புனேவில் உள்ள சீரம் நிறுவனமானது ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்துவருகிறது. இந்நிறுவனத்தின் சி.இ.ஓ-வான அடார் பூனவாலா அண்மையில் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு கிளம்பி சென்றிருந்தார். இந்நிலையில், அங்கிருக்கும் ஒரு ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் விஷயங்களைப் பேசியிருக்கிறார்.
லண்டன் ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``கொரோனா தடுப்பூசி எல்லா மக்களுக்குமே தேவைப்படுகிறது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், உடனே எங்களுக்கு முதலில் மருந்து வழங்கவேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவில் மிக முக்கியமான அரசியல் பிரமுகர்கள், தொழில்துறை ஜாம்பவான்கள், முதலமைச்சர்களிடம் இருந்தெல்லாம் கூட மிரட்டல்கள் வருகின்றன.
எங்களுக்கு மருந்தை விநியோகம் செய்யவில்லை என்றால், அதற்குப் பிறகு எதுவும் சரியாக இருக்கிறது என்றெல்லாம் மிக மோசமான மொழியில் மிரட்டுகிறார்கள். அவற்றை வர்ணிப்பதற்கு மிரட்டல் எனச் சொல்வதே போதுமானதல்ல.
இதுவரை எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 90 சதவிகிதம் மருந்துகளை இந்தியாவிற்குத்தான் கொடுத்துள்ளோம். உற்பத்தியையும் அதிகரித்துள்ளோம். அதே நேரம் தேவையும் அதிகரித்துள்ளதால் பற்றாக்குறை ஏற்படுகிறது. மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் என் தோளின் மீது சுமத்தப்படுகிறது. ஆனால், தனி ஆளாக என்னால் மட்டுமே எதுவும் செய்துவிட முடியாது.
என் குடும்பத்தைப் பார்க்க லண்டன் வந்தேன். அதன் பின் விமானங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. இப்போது இருக்கும் சூழலில் இந்தியா செல்லாமல், இங்கிருந்தே பணியைத் தொடரலாம் என்று நினைக்கிறேன். மீண்டும் அந்த அழுத்தமான சூழ்நிலைக்குச் செல்ல நான் விரும்பவில்லை.
Also Read: கோவிஷீல்டு: இந்தியாவுக்கு ரூ.600, அமெரிக்காவுக்கு ரூ.300 - ஓரே தடுப்பூசி வெவ்வேறு விலைகளா?!
புனேவில் மருந்து உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவ தடுப்பூசி பற்றாக்குறை மட்டும் காரணம் இல்லை." எனத் தெரிவித்திருக்கிறார்.
அதே நேரம் தேர்தல், கும்பமேளா பற்றியெல்லாம் கேட்டதற்கு, ``அவை தொடர்பாக நான் கருத்து தெரிவிக்கவும் விரும்பவில்லை. அது மிகவும் சென்சிட்டிவான பிரச்னை. அதைப் பற்றி நான் உங்களுக்கு சரியான பதில் சொன்னாலோ அல்லது தேவையான பதில் சொன்னாலோ என் தலையே வெட்டப்படலாம்" எனக் கூறியிருக்கிறார்.
இந்தப் பேட்டியில் இந்தியாவிற்கு வெளியேயும் கோவிஷீல்டு உற்பத்தி தொடங்கப்படலாம் என பூனவாலா தெரிவித்ததைத் தொடர்ந்து சீரம் நிறுவனத்தின் உற்பத்தி பாதிக்கப்படுமா என்பது குறித்து கேள்வி எழுந்தது. அதுகுறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ள அவர், ``இந்தியாவில் கோவிஷீல்டு உற்பத்தி தொடர்ந்து தடையின்றி நடந்துவருகிறது. நான் இன்னும் சில நாட்களில் இந்தியா திரும்பிய பின்பு அந்தப் பணிகளை மேற்பார்வையிடுவேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/news/serum-institute-adar-poonawalla-says-he-received-threats-from-powerful-persons-of-india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக