அஸ்ஸாம் மாநிலத்தில் எதிர்பார்த்தபடியே, பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு, மெஜாரிட்டிக்குத் தேவையான இடங்களை விட
கூடுதலான இடங்களில் முன்னிலையில் உள்ளது.
126 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாம் சட்டசபைக்கு, மார்ச் 27, ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றன. வாக்கு எண்ணிக்கை, இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவே ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் எதிர்பார்த்தபடியே பாஜக முன்னிலையில் உள்ளது. முற்பகல் 12.30 மணி அளவில் பாஜக 81 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 44 இடங்களிலும், பிற கட்சிகள் ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளன.
ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டி எண்ணிக்கை 64 ஆக உள்ள நிலையில், பாஜக அதையும் தாண்டி கூடுதலான இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால், பாஜக
கூட்டணி சார்பில் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் மீண்டும் அஸ்ஸாம் மாநில முதலமைச்சராக பதவியேற்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்
என்பதில் அக்கட்சி மிகவும் முனைப்புடன் தேர்தல் வியூகங்களை வகுத்துச் செயல்பட்டது. வழக்கம்போல் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவில் தொடங்கி, அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்தில்
தீவிரமாக ஈடுபட்டனர்.
அஸ்ஸாம் மாநிலத்தில் 2001 ஆம் ஆண்டு தொடங்கி 2016 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.
Also Read: அஸ்ஸாம் சட்டசபைத் தேர்தல் 2021: ஆட்சியைத் தக்க வைக்குமா பாஜக?
காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்கத் தலைவராக திகழ்ந்த தருண் கோகாய், கடந்த 2016 ஆம் ஆண்டு மறைந்ததற்கு பின்னர், வேறு மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் இல்லாமல் காங்கிரஸ் தவிக்கிறது. இந்த நிலையில், அதனை ஈடுகட்டுவதற்காக இந்தத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அன்சாலிக் கனமார்ஷா, பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜகவின் நீண்ட நாள் கூட்டாளியான போடோலேண்ட் மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொண்டு மெகா கூட்டணியை காங்கிரஸ் அமைத்தது குறிப்பிடதக்கது.
source https://www.vikatan.com/government-and-politics/election/assam-assembly-election-2021-bjp-leads-in-the-race-and-likely-to-retain-state-control-again
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக