காடர்கள் அணிக்கு விருந்துண்ணச் சென்ற இனிகோ என்னென்ன புறணிகளைப் பேசப் போகிறாரோ? என்று ஒரு கேள்வியை நேற்றைய கட்டுரையின் இறுதியில் எழுப்பியிருந்தேன். ஆனால் அவர் இந்த அளவுக்கு ஓர் உற்சாகமான ஆட்டத்தை ஆடுவார் என்று நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அப்படியொரு தரமான சம்பவத்தை நிகழ்த்தினார் இனிகோ. அவருக்கு தன் அணி மீது சில மனக்குறைகள் இருக்கலாம். மறுப்பில்லை. அவை பேசி தீர்த்துக் கொள்ளப்பட வேண்டியவை.
ஆனால், தன் சொந்த அணியைப் பற்றி எதிரணியிடம் அவர் இத்தனை மிகையாகவும் உற்சாகமாகவும் வம்பு பேசியது நிச்சயம் தரமற்ற குணாதிசயம். இன்னொரு வகையில் இது பச்சையான நம்பிக்கைத் துரோகம். இனிகோவைப் பற்றி ஐஸ்வர்யா யூகித்தது இப்போது உண்மையாகி விட்டது. இனிகோ செய்த கிண்டல்களுக்கு காடர்கள் தரையில் உருண்டு புரண்டு சிரித்தார்கள். இதில் முன்னாள் வேடர்களான அம்ஜத்தும் லட்சுமியும் கூச்சமே இல்லாமல் கலந்து சிரித்தது சற்று நெருடலாகவே இருந்தது.
இனிகோவின் இந்த பண்பு மாற்றத்தை எந்தவொரு நிறுவனத்திலும் பொருத்திப் பார்க்கலாம். தன் அமைப்பில் மனப்புழுக்கத்துடன் இருக்கும் ஒருவரின் குறைகள் உடனே பேசி தீர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால் இப்படியான சிரிப்பு துரோகங்கள் நடைபெறுவதை தவிர்க்க முடியாது.
இறுதியில் தனிநபர் மிஞ்சி ஜெயிக்கப் போகும் சர்வைவர் ஆட்டம்தான் இது. என்றாலும் அதற்குள்ளும் சில ஆதாரமான அறம் நிச்சயம் இருந்தாக வேண்டும். இதுதான் மனித குலத்துக்கான பிரத்யேகமான நிறம். நாமும் விலங்குகள் போல ‘survival of the fittest’ ஆட்டத்தை அதே குரூரத்துடன் ஆடக்கூடாது.
சர்வைவர் 40-ம் நாளில் என்ன நடந்தது?
காடர்கள் தீவு விதம்விதமான உணவு வகைகளால் விருந்து மண்டபமாக மாறியிருந்தது. சிக்கன், இறால், ஜூஸ் என்று தட்டில் நிறைந்திருந்த உணவுகளை மக்கள் ஆவலாக உண்ணத் துவங்கினார்கள். வனேசாவுக்கு ஊட்டி விட்டார் உமாபதி. (ராமை துரத்திய காரணம் இதுதானா?!).
‘சர்வைவர் ஷாப்பிங்’ பற்றி காடர்கள் பேசிய போது ‘அங்க என்ன இருக்கும்?’ என்று இனிகோ ஆவலாக கேட்க “இவரை ஒரு முறை கூட்டிட்டு போய் காட்டிடுங்க.. அவர் அதைப் பார்க்கறதுக்கு இனிமே சான்ஸே கிடைக்காது” என்று கிண்டலடித்தார் உமாபதி. அதாவது வேடர்களால் ரிவார்ட் சேலஞ்சை ஒரு காலத்திலும் ஜெயிக்கவே முடியாதாம். (என்ன இருந்தாலும் இத்தனை குசும்பு உடம்புக்கு ஆகாது தம்பி!). தனக்குள் கொஞ்ஞூண்டு இருந்த அணிப்பாசத்தினால் “டேய்... நாங்களும் ஜெயிப்போம்டா” என்று உறுதியற்ற குரலில் முனகி எதிர்வினையாற்றினார் இனிகோ. ஆனால் உடனே சுருதி மாறி “என்னையும் வெளியே அனுப்ப பிளான் பண்றாங்கடா” என்று ராக பேதத்துடன் பாடத் தொடங்கினார்.
“உங்களுக்கு ஒரு சூப்பர் கிஃப்ட் காத்திருக்கு” என்று இனிகோவிடம் பெருமை பேச ஆரம்பித்தார் லட்சுமி. “எதிர் டீம்ல யாருக்கும் தர மாட்டேன்” என்று முன்னர் சொல்லிக் கொண்டிருந்த லட்சுமி, இப்போது சற்று மனம் இரங்கி இம்யூனிட்டி ஐடலை இனிகோவுக்குத் தர முன் வந்திருக்கிறார். “டேய் தம்பி.. என்னாலதான் நீ பிழைக்கப் போறே.. தெரியுதா?” என்கிற பெருமிதம் லட்சுமியின் முகத்தில் பரிபூர்ணமாக வழிந்தது. இதன் முக்கியத்துவம் இனிகோவிற்கு புரியாததால் அப்போதைக்கு அமைதி காத்தார்.
இப்படியாக இனிகோ இந்தப் பக்கம் விருந்தில் உற்சாகமாக கலந்து கொண்டிருக்க அந்தப்பக்கம் வேடர்கள் அணயில் ஒரே குழப்பக்காற்று வீசியது. ‘இனிகோ நல்லவரா கெட்டவரா...’ என்பதே அங்கு நிகழ்ந்த பட்டிமன்றத்தின் தலைப்பு. “ச்சே... நல்ல ஆளுதான். என்னவொன்று எதிர் டீம் இவரைக் குழப்பிடுவாங்க. அதான் எனக்கு பயமா இருக்கு” என்பது போல் சொல்லிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. “இனிகோ காடர்கள் அணியில் ஒட்ட மாட்டார்” என்று நம்பிக் கொண்டிருந்தார் சரண். “அங்க நடந்ததையெல்லாம் இனிகோ இங்க வந்து நிச்சயம் சொல்வாரு” என்று நம்பிக்கை தந்தார் நாராயணன்.
“இங்க வந்து விளாவைச் சிறப்பிச்சதுக்கு ரொம்ப நன்றி” என்று சொன்ன லட்சுமி, இம்யூனிட்டி ஐடல் புதைத்து வைக்கப்பட்டிருக்கிற இடத்தை சுட்டிக் காட்டும் ஓலையை பரிசாக இனிகோவுக்குத் தந்தார். “பத்திரமா வெச்சுக்கங்க... பார்த்து சூதானமா யூஸ் பண்ணுங்க” என்று காடர்கள் இவருக்கு டியூஷன் எடுத்தனர். ‘ஓஹோ... இதை வைத்து என்னைக் காப்பாத்திக்கலாமா?” என்பதை அறிய வந்ததும் இனிகோ மிக மிக உற்சாகமாகி விட்டார்.
‘சோறு போட்ட காடர்களின் மீது நன்றியுணர்ச்சி காட்டுவதற்காக’ அதுவரை தன் டீமை மிதமாக கிண்டலடித்துக் கொண்டிருந்த இனிகோ, ‘பாதுகாப்பு கேடயம்’ கையில் கிடைத்தவுடன் ‘அமைதிப்படை அமாவாசை’யாக மாறி வேடர்களைப் பற்றி தாறுமாறாக தன் கிண்டலைத் தொடர்ந்தார்.
“அவங்க ஏன் சரணைத் தூக்கலை?” என்று சரணின் மீதுள்ள காண்டு குறையாமல் லட்சுமி கேட்க “இல்ல... ரவிதான் தன்னால முன்வந்தார்” என்கிற உண்மையைச் சொன்னார் இனிகோ. ‘போகும் போது ரவி தன்னைப் பற்றி சொல்லி விட்டுப் போன நெகட்டிவ் கமென்ட் பற்றியும் குறிப்பிட்டார் இனிகோ. “நீதான் நல்லா விளையாடினியே. அப்புறம் ஏன் ரவியண்ணன் அப்படிச் சொன்னாரு” என்று குழப்பமானார் உமாபதி. “நீ அங்க சந்தோஷமா இல்லைன்னு உன் மூஞ்சைப் பார்த்தாலே தெரியுது” என்று உமாபதி சொல்ல… ‘’ஆமாம்டா என் கெரகம். நான் அங்க போய் மாட்டிக்கிட்டேன்” என்று புலம்பத் துவங்கினார் இனிகோ.
“விருந்துக்கு யார் போறதுன்னு சரண் கிட்ட அர்ஜூன் சார் கேட்டப்போ... அவன் யார் யாரையோ பார்த்தான்.. ‘டேய்.. என்னை அனுப்புடா’ன்னு சொன்னேன். பயபுள்ள பயந்துட்டான்” என்று இனிகோ சொன்னதெல்லாம் ஓவர். சரணின் மீது ஏற்கெனவே காண்டு இருக்கிற காடர்கள் அணி இதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தது. எதைச் சொன்னால் இவர்கள் உற்சாகமாவார்கள் என்கிற விஷயம் இனிகோவுக்குப் புரிந்து விட்டதால் வேடர்களைப் பற்றிய சரமாரியான கிண்டலைத் தொடர்ந்தார்.
‘தன் சொந்த டீமைப் பற்றி இவர் இப்படிப் பேசுகிறாரே, அங்கே போன பிறகு நம்மைப் பற்றியும் ஏதாவது புறணி பேசுவாரோ’ என்கிற சந்தேகம் காடர்கள் யாருக்குமே தோன்றவில்லை. இப்படி நம்பிக்கைத் துரோகம் செய்கிற நபர்களை எப்போதுமே நம்பக்கூடாது என்பதுதான் பாலபாடம்.
“என் கிட்ட நல்லா பேசினா பழக ஆரம்பிச்சுடுவேன்.. இப்ப உங்க கிட்ட பாருங்க. எவ்ள க்ளோஸ் ஆயிட்டேன். அங்க யாருமே அப்படி ப்ரீயா பழக மாட்டாங்க. தோல்வி பத்தி புலம்பிட்டே இருக்காங்க. நானும் என்னால முடிஞ்சதைத்தான் பண்றேன். இன்னும்.. இன்னும்..னா எப்படி? நான் என்ன வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன்?..” என்ற இனிகோ, பாதுகாப்பு கேடயம் இப்போது கையில் இருக்கிற காரணத்தினால் ‘என்னை வோட் பண்ணி வெளிய அனுப்புறதா இருந்தா அனுப்புங்கடா’ன்னு சொல்லிடுவேன்” என்று கெத்து காட்டினார். “அப்படில்லாம் பண்ணிடாதீங்க.. ரகசியமா வெச்சுக்கங்க.. நேரம் வரும் போது மட்டும் யூஸ் பண்ணுங்க” என்று பாசத்துடன் எச்சரித்தார் விக்ராந்த்.
‘’இனிகோ.. ரொம்ப சிப்பு சிப்பா பேசினாரு” என்று லட்சுமி பிறகு சொல்லி மகிழ்ந்தார். இனிகோ இப்படி பயங்கரமாக கிண்டலடித்தது, தன் முன்னாள் நண்பர்களைப் பற்றியது என்கிற சொரணை சற்று கூட லட்சுமியிடம் இல்லை. போலவே அம்ஜத்திடமும் இல்லை. என்ன மாதிரியான மனிதர்கள்!
இனிகோவின் கிண்டல் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்தது. அணியில் இருக்கும் ஒவ்வொரு தனிநபரையும் பற்றி சற்று தரக்குறைவான கிண்டல்களை உதிர்க்கத் துவங்கினார். ‘தண்ணீரில் நீச்சல் அடிக்க முடியாமல் ரவி தத்தளித்த விதம் முதற்கொண்டு பல விஷயங்கள். வேடர்களிடம் laughing therapy பற்றி ஆரம்பித்தவரே இவர்தான். ஆனால் இவரே அதைப் பற்றி இங்கு பயங்கரமாக கிண்டல் செய்து கொண்டிருந்தார். “கயிறு இழுப்பதில் நாராயணன் தன்னால் முடிஞ்சத பண்ணாரு” என்று இனிகோ மனச்சாட்சியுடன் பேசிய சில இடங்கள் மட்டும் ஆறுதல் தந்தன.
“பேசாம வனேசாவை அங்க விட்டுட்டு நான் இங்க வந்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன்” என்று இனிகோ வருந்துவது போல் சிரிக்க “அப்ப நீ என்னல்லாம் பேசினே. என்ன என்ன பஞ்ச் டயலாக்லாம் சொன்னே?” என்று உமாபதி பதிலுக்கு கிண்டலடித்தார்.
பிறகு பொழுது போகாமல் இனிகோ தன் காதல் கதையை விவரிக்க அது விவஸ்தையற்றதாக இருந்தது. அதற்கும் காடர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள் “முக்கோணக் காதல் கதைன்னு கேள்விப்பட்டிருக்கேன். இது சதுரமா இருக்கு” என்று பிறகு இதை வர்ணனை செய்தார் வனேசா.
“புகுந்த வீட்டுக்கு எப்போ கிளம்பப் போறே” என்று அடுத்த கிண்டலுக்கான லீடை உமாபதி எடுத்துக் கொடுக்க அதை வலுவாகப் பற்றிக் கொண்டு அந்தக் கதையை திறமையாக டெலவப் செய்தார் இனிகோ. நந்தா மாமியாராம். நாராயணன் தன் அம்மாவின் பேச்சை மட்டுமே கேட்கும் கணவனாம். ரவி சும்மா அமர்ந்திருக்கும் மாமனாராம். ஐஸ்வர்யா ஆர்வக்கோளாறு ஆத்தாவாம். “பேசாம டைவர்ஸ் வாங்கிட்டு வந்துடலாமான்னு பாக்கேன்” என்று இனிகோ சொன்ன போது காடர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. புரண்டு புரண்டு சிரித்தார்கள்.
இனிகோ கிண்டல் செய்தது கூட ஒருவகையில் சரி. அவருக்குள் இருந்த மனஉளைச்சலை இப்படி கிண்டலின் வழியாக வடிகால் தேடிக் கொள்கிறார் எனலாம். ஆனால் சர்வைவர் டீமும் இந்தக் கிண்டலில் இணைந்து அதற்கேற்ற ஃபுட்டேஜ்களையும் காமெடியான பின்னணி இசையையும் இணைத்ததைப் பார்த்த போது ‘அடப்பாவிகளா?’ என்று தோன்றியது. இதெல்லாம் ரியாலிட்டி ஷோக்களின் ஒரு பகுதி என்கிற நிதர்சனம் புரிந்தாலும், சில கிண்டல்கள் எல்லை மீறுகிற போது சங்கடமாக தெரிகிறது.
“இனிகோ... இங்க இருந்தது எங்களுக்கு ஜாலியா இருந்தது. குழந்தை மாதிரி அவரு” என்கிற உமாபதியின் சான்றிதழோடு இனிகோ அங்கிருந்து கிளம்பினார். இனிகோ இன்னமும் திரும்பவில்லையே என்று வேடர்கள் அணி இந்தப் பக்கம் தவித்துக் கொண்டிருந்தது. “அங்க என்னென்ன உளறிட்டு இருக்காரோ’’ என்பதே அனைவரின் மைண்டிலும் ஓடிக் கொண்ருந்தது. ஆனால் இவர்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி அங்கு நடந்ததையெல்லாம் இவர்கள் வீடியோ வழியாக ஒருவேளை பார்த்தால் என்ன ஆவார்களோ?
தங்களின் தொடர் தோல்வி குறித்து வேடர்களே கசப்பான சிரிப்புடன் பேசிக் கொண்டார்கள். “நமக்கு ஏதாவது ஆறுதல் பரிசு தருவார்களா?” என்று ஐஸ்வர்யா கேட்க “அவங்க சாப்பிட்டுப் போட்ட எலும்பை வேணா இங்க அனுப்புவாங்க” என்று தனக்கே உரிய பாணியில் நாராயணன் அடித்த ஜோக்கைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார் ஐஸ்வர்யா.
“இனிகோ வரட்டும்... அவர் கிட்ட ஓப்பனா பேசி சில விஷயங்களை க்ளியர் பண்ணிக்கப் போறேன்” என்று ஐஸ்வர்யா சொல்ல “முதல்ல அவர் வரட்டும் நடந்ததையெல்லாம் சொல்லட்டும். அதுக்கப்புறம் நீ பேசு” என்று நந்தாவும் நாராயணனும் சொன்ன ஆலோசனை அருமையானது.
இனிகோ தொலைவில் நடந்து வரும் காட்சி தெரிய, வேடர்கள் அணி பரபரப்பாகியது. இதற்குப் பொருத்தமாக சிலந்தி வலை, பூச்சி என்கிற வீடியோக்களை இணைத்துக் காட்டியது சர்வைவர் டீம்.
காடர்கள் அணியில் தான் பேசிய கிண்டல்களை மறைத்து இங்கு என்ன சொல்வார் இனிகோ? இம்யூனிட்டி ஐடலை அவர் ரகசியமாக கண்டெடுத்து விடுவாரா?
பார்த்துடுவோம்!
source https://cinema.vikatan.com/television/survivor-tamil-reality-shows-40th-episode-review
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக