Ad

சனி, 1 மே, 2021

சம்பவக்காரன் பொலார்ட்… இந்த கட்டப்பா இருக்கும்வரை மும்பைக்கு வீழ்ச்சியே இல்லை! #Pollard

27 பந்துகளில், 72 ரன்கள் என்னும் ராயுடுவின் ரெய்டால், மொத்த டெல்லி மைதானமும், சூடேறிக் கனன்று கொண்டிருந்தது. இரட்டைச்சதத்தை சிஎஸ்கேவும் எட்டியாயிற்று. த்ரில்லர் திரைப்படத்தின் முடிவு, இடைவேளையிலேயே தெரிந்தது போலத்தான் சுவாரஸ்யமின்றி இருந்தது சென்னை - மும்பை ஆட்டம். ஆனால், மும்பை எக்ஸ்பிரஸை, புல்லட் டிரெய்னாக்கி, வெறித்தனமாய் ஓடவிட்டு, எல்லா செக்போஸ்டையும் அடித்து நொறுக்கி, மீண்டும் ஒருமுறை கடைசிப்பந்தில் வின்னிங் ஸ்டேஷனில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறார் கெய்ரான் பொல்லார்ட்.

மும்பையுடனான இவரது பயணம் நீண்ட நெடியது. 2010-ம் ஆண்டிலிருந்து, மும்பைக்காக ஆடி வருகிறார் பொல்லார்ட். 12 ஆண்டுகளாக, ஒரே ஐபிஎல் அணிக்காக ஆடிக் கொண்டிருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய வீரர்களில், பொல்லார்டும் ஒருவர். இதுவரை கிட்டத்தட்ட, 15-க்கும் மேலான டி20 தொடர்களில், பல்வேறு அணிகளுக்காக ஆடியிருந்தாலும், மும்பையுடனான அவரது பயணம் கூடுதல் சிறப்புமிக்கது. விளையாடிய ஆண்டுகள் அதிகம் என்பதைவிட, அவர் ஏற்படுத்தியுள்ள தாக்கம்தான் மிகப்பெரியது.

பொதுவாய் ஒரு அணியில், ஃபினிஷரின் வேலை, சற்று கடினமானது! டெத்ஓவர் பௌலர்களை எதிர்நோக்க வேண்டும். முதலில் பேட்டிங் செய்வதென்றாலும் சரி, இலக்கைத் துரத்துவதென்றாலும் சரி, ப்ரஷர் குக்கராக அழுத்தமேற்றி, பளுவேற்றக் கூடிய பணி அது. ஏனெனில், முன்வரிசை வீரர்கள் செய்த தவறுகளால், சந்திக்க வேண்டிய ஓவர்கள் அதிகமாக இருக்கலாம், விக்கெட் கையிருப்புக் குறைவாக இருக்கலாம். சேஸிங் என்றால், தேவைப்படும் ரன்ரேட்டும் அச்சமூட்டலாம். ஆனால், பொல்லார்டைப் பொறுத்தவரை, இது எதுவுமே அவரை நடுங்கச் செய்ததில்லை. பொல்லார்ட் களத்தில் இருக்கிறார் என்றால், பயங்கொள்வது எதிரணியாகத்தான் இருக்கும்.

பொலார்ட்

2009-ம் ஆண்டு, பிக்பேஷ் லீகில், தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் உலகம் மொத்தத்தையும், தன் பக்கம் திருப்பிய பொல்லார்டை, 2010-ம் ஆண்டுக்குரிய ஏலத்தில், கடும் போட்டிக்கிடையே தன்னுடைய அணிக்குள் கொண்டு வந்தது மும்பை. அதிலிருந்து எந்த சீசனிலும், இவரை வெளியேற்றுவதைப் பற்றி அணி நிர்வாகம் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. காரணம், கட்டப்பாவாக அணியின் ஒவ்வொரு தருணத்திலும், அவர் தன்னிகரில்லா, தன்னலமில்லாப் பணி ஆற்றி வருகிறார்.

விளையாடிய முதல் சீசனிலேயே, 185 என ஸ்ட்ரைக் ரேட்டுக்கே ஷாக் கொடுத்தார் பொல்லார்ட். அந்த வருட இறுதிப்போட்டியில், மும்பை சிஎஸ்கேவைச் சந்தித்தது. அதில் கோப்பையை மும்பை கோட்டை விட்டிருந்தாலும், 10 பந்துகளில்,

27 ரன்களைக் குவித்து, சிஎஸ்கேவின் கண்ணில் மரணபயம் காட்டினார். அன்று காட்ட ஆரம்பித்த காட்டம், அவரது ஆட்டத்தில் இன்றும் குறையவில்லை.

2013-ம் ஆண்டு, மும்பை சிஎஸ்கேவுக்கு இடையேயான இன்னொரு இறுதிப் போட்டி என்கவுன்ட்டர். தனது சுயரூபத்தை பொல்லார்ட் மொத்தமாகக் காட்டி, சிஎஸ்கேவின் கோப்பைக்கனவுக்கு மூடுவிழா நடத்திய நாளது. அன்று 32 பந்துகளில், பொல்லார்ட் அடித்த 60 ரன்கள்தான், தங்களுடைய முதல் கோப்பையை மும்பை முத்தமிடக் காரணமாக இருந்தத. அந்த சீசனில், 420 ரன்களைக் குவித்த பொல்லார்ட், தன்னுடைய ஐபிஎல் கரியரிலியே அதிகமான சிக்ஸர்களான, 29 சிக்ஸர்களை இந்த சீசனில்தான் அடித்திருந்தார். அதன்பிறகு, மலிங்கா எப்படி பௌலிங்கில் மேஜிக் காட்டினாரோ, அதே போன்றதொரு மாயாஜாலத்தை, ஒவ்வொரு சீசனிலும் நிகழ்த்தி, மும்பையின் முதுகெலும்பாக, பொல்லார்ட் மாறத் தொடங்கினார்.

ஒருகட்டத்தில், பின்வரிசை வீரராகத்தான் இறங்க வேண்டுமென்பதில்லை, எப்படி வேண்டுமென்றாலும் இறக்குவோம் என மும்பை இவரைவைத்து கண்ணாமூச்சி ஆடியது. பேட்டிங் லைன் அப்பில், மேல் இருந்து கீழ்வரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் சூழலுக்கு ஏற்றாற்போல இறக்கத் தொடங்கியது. ‘ப்ளேயர் டு கோ' என காலம், இறங்கும் இடம், களம், சூழ்நிலை என எல்லாத் தருணத்திற்குமான வீரராக மும்பைக்கு இவர் மாறிப்போனார். இந்தக் காரணத்தினால்தான், 2018-ம் ஆண்டு, அவர் ஃபார்ம் அவுட் ஆகித் திணறிய போதும், மும்பை இவரை எங்கேயும் விட்டுக் கொடுக்கவில்லை.

அதன்பலனைத்தான், அடுத்த நான்கு வருடங்களாக அனுபவித்து வருகிறத. எத்தனை போட்டிகளை, இவர் ஒற்றை வீரராக நின்று போராடி வென்று கொடுத்திருக்கிறார் என்பதற்குக் கணக்கு கிடையாது. தான்தான் நின்று, ஆடி, வென்று தந்தேன் என்னும் கர்வமும் இவரிடம் கிடையாது. அதை இயல்பாக எடுத்துக் கொண்டு கடந்து சென்று விடுவார். அந்த அணுகுமுறைதான் அவருடைய மாபெரும் வெற்றிக்குக் காரணம்.

பொலார்ட்

2015-ல் சிஎஸ்கேவுக்கான இறுதிப் போட்டியில், 18 பந்துகளில் 36 ரன்களை அடித்து, அணியை வெல்ல வைத்ததாகட்டும், 2019 இறுதிப் போட்டியில், 25 பந்துகளில், 41 ரன்களைக் குவித்த சந்தர்ப்பத்திலாகட்டும், சிஎஸ்கேவுக்கு சிம்ம சொப்பனமாகவே பொல்லார்ட் இருந்து வருகிறார்.

இந்தக் காரணத்தினால்தான், பொல்லார்ட் இருக்கும்வரை, மற்ற விக்கெட்டுகளுக்கான கொண்டாட்டங்களில் அணிகள் அடக்கியே வாசிக்கும். அவர்களுக்குத் தெரியும், மில்லியன் வாட் கணக்கில் சக்தி கொண்ட இந்த அணுகுண்டு, தூண்டப்பட்டு பந்துகளை வெளுக்கத் தொடங்கினால், அதன் விளைவுகள், படு பயங்கரமானதாக இருக்கும் என்று! அந்த ஒருசில நாட்களுக்காகவே, இவரை பல ஆண்டுகளாய்ப் போற்றிப் பாதுகாக்கின்றது மும்பை.

அப்படி ஒரு நாளாய்தான் நேற்றும், மாறிப்போனது. சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியென்றாலே, சிறப்புத் தரிசனம் தரும் பொல்லார்ட், இந்தப் போட்டியில், முதல் பாதியில், பௌலர் அவதாரம் எடுத்தார். பத்தாவது ஓவர்வரை, ஒரு விக்கெட் இழப்போடே, சிஎஸ்கே பயமுறுத்திக் கொண்டிருக்க, பும்ராவை முன்கூட்டியே கொண்டுவந்து, மொயின் அலியின் விக்கெட்டை வீழ்த்தினார் ரோஹித். எல்லா பௌலர்களின் பந்துகளும் மானாவாரியாக அடிவாங்க, பொல்லார்ட் கொண்டு வரப்பட்டார். வீசிய முதல் ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில், டுப்ளெஸ்ஸி மற்றும் ரெய்னாவின் விக்கெட்டுகளை வீழ்த்தி, போட்டியின் போக்கை தங்கள் பக்கம் திரும்ப வைத்தார் பொல்லார்ட். சென்னையின் பேட்டிங் மொமன்ட்டம் . எனினும், ராயுடுவின் மிரட்டும் ஷாட்களால், இமாலய இலக்கை நிர்ணயித்தது சிஎஸ்கே‌.

219 என்பது எட்ட இயலா இலக்கு, தங்களது அணிக்கு வெற்றி நிச்சயம் என்றுதான் நினைத்திருப்பார்கள், சிஎஸ்கே வீரர்களும், ரசிகர்களும். ஏன் கிரிக்கெட் வல்லுனர்களும் கூட. காரணம், சிஎஸ்கேவன் தற்போதைய ஃபார்மும், கடந்த சில போட்டிகளாய்த் தொடர்ந்த, மும்பையின் மிடில் ஆர்டர் சோகக் கதைகளும் அப்படி. எனினும் அத்தனை பேரும் மறந்தது, மும்பை பேட்டிங்லைன் அப்புக்குள் ஒளிந்திருக்கும் ரட்சகனை!

ஏழாவது ஓவர் வரை, விக்கெட் வீழச்சியின்றி, 9-க்கும் அதிகமான எக்கானமியோடு, அசத்தலாக ஆரம்பித்தது மும்பை. 8-10 ஓவர்களில், ரோஹித் தொடங்கி, ஓவருக்கொரு விக்கெட்டாய்ப் பறிகொடுத்து, போட்டியின் சரிபாதி ஓவர்களைச் சந்தித்து, 81 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

அங்கிருந்து இலக்கு, பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட தூரத்திலிருந்தது. சாத்தியமேயில்லை என்றேதான் அனைவருக்கும் தோன்றியிருக்கும். ஏனெனில், சென்னை மண்ணில், மும்பையின் மிடில் ஆர்டர் வாங்கிய பலத்த அடிதான் காரணம். ஆனால், களத்திலிருந்த ஒருவருக்கு மட்டும், 219 என்ற இலக்கம் மட்டும்தான் தெரிந்திருக்கிறது. அது எட்டக்கூடியதாகவே இருந்திருக்கிறது.

இடையிலுள்ள தடைகளெல்லாம், அவரது கண்ணிலோ மனதிலோ படவேயில்லை. ஜடேஜா வீசிய 13-வது ஓவரில், மூன்று சிக்ஸர்களை விளாசி, தனது அதிரடி அரங்கேற்றத்தை ஆரம்பித்தார் பொல்லார்ட். பயந்த சிஎஸ்கே, எங்கிடியை இறக்க, அவர் ஷார்ட் பாலை ஸ்லோவாக வீசிப் பார்த்தார். அது ஓவர் த டீப் லெக்கில் சிக்ஸரைக் கொண்டு வந்தது. அடுத்த பந்தையும் லாங் ஆனில் சிக்ஸருக்கு அனுப்பினார். ராயுடு அடித்த சிக்ஸர்களைக் கண்டே மலைத்துப் போயிருந்த இருபக்க ரசிகர்கள், பொல்லார்டின் சிக்ஸர்களைக் கண்டு, மோன நிலைக்கே போய் விட்டனர். 13 பந்துகளில், 35 ரன்களை எட்டி விட்டார் பொல்லார்ட்.

தாக்கூரின் பந்து அடி வாங்கும், ஆனால் விக்கெட் வீழ்த்தித்தரும் என்ற நம்பிக்கையில் தோனி அவரை அழைக்க, தாக்கூருக்கே ஆக்ஸிஜன் தேவைப்படுமளவு, மூச்சுத்திணற வைத்தார். முன்னதாக, 20 பந்துகளில், அரைசதம் எட்டி அம்பதி ராயுடு மரட்டி இருக்க, 'பிக் ஹிட்டர் என எனக்கென்ன மரியாதை?' என்பதைப் போல், வெறும் 17 பந்துகளில், அரைசதத்தை எட்டினார், பொல்லார்ட். வந்த வேலை இன்னும் முடியவில்லை என அதற்குரிய கொண்டாட்டங்கள் கூடக் குறைவாகவே இருந்தன.

க்ருணாலும் தன் பங்குக்கு, ரன்களைச் சேர்க்க, நான்கு ஓவர்களில், 50 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது போட்டி. அதன் பின்னும் அடங்கவில்லை பொல்லார்ட். க்ருணால், ஹர்தீக், நீஷம் என மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கான வழியைத் தேடியது சிஎஸ்கே. ஆனால், அவர்களால் பொலார்டை மட்டும் எதுவுமே செய்ய முடியவில்லை.

பதற்றம் சிஎஸ்கே கூடாரத்தில் முகாமிட்டது. கேட்ச் டிராப்பிற்கு அர்த்தம் தெரியாத டுப்ளெஸ்ஸி, பொல்லார்டின் கேட்சைத் தவறவிட, போட்டி அங்கேயே முடிந்துபோனது. தாக்கூரின் அந்த ஓவரில் 17 ரன்கள் வந்துவிட்டன. சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில், ரசல் - கம்மின்ஸ் இருவரது இன்னிங்ஸையும் கலந்து அடித்ததைப் போல் ஆடிக் கொண்டிருந்தார் பொல்லார்ட். ரசலைக் கட்டிப்போட்ட சாம்கரணால் கூட இவரை ஏதும் செய்ய முடியவில்லை‌, வெறித்தனமாக அதே நேரத்தில் விக்கெட்டை இழந்துவிடக் கூடாதென்ற நோக்கத்திலும் ஆடினார்.

இறுதிஓவரில், 15 ரன்கள் தேவைப்பட, எங்கிடியிடம் பந்தைத் தந்தார் தோனி. முதல் பந்து டாட் பாலாக, இரண்டாவதாக வீசப்பட்ட யார்க்கரையே பவுண்டரிக்கு அனுப்பி அழுத்தத்தை ஏற்றி விட்டார் பொல்லார்ட். அதன் விளைவாக, அடுத்த பந்து ஃபுல் டாஸாக வந்து, பொல்லார்டின் காலில் சலங்கை கட்ட, பவுண்டரிக்குச் சென்றது பந்து. இறுதி மூன்று பந்துகளில், எட்டு ரன்கள் தேவைப்பட்ட போது, ஸ்ட்ரைக்கை குல்கர்னியிடம் கொடுக்காமல், சிக்ஸர் மற்றும் கடைசிப் பந்தில் இரண்டு ரன்களோடு த்ரில் வெற்றியைப் பெற்றுத் தந்தார் பொல்லார்ட்.

ஃபாபுலஸ் 4, 3டி வீரர், மிஸ்டர் 360° என பல வீரர்களை நாம் பல பெயர் சொல்லி அழைக்கின்றோம். ஆனால், பொல்லார்ட், வார்த்தையில் வசப்படா விஸ்வரூபன். கட்டுக்குள் அடங்காத காட்டாறு. மும்பைக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம். மரபுக்குள் அடங்காத புதுக்கவிதையாக அவர் அடித்த ஒவ்வொரு ஷாட்டும், மும்பையின் பெயரைக் கோப்பையில் எழுதுவதற்குரியதாகவே இருந்தது!



source https://sports.vikatan.com/ipl/kieron-pollard-once-again-smashes-csk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக