Ad

சனி, 1 மே, 2021

பாசிப்பயறு - கருப்பட்டிக் கஞ்சி | கம்பு உருண்டை | கர்ப்பிணிகளுக்கான கொரோனா கால வீக் எண்ட் ரெசிப்பீஸ்

முதியவர்கள், இணை நோய்கள் உள்ளவர்களைவிடவும் இந்தக் கொரோனா காலத்தில் அதிக பயத்திலிருப்பவர்கள் கர்ப்பிணிகள். உயிருக்குள் உயிர் சுமந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு தன்னோடு சேர்த்துக் கருவையும் நல்லபடியாகப் பார்த்துக்கொள்ள வேண்டுமே என்ற பயமும் பதற்றமும் இருக்கும். சாதாரணமானவர்களையே சத்தான, நோய் எதிர்ப்புத் திறனுள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ளச் சொல்கிற மருத்துவர்கள், கர்ப்பிணிகளுக்கு இன்னும் அதிக அறிவுரைகளை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். கர்ப்பகாலத்தில் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்திக்கொள்ள உதவும் உணவுகள் இங்கே உங்களுக்காக...

தேவையானவை:

பாசிப்பயறு - அரை கப்
கருப்பட்டி - 300 கிராம்
சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்
ஏலக்காய் - 3
உப்பு - கால் டீஸ்பூன்

பாசிப்பயறு-கருப்பட்டிக் கஞ்சி

செய்முறை:

பாசிப்பயறை தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும். வெந்ததில் பாதியை எடுத்து தண்ணீர் வடித்து மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். கருப்பட்டியைத் தூளாக்கி கனமான அடிப்பகுதியுள்ள வாணலியில் சேர்த்து 300 மில்லி தண்ணீர் விட்டுக் காய்ச்சவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும். வடிக்கட்டிய கருப்பட்டி சிரப்பை மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். இத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் வேகவைத்து அரைத்த பயறுக் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். தேவையெனில், சிறிது தண்ணீர் ஊற்றி, கஞ்சி பதத்துக்குக் கொண்டு வரவும்.

4 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து உப்பு சேர்த்துக் கஞ்சியைக் கொதிக்க விடவும். பிறகு மீதம் இருக்கும் வெந்த பயறைச் சேர்த்துக் கலந்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கினால், சுவையான கருப்பட்டிக் கஞ்சி தயார்.

தேவையானவை:

கறிவேப்பிலை - 1 கைப்பிடியளவு
நெல்லிக்காய் - 1

கறிவேப்பிலை - நெல்லிக்காய்ச் சாறு

செய்முறை:

கறிவேப்பிலை இலைகளை உதிர்த்து தண்ணீரில் தூசி போக அலசி எடுக்கவும். நெல்லிக்காயைத் தண்ணீரில் கழுவி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கறிவேப்பிலை இலைகளையும், நெல்லிக்காய்த் துண்டுகளையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். பிறகு 100 மில்லி தண்ணீர் விட்டு மீண்டும் அரைக்கவும். பிறகு வடிகட்டி பரிமாறவும்.

குறிப்பு:

காலையில் வரக்கூடிய வாந்தி, தலைச்சுற்றல், மயக்கத்தைப் போக்குவதோடு உடலுக்குத் தேவையான வைட்டமின்களையும் கர்ப்பிணிகளுக்குத் தருகிறது.

தேவையானவை:

கம்பு மாவு - ஒரு கப்
கருப்பட்டி - ஒன்றரை கப்
நெய் - 2 டீஸ்பூன்

கம்பு உருண்டை

செய்முறை:

கம்பு மாவை, எண்ணெய் இல்லாமல் மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை அடி பிடிக்காமல் நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும். கருப்பட்டியைத் தூள் செய்து, கனமான அடிப்பகுதியுள்ள ஒரு வாண‌லியில் சேர்த்து, கூடவே 50 மில்லி தண்ணீர் விட்டு கருப்பட்டியைக் காய்ச்சவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும். இனி, சூடான பாகுடன் மாவைக் கலக்கவும். முதலில், கரண்டியால் கிளறி, பின்னர் கையால் கவனமாக பதம் வரும் வரை பிசற வேண்டும். உருண்டை பதம் வரும்போது கையால் உருண்டை பிடிக்கவும். உருண்டை பிடித்தால் உடையக் கூடாது. உருண்டை பிடிக்கும் போது கைகளில் நெய்யைத் தடவிக்கொண்டு உருண்டை பிடித்தால், உருண்டை வாசனையாகவும், கைகளில் ஒட்டாமலும் வரும்.

குறிப்பு:

கம்பை முளைக்கட்ட வைத்து நன்கு வெயிலில் காய வைக்கவும். பிறகு, மெஷினில் கொடுத்து கம்பு மாவாக அரைத்து காற்றுப் புகாத டப்பாவில் வைத்துக்கொண்டால், நீண்ட நாள்கள் கெடாது. பலவித உணவு வகைகளை இதில் தயார் செய்யலாம்.

தேவையானவை:

மாதுளை முத்துகள் - ஒரு கப்
எலுமிச்சைப்பழம் - ஒன்று
சர்க்கரை - ஒரு கப்

மாதுளை ஜாம்

செய்முறை:

மாதுளையை உதிர்த்து அதற்கு சமமாக சர்க்கரையை அளந்து எடுத்துக் கொள்ளவும். மாதுளை முத்துகளை மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுத்து வைக்கவும். விதை அரைபடாமல் இருக்க வேண்டும். எனவே, மாதுளை முத்துகளை லேசாக அரைத்தால் போதும். அடிகனமான அடிப்பகுதியுள்ள வாணலியை அடுப்பில் வைத்து அரைத்த மாதுளை முத்துகளைச் சேர்த்து மிதமான தீயில் வைத்து, 2 நிமிடங்களுக்குக் கிளறவும். பிறகு, சர்க்கரை சேர்த்துக் கிளற‌வும். சர்க்கரை நன்கு கரைந்து மாதுளை முத்துகளோடு சேர்ந்து வரும் போது, எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து நன்கு கிளற‌வும். கலவையில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி, பிசுபிசுப்பு பதம் வரும்வரை கிளறவும். இதற்கு சுமார் 7 நிமிடங்கள் ஆகலாம். அடுப்பிலிருந்து இற‌க்கினால் சுவையான மாதுளை ஜாம் தயார்.

கலவை ஆறிய பின்னர் சுத்தமான கண்ணாடி பாட்டிலில் நிரப்பி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்யவும். பல வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.

குறிப்பு:

மிகவும் சுவையான இந்த ஜாம் செய்யும்போது அதிகமாக வேக வைத்துவிட வேண்டாம். பிறகு ரப்பர் போலாகிவிடும். பிசுபிசுப்பு பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். எப்போதெல்லாம் குமட்டல் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளவும். உடலுக்கு சத்து தருவதோடு ரத்தவிருத்திக்கும் ஏற்றது மாதுளை. மாதுளையின் விதைகள் வேண்டாம் என்று நினைத்தால், மாதுளை முத்துகளை நன்கு அரைத்து வடிகட்டி சாறெடுத்து பிறகு ஜாம் செய்யலாம்.

தேவையானவை:

நறுக்கிய பெரிய பீன்ஸ் / அவரைக்காய் - ஒரு கப்
நறுக்கிய கேரட் - ஒரு கப்
நறுக்கிய ஃபிரெஞ்ச் பீன்ஸ் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
நறுக்கிய தக்காளி - 3
புதினா இலைகள் - ஒரு கைப்பிடி
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
இஞ்சி - ஒரு அங்குல நீளமுள்ள துண்டு
பூண்டு - 5 பல்
நசுக்கிய மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்
நசுக்கிய சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
நசுக்கிய சோம்பு - அரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

மிக்ஸ்டு வெஜிடபிள் சூப்

செய்முறை:

காய்கறிகளை நன்கு கழுவி உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டுப் பல்லை தோல் நீக்கி வைத்துக்கொள்ளவும். அடுப்பில், குக்கரை வைத்து காய்கறிகள், இஞ்சி மற்றும் பூண்டு, கொத்தமல்லித்தழை, புதினா, தக்காளி உட்பட தேவையானவற்றில் கொடுத்துள்ள அனைத்தையும் சேர்த்துக்கொள்ளவும். கூடவே காய்கறிகளை விட மூன்று அங்குலம் அதிகமாகத் தண்ணீர் ஊற்றவும். குக்கரை அடுப்பில் வைத்து பிரஷர் வெளியே வரும்போது வெயிட்டை போடவும். பிறகு, அடுப்புத் தீயைக் குறைத்து, 20 நிமிடங்கள் குறைந்த தீயிலேயே வேக விடவும்.
அடுப்பை அணைத்து, பிரஷர் அடங்கியதும் மூடியைத் திறக்கவும். காய்கறிகளில் உள்ள தண்ணீரை வடிகட்டி பரிமாறும்போது உப்பு மற்றும் கூடுதலாக மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு:

சூப்பில் கடிப்பதற்கு காய்கறிகள் வேண்டும் என்று நினைப்பவர்கள், காய்கறிகளை வடிகட்டாமல், அப்படியே சூப்பில் சேர்த்துக் குடிக்கலாம். நறுக்கும்போது பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.



source https://www.vikatan.com/food/recipes/healthy-weekend-recipes-for-pregnant-women

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக