Covid question: கோவிட் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் இருக்கும்? அந்த பாதிப்புகள் எத்தனை நாள்களுக்கு இருக்கும்? மீண்டவர்கள் என்ன மாதிரியான உணவுகள் எடுத்துக்கொள்ளலாம்? தொற்றிலிருந்து குணமான பிறகு எப்போது டெஸ்ட் எடுக்க வேண்டும்? இல்லறத்தில் ஈடுபடலாமா... எத்தனை நாள்கள் கழித்து?
- சந்திர குமார் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.
``இரண்டாம் அலையில் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களை ஆக்சிஜன் சப்போர்ட்டுடன்கூட வீட்டுக்கு அனுப்பிவிடுவோம். அவரது தொற்றின் தீவிரத்தை ரத்தப் பரிசோதனையில் கண்டறிந்து ஒருவேளை அவருக்கு ஆக்சிஜன்அளவானது 88-89 என்ற அளவில் இருந்தால்கூட ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் உதவியோடு வீட்டுக்கு அனுப்பிவிடுவோம். ஒரு மாதம்வரை அவர்களுக்கு ஆக்சிஜன் சப்போர்ட் தேவை என்று அறிவுறுத்தியே அனுப்புகிறோம். ஆனால் ஒன்றிரண்டு வாரங்களிலேயே அவர்கள் ஆக்சிஜன் சப்போர்ட்டிலிருந்து மீண்டு வருவதையும் பார்க்கிறோம். மிதமான பாதிப்புள்ளவர்கள் பெரும்பாலும் மருத்துவமனையில் அட்மிட் ஆவதில்லை.
அவர்களுக்கு அவ்வப்போது காய்ச்சல் வந்து போகலாம். வீட்டுத்தனிமையில் இருந்தபடி, மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றினாலே குணமாகிவிடுகிறார்கள். பசியின்றி இருந்தவர்களுக்கு தொற்றிலிருந்து குணமானதும் மீண்டும் பசி உணர்வு திரும்புவதையும், விருப்பமான ஹோட்டல்களில் ஆர்டர் செய்துதரும்படி கேட்கும் அளவுக்கு நாவின் சுவை உணர்வு இயல்புநிலைக்குத் திரும்புவதையும் பார்க்கிறோம். கோவிட் பாதிப்பால் எடை குறைந்தவர்கள், குணமான பிறகு மீண்டும் பழைய எடைக்குத் திரும்புகிறார்கள். மிதமான பாதிப்பு உள்ளவர்களும் முழுமையாக குணமாக பத்து முதல் பதினைந்து நாள்கள் ஆகலாம். அதுவரை பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நன்றாகச் சாப்பிட்டு ஓய்வெடுக்க அறிவுறுத்துகிறோம்.
உணவைப் பொறுத்தவரை அனைத்துவிதமான காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிட அறிவுறுத்துகிறோம். நட்ஸ் சாப்பிடச் சொல்கிறோம். காய்கறிகள் அல்லது மட்டன் அல்லது சிக்கன் சூப் சாப்பிடுவது சிறந்தது.
தொற்றிலிருந்து மீண்டவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டுமென்றால், அறிகுறி தென்பட்டதிலிருந்து 14 முதல் 24 நாள்கள் கழித்து டெஸ்ட் எடுக்கச் சொல்கிறோம். பொதுவாகவே பத்தாவது நாளுக்குப் பிறகு அவர்களுக்கு கோவிட் நெகட்டிவ் என்றே வந்துவிடும். வேலையிடத்தில் வலியுறுத்தப்பட்டால் டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அவசியமில்லை. ஒருவேளை காய்ச்சல் குறையவில்லை என்றால் மீண்டுமொருமுறை டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம்.
தொற்றிலிருந்து குணமாகி 24 நாள்கள் கழித்து அவர்கள் சராசரியான வேலைகளில் ஈடுபடலாம். நடக்கும்போது மூச்சு வாங்காமலிருந்தால் மட்டுமே அவர்களை உடற்பயிற்சிகள் செய்யவும் அனுமதிக்கிறோம். மலச்சிக்கல் இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அந்தப் பிரச்னை உள்ள பலர், காலையில் மலம்கழித்துவிட்டு வெளியே போகும்போது ஹைப்பாக்ஸியாவால் மயக்கமடைவதும் மரணமடைவதும் சாதாரணமாக நடக்கிறது.
எனவே மலச்சிக்கல் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனையுடன் காய்கறிகள், பழங்கள் மற்றும் தண்ணீர் அதிகம் கொடுக்க வேண்டும். மலம் கழிக்கும்போது மூச்சு வாங்காமலிருந்தால் வாக்கிங் செய்யலாம். முதலில் வீட்டுக்குள்ளேயே நடந்து பார்க்கலாம். மூச்சு வாங்கவில்லை, ஆக்சிஜன் குறையவில்லை என்று தெரிந்தால், மெள்ள மெள்ள வெளியிடங்களில் வாக்கிங் செய்யலாம். அப்படி நடந்து பழகி, வழக்கமான வேலைகளைச் செய்யும்போது எந்தச் சிரமமும் இல்லை என்பதை உறுதிசெய்து கொண்ட பின்னர் தாம்பத்திய உறவில் ஈடுபடலாம்".
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/what-kind-of-foods-a-person-who-recovered-from-covid-19-should-take
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக