவனம்; மீண்டு வருமா?

பொதுத்துறை சார்ந்த தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிர்வாகச் செலவுகளை சமாளிப்பதற்காகவும், தமது கடன் தவணைகளை வரும் ஆண்டுகளில் திரும்ப செலுத்துவதற்காகவும் மத்திய அரசிடமிருந்து 40,000 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளது.

நமது நாட்டில் தொலைத்தொடர்புத் துறையில் தனியார் வருகைக்கு முன்பு பி.எஸ்.என்.எல் மட்டுமே தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வந்தது. தொலைபேசி இணைப்பு பெறுவது என்பது 1990–களில் மிகவும் சிரமமான விஷயம் ஆகும்.

செல்போன் டவர்

Also Read: வாடிக்கையாளர்களை கவர பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இணைப்பைத் துண்டித்த தனியார் நிறுவன ஊழியர்!

புதிய இணைப்புக்கு பதிவு செய்த பின்பு 5 ஆண்டுகள் வரை காத்துக்கொண்டிருக்க வேண்டும்.

நாட்டில் தொலைத்தொடர்பு நிலையங்களை பி.எஸ்.என்.எல் மட்டுமே கொண்டிருந்தது. தொலைத்தொடர்புத் துறையில் தனியார் வருகைக்குப் பிறகு பி.எஸ்.என்.எல் கடும் நிதி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. தனியார் துறையிலும் ஏர்செல், டாட்டா டொகோமோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் போன்ற நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தமது சேவைகளைக் கைவிட்டன.

தற்போது வோடஃபோன் நிறுவனமும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே தற்போது தொலைத்தொடர்பு துறையில் லாபத்தில் இயங்குகின்றன. இப்போது பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 11.5 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அதாவது, நமது நாட்டின் மொத்த சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் பி.எஸ்.என்.எல் 10 சதவிகித பங்களிப்பை தற்போது கொண்டுள்ளது.

BSNL

பல ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் ஆன்லைன் கனெக்ஷன் பெற்றவர்கள் அதன் சந்தாதாரர்களாகத் தற்போதும் தொடர்கின்றனர். என்றாலும் தனியார் போட்டியை சமாளிக்க முடியாமல் பி.எஸ்.என்.எல் தொடர்ந்து தடுமாறி வருகிறது.

இந்நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குத் தற்போது 30,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு 2019 -ம் ஆண்டு 69,000 கோடி ரூபாய் நிவாரணமாக அளித்துள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு நமது நாட்டில் பல இடங்களில் சொத்துகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை விற்று கடந்த நிதி ஆண்டில் 20,000 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு அந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த இலக்கை நிறுவனத்தால் எட்ட முடியவில்லை. அதன் காரணமாக நிறுவனத்தை நடத்துவதற்கு 20,000 கோடி ரூபாயும், கடன் தவணைகளைச் செலுத்துவதற்கு 20,000 கோடி ரூபாய் சேர்த்து 40,000 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கோரியுள்ளது.

Telecom Tower

Also Read: அக்டோபர் 1 முதல் `ஆட்டோ டெபிட்' முறையில் புதிய கட்டுப்பாடுகள்; யாருக்கு என்ன பாதிப்பு?

தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 70,000 ஊழியர்கள் வரை பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் மத்திய அரசு தக்க உதவியை பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு வழங்கி நிறுவனத்தை நடத்துவதற்கு உதவிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். ஒன்றிய அரசு நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை பங்குகளைத் தனியாருக்கு வாடகைக்கு விட்டோ, தனியார் மயமாக்குவதன் மூலமோ நிதி திரட்டுவதற்கு முயன்று வருகிறது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தை நடத்துவதற்கு மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்ற எண்ணமும் பலரிடம் உள்ளது.

பி.எஸ்.என்.எல் இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர வேண்டும் என்பதே அதன் பழைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோரின் எண்ணமாக உள்ளது. வரும் காலங்களில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே அந்த நிறுவனத்தின் வளர்ச்சி இருக்கும்.



source https://www.vikatan.com/business/telecom/bsnl-requests-central-govt-to-provide-40000-crores-loan-to-retrieve-its-business

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக