Ad

வெள்ளி, 22 அக்டோபர், 2021

வீட்டுமனை பட்டாவுக்காக 20 வருடங்களாக போராடும் இருளர் இன மக்கள்! -அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்?

``மழைக்காலம் வந்துட்டாலே உசுர கையில பிடிச்சுட்டு , இந்த ஓலை குடிசைகள்ல ஒடுங்கி போயிடுவோம். ஒரு மணி நேரம் பலமா மழை பேஞ்சா கூட எங்க செம்மண் குடிசைகள் எல்லாம் வெள்ளக் காடாக மாறிடும். பாம்பு, தேள்'னு விஷ ஜந்துக்கள் நிறைந்த இந்த வனப்பகுதியில குழந்தை, குட்டிகளை வெச்சுட்டு அல்லாடிட்டு இருக்குறோம். இந்த வனத்துலயே பிறந்து, இங்கயே வளர்ந்த எங்கள ஆக்கிரமிப்பாளர்கள்'னு சொல்லி எந்த உதவியும் செய்யாம புறக்கணிச்சுட்டு இருக்காங்க ஐயா" என்கிறார் கண்களைக் கசக்கியபடி ராசபாளையம் இருளர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 75 வயதான செஞ்சிராமன்.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டியை அடுத்த வெள்ளாத்தூக்கோட்டை ஊராட்சியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கிறது ராசபாளையம் இருளர் குடியிருப்பு. வனப்பகுதி என்பதால், பகலிலும் இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. ராசபாளையத்தின் பிரதான சாலையிலிருந்து, சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த தொல்குடிகளின் குடியிருப்பு பகுதி. இங்கு சுமார், 71 இருளர் இன குடும்பங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கடைநிலை மக்கள், விறகு வெட்டுவது, அருகிலுள்ள மாமர தோப்புகளைப் பராமரித்துக் கொள்வது என தங்கள் சுற்றத்திலேயே கிடைக்கும் கூலி வேலைகளைப் பார்த்துக் கொண்டு காலசக்கரத்தில் சுழன்றோடி கொண்டிருக்கின்றனர். கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குழந்தைகளுக்குப் பால் வாங்கி கொடுத்துவிட்டு, மீதமிருக்கும் பணத்தில் இரண்டு வேளை உணவு சாப்பிட்டுக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த இருளர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மொத்தமுள்ள 71 குடும்பங்களில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் 36 குடும்பங்களுக்கு மட்டும் வீட்டுமனை பட்டா அளித்து, தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்தனர், மற்ற குடும்பங்களை வனப்பகுதியில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கெல்லாம் பட்டா கிடையாது என்று கூறி புறக்கணித்து, கண்டும் காணாமல் இருந்து வருகின்றன அரசு இயந்திரங்கள்.

ராசபாளையம்

அரசு அலுவலகங்களின் கதவுகளைக் கோரிக்கை மனுக்களுடன் தட்டித் தட்டி, சோர்ந்து போன இந்த மக்களின் துயரும் சொல்லி மாளாது. மின்வசதி, குடிநீர் வசதி என தங்களின் அடிப்படைத் தேவைகளைக் கடந்த சில ஆண்டுகளில் போராடிப் பெற்றிருக்கும் இவர்களின் தற்போதைய உச்சபட்ச எதிர்பார்ப்பெல்லாம் தொகுப்பு வீடுகளுக்குத் தேவையான நில பட்டா ஒன்று மட்டுமே. இந்த 35 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதியில் சாலைகள் ஏதும் அமைக்கப்படாததால், கூழாங்கற்கள் நிறைந்த காணப்படும் வனப்பகுதியில் விளையாடும் போது கீழே விழுந்து கை எலும்பு முறிந்து போன தனது 2 வயது பேத்தி அஸ்வினியை தோளில் போட்டுக் கொண்டு நம்மிடம் பேசினார் 65 வயதான சங்கம்மா,

"ராஜபாளையம் கிராமத்துல ஊரோட எல்லையில நாங்க காலங்காலமா வசிச்சுட்டு வர்றோம். இங்க இருக்குற 71 குடும்பங்கள்ல 36 குடும்பங்களுக்கு மட்டும் 20 வருஷத்துக்கு முன்னாடி, நில பட்டா கொடுத்து, அரசாங்கம் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுத்துச்சு. மத்த குடும்பங்களுக்கு அடுத்த கட்டமா பட்டா கொடுத்து, இருளர் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்குறதா அப்போ அரசு அதிகாரிங்க உறுதியா சொல்லிட்டு போனாங்க. ஆனா, அதுக்கப்புறம் யாரும் எங்களை எட்டிக் கூட பாக்கல. நாங்க, போய் கேட்டதுக்கு நீங்க வனப்பகுதியில சட்டவிரோதமா வசிச்சுட்டு இருக்கீங்க. அதனால, உங்களுக்கு பட்டா கொடுக்க முடியாது, உயர் அதிகாரிங்க கிட்ட சொல்லி பாக்குறோம்னு சொல்லி விரட்டிட்டாங்க.

ஒரே பகுதியில வசிக்குற ஒரே இனத்தை சேர்ந்த குடும்பங்கள்ல பாதி பேருக்கு பட்டா கொடுத்துட்டு, மத்தவங்களுக்கு பட்டா கொடுக்கலானா எப்படினு நெறைய முறை போராட்டங்கள் நடத்தினோம். அந்த நேரத்துக்கு, மட்டும் அதிகாரிங்க போலீஸ்காரங்க கூட வந்து, சமரசம் செஞ்சுட்டு பட்டா கூடிய விரைவுல கொடுக்குறதா சொல்லிட்டு போவாங்க. ஆனா, அதுக்கு பிறகு வழக்கம் போல் எந்த நடவடிக்கையும் எடுக்காம எங்க வாழ்விட விஷயத்துல அலட்சியம் காட்டுவாங்க. நாங்க இருக்குற பகுதி காப்பு காடுங்கிறதால எங்களுக்கு பட்டா கிடைக்காதுனு சொல்றாங்க. ஆனா, இதே வனப்பகுதியில இருக்குற 36 இருளர் குடும்பங்களுக்கு பட்டா கொடுத்திருக்காங்க. செம்மண், பனை ஓலைகளை வெச்சு குடிசைகள் அமைச்சு வசிச்சுட்டு இருக்குறோம். ஒரு முறை குடிசை போட்டா ஆறு மாசம் வரைக்கும் தான் தாங்கும். அதுக்கப்புறம், செம்மண் பொலபொலனு கொட்டிடும். மறுபடியும், புதுசா குடிசை போடுவோம். இப்படி தான் இங்க 3 தலைமுறையா வசிச்சுட்டு இருக்குறோம். திருவள்ளூர் மாவட்டம், தனி மாவட்டமா பிரிஞ்சு இந்த 20 வருஷத்துல இதுவரைக்கும் 20 கலெக்டர் மாறிட்டாங்க. ஆனா, ஒருத்தரும் எங்க கோரிக்கைக்கு செவி சாய்க்கல.

சங்கம்மா

இங்க நாங்க கடந்த 10 வருஷத்துக்கும் மேல வீட்டு வரி, குடிநீர் வரி, மின் இணைப்பு கட்டணம்'னு எல்லாமே முறையா செலுத்திட்டு வர்றோம். இதே முகவரியில தான் ஆதார் கார்டு, வோட்டர் ஐ.டி-னு எல்லாமே வெச்சுருக்கோம். ஆனாலும், எங்களுக்கு எதுக்காக பட்டா கொடுக்க யோசிக்குறாங்கனு தெரியல. தொகுப்பு வீடுகள் இல்லாததால மழைக்காலத்துல தண்ணீரோட சேர்ந்து, குடிசைகளுக்குள்ள பாம்புகளும் புகுந்திடும். அதனால, குழந்தைகளை வெச்சுட்டு ராத்திரி முழுக்க தூங்காம முழுச்சுட்டு இருப்போம். வனத்தை ஒட்டியுள்ள பகுதி என்பதால இங்க நரிகளும், மலை பாம்புகளும், விஷ தேள்களும் அதிகமா இருக்கும். அதே மாதிரி, எங்களோட குடியிருப்பு பகுதியில சாலை வசதி கிடையாது. இங்கிருந்து, ராத்திரி நேரத்துல ஆஸ்பத்திரிக்கு போகணும்னா கூட ஒன்றரை கிலோமீட்டர் இருட்டுலயே தான் நடந்து போகணும். வழியில நரிகள் தொல்லை ரொம்ப அதிகமா இருக்குது. உசுர கையில பிடிச்சுட்டு தான் இந்த வாழ்ந்துட்டு இருக்கோம்.

ஆனா, இது தான் எங்க வாழ்விடம். இங்க காட்டுல விறகு வெட்டி தான் பொழச்சுட்டு இருக்கோம். இந்த கஷ்டத்துலயும் எங்க பிள்ளைங்கள பள்ளிக்கூடத்துல படிக்க வெச்சுட்டு வர்றோம். வீட்டுமனை பட்டா, சாலை வசதி வேண்டி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அதிகாரிகள் கிட்டயும் பலமுறை கோரிக்கை வெச்சிருந்தோம். ஆனா, அவங்களும் எங்களுக்கு உதவல. கான்கிரீட் வீடுகளுக்காகவும், சாலை வசதிக்காகவும் அரசாங்கத்துக்கு கிட்டப் போராடிச் சோர்ந்து போயிட்டோம்" என்றார் சங்கம்மா மன விரக்தியுடன்.

ராசபாளையம் இருளர் குடியிருப்பு

ராசபாளையம் கிராமத்தில் வீட்டுமனை பட்டாவுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் இந்த கடைநிலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையைக் குறிப்பிட்டு ஊத்துக்கோட்டை தாசில்தார் ராமனிடம் கேட்டோம். "நான் ஊத்துக்கோட்டை தாசில்தாராக பதவியேற்று சில மாதங்களே ஆகின்றது. பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்னைகளை பட்டியலிட்டு வைத்திருக்கிறேன். அதில், ராசபாளையம் இருளர் மக்கள் பிரச்னையும் ஒன்று. அந்த மக்கள் வசிக்கும் பகுதி வனத்துறைக்குச் சொந்தமானது என்பதால் தான், பட்டா ஏற்பாடு செய்வதில் சிக்கல் நிலவுகிறது. ஆனால், அதே பகுதியில் வசிக்கும் மக்கள் ஒரு பகுதியினருக்கு ஏற்கெனவே பட்டா வழங்கப்பட்டு, தொகுப்பு வீடுகள் கட்டித் தரப் பட்டுள்ளதால், மீதமுள்ள குடும்பங்களுக்கும் பட்டா ஏற்பாடு செய்யத் தேவையான நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்கிறேன்.

முதற்கட்டமாக, கிராம அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் உடனடியாக இருளர் குடியிருப்பு பகுதியில் சாலை மற்றும் மின் விளக்குகள் அமைக்க வலியுறுத்துகிறேன். அதே போல், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் உடனடியாக சம்பந்தப்பட்ட நிலத்தை அளந்து, அதை அறிக்கையாக மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்து, பட்டா வழங்குமாறு பரிசீலனை செய்யவும் தயாராக இருக்கிறேன்" என்று நம்மிடம் உறுதியளித்தார்.

வீட்டுமனை பட்டா கேட்டு அரசாங்கத்திடம் மன்றாடிக் கொண்டிருக்கும் இந்த விளிம்பு நிலை மக்களின் அபயக் குரல்கள் செவி சாய்க்கப்படும் பட்சத்தில், இவர்களின் வாழ்க்கை நிலை நிச்சயம் மேம்படும்..!!



source https://www.vikatan.com/news/tamilnadu/irular-tribal-people-longing-over-20-years-for-land

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக