Ad

திங்கள், 4 அக்டோபர், 2021

மருத்துவ மாணவர்களையும் பாதிக்கும் போதை மருந்துகள்; அதிர்ச்சி யதார்த்தம்! - நான் அடிமை இல்லை - 10

மருத்துவர்கள் மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் மாண்புமிகு மனிதர்கள். சக மனிதர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள். அப்படிப்பட்ட மருத்துவர்களும் எதிர்கால மருத்துவர்களாகப் போகிற மாணவர்களுமே போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகும் அவலம் அந்தக் காலம் முதல் இன்றுவரை தொடர்கிறது...

தன் வாழ்வில் சந்தித்த அனுபவங்களுடன் இது பற்றிப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

``மருத்துவக் கல்லூரியின் முதல் வருடப் படிப்பை `ஹனிமூன் பீரியட்' என்றுதான் சொல்வோம். மருத்துவமனை வேலை, உடற்கூறாய்வு என அதன் பிறகு, தொடரும் வருடங்களை `கிளினிக்கல் வருடங்கள்' என்போம். மருத்துவமனையில் காணும் காட்சிகள், நோய்களின் தாக்கங்கள், நோயாளிகளின் தவிப்புகள், வேதனைகள், இறப்புகள் என அந்த அவலங்களை அவ்வளவு நெருக்கத்தில் பார்க்கும்போது பலருக்கும் மனது பாரமாகிவிடும். மனம்கொள்ளா கனவுகளுடனும் கற்பனைகளுடனும் மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களுக்கு, அது தவறான முடிவோ என்றுகூட நினைக்க வைக்கும் காட்சிகள் அவை.

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

அப்படி நினைத்து, இந்தப் படிப்பே வேண்டாம் என ஓடியவர்களில் நானும் ஒருத்தி. நீண்ட விடுப்புக்குப் பிறகு, என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு, மனதை மாற்றிக்கொண்டு, மீண்டும் அந்தப் படிப்பைத் தொடர ஆரம்பித்தேன். ஆனால், என்னைப் போல எல்லோராலும் அந்தச் சமாதானத்துக்கு வர முடியுமா என்றால் சந்தேகம்தான். படிப்பையும் தொடர வேண்டும், அது தரும் அழுத்தத்திலிருந்தும் விடுபட வேண்டும் என்ற நிலையில் மருத்துவ மாணவர்கள் சிலர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் அவலமும் நடக்கும்.

மருத்துவமனை என்பது ஏராளமான மருந்துகள் புழங்கும் இடம். மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு ஒரு வருடம் ஹவுஸ் சர்ஜனாகப் பணியாற்ற வேண்டிய காலத்தில் நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள் அவர்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்படும். அந்த மருந்துகளில் வலியால் துடிப்போரை ஆற்றுப்படுத்துபவை, இறக்கும்தருவாயில் உள்ளோரைக் காப்பாற்றுபவை என எல்லாம் இருக்கும். இவர்களில் சிலர் ஆர்வக் கோளாறின் காரணமாக, அந்த மருந்துகளைத் தாமே பயன்படுத்துவதும் உண்டு. மருத்துவப் படிப்பு தந்த அழுத்தம், கற்பனை செய்ததுபோல அல்லாமல், யதார்த்தம் வேறு மாதிரி இருப்பதால் ஏற்பட்ட மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து வெளியே வர சிலர் போதை தரும் மருந்துகளுக்கும் மதுப் பழக்கத்துக்கும் அடிமையாவது உண்டு.

மருத்துவர்களும் மனிதர்கள்தானே... எல்லா மனிதர்களையும் போல அவர்களுக்கும் கவலைகள், பிரச்னைகள், மன அழுத்தம் எல்லாம் இருக்கும்தானே. எந்நேரமும் மருந்துகளோடு இருக்கும் அவர்களுக்கு பிரச்னைகளிலிருந்து விடுபட உதவும், பரவச நிலையைத் தரும் மாத்திரையை எழுதி, சீல் வைத்து வாங்கிப் பயன்படுத்துவது சாமானியர்களைவிட சுலபம்.

இதையெல்லாம் நான் சொன்னால், `அதெப்படி டாக்டர்ஸே இப்படி நடந்துப்பாங்களா என்ன... இதெல்லாம் தப்புன்னு அவங்களுக்குத் தெரியாதா?' எனச் சிலர் கேள்வி எழுப்பலாம். டாஸ்மாக்கில் முண்டியடித்து மது வாங்கிக் குடிக்கும் சாதாரண நபருக்கும் அது ஆபத்தான பழக்கம் என்பது தெரியாமலா குடிக்கிறார்? அதுதான் போதை. அந்தப் போதைக்கு சாமானியரா, படித்தவரா, மருத்துவரா, தொழிலதிபரா என்றெல்லாம் தெரியாது'' - அதிர்ச்சியான தகவல் சொல்லும் டாக்டர் சுபா சார்லஸ், தன் சொந்த அனுபவத்திலிருந்தே இன்னொரு சம்பவத்தையும் பகிர்கிறார்.

Doctor (Representational Image)

Also Read: மருந்தகங்களே துணை போகும் `காக்டெயில் போதை', இளைஞர்கள் வீழ்வது எப்படி? - நான் அடிமை இல்லை - 8

``அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன். தொடர்ச்சியாகப் பயணம்... அதன் விளைவாக ரத்த அழுத்தம் அதிகமானது. பயணத்துக்கிடையில் அவசரம் அவசரமாக மதுரையில் ஒரு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அப்போது எனக்கு பெத்தடின் மருந்து கொடுக்கப்பட்டது. பெத்தடின் என்பது எமர்ஜென்சி மருந்து. ஹார்ட் அட்டாக் முதல் சிசேரியன் ஆன பெண்கள்வரை இது பலருக்கும் கொடுக்கப்படும். அதைக் கொடுத்ததன் விளைவாக ரத்த அழுத்தம் குறைந்ததோடு, நான் விவரிக்க முடியாத பரவச நிலைக்குப் போனேன். மருத்துவமனையைச் சுற்றிப் பார்த்த என் கணவர், அந்தச் சூழல் சரியில்லை, அங்கு சிகிச்சை பெறுவது சரியல்ல என்று உடனே என்னை வேறு மருத்துவமனைக்குப் போகலாம் என அழைத்தார். ஆனால், மருந்தின் பரவசம் மற்றும் போதையால் நான் அதற்கு மறுத்திருக்கிறேன். முதல் டோஸிலேயே என் மூளையை மழுங்கடிக்கும் அளவுக்கு அந்த மருந்து வேலை செய்திருக்கிறது. சிகிச்சை சரியில்லாமல் என் கருவும் கலைந்துவிட்டது. நானும் மரணத்தின் விளிம்புவரை போய் மீண்டேன். அந்தக் காலத்தில் இந்த மருந்து சர்வசாதாரணமாக பலருக்கும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இன்று அதைவிட வீரியமான, நவீன மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த மருந்து கொடுக்கப் பட்டதால் நானோ, எத்தனையோ ஆயிரக்கணக்கான பெண்களோ இதற்கு அடிமையாகிவிடவில்லை.

அதேநேரம் ஆண் மருத்துவர்கள் அடிமையாகி நான் பார்த்திருக்கிறேன். இந்த மருந்து எப்படிப்பட்டது, அது தரும் பரவசநிலை எத்தகையது என்பது தெரிந்து, மருந்தை ஒளித்து வைத்துப் பயன்படுத்தத் தொடங்கி, ஒருகட்டத்தில் அதற்கு அடிமையானவர்களைப் பார்த்திருக்கிறேன். அப்படி அடிமையான பலரும் மிகப் பெரிய அறிவாளிகள்... கடும் உழைப்பாளிகள். ஆனாலும், அவர்களின் கைகளுக்கு எட்டும் தூரத்தில் காத்திருக்கும் போதையைத் தூக்கிப்போடும் அளவுக்கு மன உறுதி அவர்களிடம் இல்லாமல் போனதுதான் ஆச்சர்யம். மருத்துவம் என்பது மிகுந்த கவனமும், அதீத ஈடுபாடும் தேவைப்படுகிற துறை. அதில் சறுக்கினால் அந்தப் படிப்பே அவர்களுக்கு ஆபத்தாகிவிடும்...'' என எச்சரிக்கிறார் டாக்டர் சுபா சார்லஸ்.

ஐ.ஆர்.எஸ் அதிகாரியும் போதை விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வருபவருமான வெங்கடேஷ் பாபு பகிரும் தகவல்கள் இந்தத் தலைமுறை பிள்ளைகளின் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவசியம் கவனிக்க வேண்டியவை.

வெங்கடேஷ் பாபு

``மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் அதிக அளவில் போதைப்பொருள்களுக்கு அடிமையாக இருக்கின்றனர். குறிப்பாக, மார்பின் என்ற மருந்தே போதைக்காக மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களால் அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது. opium poppy என்ற தாவரத்திலிருந்து பெறப்படும் இயற்கையான பொருள் மார்பின் (Morphine). அந்தச் செடியில் பசை போன்ற ஒரு பொருளில் இருந்து பெறப்படுவதுதான் மார்பின்.

முற்றிய நிலையிலுள்ள புற்றுநோயாளிகளுக்கு அவர்கள் வாழும்வரை வலியில்லாமல் இருப்பதற்காக வலி நிவாரணியாகக் கொடுக்க இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை மருத்துவமனைகளில் இருப்பு வைத்துக்கொள்ள முடியும். அதன் ஸ்டாக் குறித்த விவரங்களை மாதாமாதம் கணக்கு காண்பிக்க வேண்டும். அந்த மருத்து, ஒரு மருத்துவ அதிகாரியின் கட்டுப்பாட்டில்தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்.

மார்பினை தவறாகப் பயன்படுத்திவிடாமல் இருப்பதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தால் ஒரு நபர் அதற்கு அடிமையாகிவிட்டால் எல்லா வரையறைகளையும் தகர்த்து அதைப் பயன்படுத்த முயல்வார். வேலியே பயிரை மேயும் கதைதான் இந்த விஷயத்தில் நடைபெறுகிறது.

பிற நபர்கள் அல்லது வேறு படிப்பைப் படிக்கும் மாணவர்கள் என்றால் அவர்கள் போதைப்பொருளைத் தேடிச் சென்று வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற சிறிய தடை இருக்கிறது. ஆனால், மருத்துவர்களுக்கும் மருத்துவ மாணவர்களுக்கும் இது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைப்பதால் எளிதில் இதன் பிடிக்குள் சிக்கிக் கொள்கின்றனர்.

மற்ற படிப்புகளைவிட மருத்துவத்துக்கான பாடத்திட்டம் மிகவும் கடினமானது. மேலும் அவர்கள் படிப்பதோடு அல்லாமல், இரவு பகல் பார்க்காமல் வார்டுகளில் பணியாற்றவும் வேண்டும். இன்டர்னல் மதிப்பெண், பல நுழைவுத்தேர்வுகள், இரவு நேரப் பணி எனப் பல்வேறு அழுத்தங்கள் அவர்களுக்கு இருக்கும். இந்த அழுத்தத்துக்கு ஒரு வடிகாலாக போதைப்பொருளைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுகின்றனர். கூடுதலாக அந்த மருந்தைப் பற்றியும் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எவ்வளவு டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய விவரங்களும் அவர்களுக்குத் தெரியும். நிர்வாகத்துக்கு இது தெரிந்து அவர்களைக் கண்டிக்கும் செயல்களும் நடைபெறுகின்றன. இருந்தாலும் அதையெல்லாம் மீறியும் இந்த அத்துமீறல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

Narcotic Drugs

Also Read: மருந்தகங்கள் முதல் வாட்ஸ்அப் க்ரூப் வரை; போதை வலையில் இளைஞர்கள்; மீட்பது எப்படி? நான் அடிமை இல்லை 6

மருத்துவக் கல்லூரிகள் மட்டுமல்லாமல் பொதுவாகவே, தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக நடைபெறும். படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் இந்தக் கல்லூரிகளில் போட்டி போட்டுச் சேருவார்கள். அவர்களே போதைப் பழக்கங்களுக்கும் ஆளாவார்கள். அதிக சுறுசுறுப்புடன் இருப்பதற்கு, தூங்குவதற்கு, போதைக்காக எனப் பல்வேறு காரணங்களுக்காக அங்குள்ள மாணவர்கள் போதைப்பழக்கங்களுக்கு ஆளாகிறார்கள்.

பல கல்வி நிறுவனங்களிலும் பெரும்பாலும் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. மாணவர்களின் புத்திசாலித்தனத்துக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர்கள் புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்க வேண்டும், படிப்பில் சாதனை புரிய வேண்டும், அதன் மூலம் கல்லூரி புகழ் பெற வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கட்டற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. அவர்கள் எந்தத் தவற்றைத் செய்தாலும், எங்கு போனாலும் வந்தாலும் அவர்களுக்குப் பிரச்னை இல்லை. மேற்கூறிய விஷயங்கள் நடந்துவிட்டால் போதும் என்ற ரீதியில் அவர்களைக் கையாள்கிறார்கள். இதுவும் இந்தப் பழக்கம் ஒருவரிடமிருந்து அடுத்தவருக்குப் பரவுவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என எல்லோருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. விழித்துக்கொண்டால் விபரீதங்களைத் தடுக்கலாம்'' என்கிறார் வெங்கடேஷ் பாபு.

சர்வசாதாரணமாகப் புழங்கும் போதைப் பொருள்கள்... என்ன பின்னணி? அது அடுத்த அத்தியாயத்தில்.



source https://www.vikatan.com/health/healthy/how-some-medical-students-fall-prey-to-medicinal-drugs-because-of-stress

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக