Ad

சனி, 1 மே, 2021

பா.ஜ.க குறிவைத்த மேற்கு வங்கம்... மோடி அலையை வீழ்த்தி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பாரா மம்தா..?!

5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கருத்துக் கணிப்புகளின்படி மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீண்டும் மூன்றாவது முறையாக முதல்வராவாரா என்ற
எதிர்பார்ப்பு நாடு தழுவிய அளவில் எழுந்துள்ளது.

மேற்கு வங்க சட்டசபைக்கு மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6, ஏப்ரல் 10,
ஏப்ரல் 17, ஏப்ரல் 22, ஏப்ரல் 26, ஏப்ரல் மற்றும் ஏப்ரல் 29 ஆகிய
தேதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதலமைச்சர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் அடங்கிய கூட்டணி என மும்முனைப் போட்டி காணப்பட்ட போதிலும், திரிணாமுல்
காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கும் இடையேதான் கடுமையான போட்டிக் காணப்பட்டது.

இந்த முறை எப்படியேனும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என பாஜகவும், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என மம்தாவும் தேர்தல் களத்தை ஒரு யுத்தக் களமாகவே மாற்றி இருந்தனர். மம்தா கட்சியிலிருந்து அவருக்கு நெருக்கமான எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் மட்டுமல்லாது அமைச்சர்களையே தங்கள் பக்கம் இழுத்து அவரை நிலைகுலைய வைத்தது பாஜக.

மோடி - மம்தா

ஒரு மாநிலத்தைக் குறிவைத்து விட்டால், அங்கு நடைபெறும் வார்டு கவுன்சில் தேர்தலில் கூட தீவிரமாக செயலாற்றும் உத்தியைக் கடைப்பிடிக்கும் பாஜக, மேற்குவங்கத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலை அத்தனை சுலபத்தில் விட்டு
விடுமா என்ன? பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி ஒட்டுமொத்த டெல்லி பாஜக தலைவர்களே மேற்குவங்கத்தை முற்றுகையிட்ட நிலையில், மம்தாவும் ஒன்வுமென் ஆர்மியாக பாஜகவை எதிர்கொண்டார்.

இந்த நிலையில், மேற்கு வங்க சட்டசபைக்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 2 தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, 292 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடைபெற்ற பல்வேறு கருத்துக்கணிப்புகள் மம்தாவே மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் எனக்
கூறுகின்றன. ஆனால் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளை ஏற்க மறுக்கும் பாஜக, நாங்களே மீண்டும் ஆட்சியமைப்போம் எனக் கூறுகின்றனர். அதே சமயம் அசாமில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் என்ற கருத்துக் கணிப்பை
மட்டும் அக்கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மம்தா மீண்டும் ஆட்சியமைப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு மேற்குவங்கத்தையும் தாண்டி, நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக

ஏனெனில் இந்த 5 மாநில தேர்தலில் பாஜக மிகவும் குறி வைத்த மாநிலம் என்றால் அது மேற்குவங்கம்தான். அதேபோன்று மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியமைத்துவிடக்
கூடாது என்பதில் தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அக்கறை காண்பித்து வந்தன.

முடிவு என்ன என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

Made with Flourish


source https://www.vikatan.com/government-and-politics/politics/west-bengal-election-2021-will-mamata-banerjee-conquers-again

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக