தமிழக சட்டப்பேரவை முடிவுகள் வரத் தொடங்கிவிட்டன. இதுவரை வந்துள்ள முன்னணி நிலவரங்களின்படி, பெரும்பாலான தேர்தல் கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் கொஞ்சம் அசைத்துப் பார்த்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க வின் கூட்டணி பலத்துடன் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல தற்போது வரை 5 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது.
பா.ஜ.க மூத்த தலைவர்கள் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு கட்டமாக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றது இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. தற்போது வரை திருநெல்வேலி, உதகமண்டலம், துறைமுகம், தாராபுரம், நாகர்கோவில் ஆகிய ஐந்து தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதற்கான காரணங்களை ஆராயந்தோம்.
தாராபுரம் - எல்.முருகன் முன்னிலை
தாராபுரத்தில் போட்டியிட்டுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் முன்னிலையில் இருக்கிறார். எல்.முருகன் இந்தத் தொகுதியைச் சேராதவர் என்பது தேர்தலுக்கு முன் அவருக்கு இருந்த மைனஸாகப் பார்க்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் அதாவது பிரதமர் மோடி உட்பட அனைத்து தலைவர்களும் முருகனுக்காக தாராபுரத்தில் பிரசாரம் செய்தனர். அதுமட்டுமல்ல அ.தி.மு.க வினர் வாக்குகளும் அவருக்கு கைகொடுத்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல் தொகுதியில் கணிசமாக புழங்கிய `வைட்டமின் ப’ -வும் எல்.முருகன் முன்னிலையில் இருப்பதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
ஊட்டியில் பா.ஜ.க வேட்பாளர் போஜராஜன் முன்னிலை
ஊட்டியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் போஜராஜன் கிட்டத்தட்ட 6,000 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். பா.ஜ.க-வின் கட்டமைப்பு ஓரளவுக்கு சிறப்பாக இருந்ததும் அவருக்காக கர்நாடக பா.ஜ.க-வினர் உதகமண்டலம் வந்து தேர்தல் வேலைகளைப் பார்த்ததும் நல்ல பலனைக்கொடுத்திருக்கிறது. அதுமட்டுல்ல சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான கணேஷ் மேல் மக்களுக்கு இருந்த அதிருப்தியும் போஜரானுக்கு வாக்குகளாக மாறி அவரை முன்னிலைப் பெறச் செய்திருக்கின்றன.
நாகர்கோவில் - பா.ஜ.க வேட்பாளர் காந்தி முன்னிலை
பா.ஜ.க முன்னிலையில் இருக்கும் மற்றொரு தொகுதி நாகர்கோவில். இங்கு பா.ஜ.க சார்பில் போட்டியிட்டுள்ள காந்திக்கு இப்பகுதி மக்களிடையே நல்ல மதிப்பு இருக்கிறது. அது மட்டுமல்ல இந்தத் தொகுதியில் இருக்கும் பா.ஜ.க வாக்குகளும் தொகுதிக்குள் தாராளமாக களமிறங்கிய `வைட்டைன் ப’ மட்டுமல்லாது. தி.மு.க வேட்பாளர சுரேஷ் ராஜன் மீதான அதிருப்தியும் வாக்குகளாக மாறியுள்ளன. தி.மு.க-வினர் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு தற்போதைய தேர்தல் முன்னணி நிலவரங்கள் சாட்சியாக இருக்கின்றன.
Also Read: கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல்... ஓங்கும் விஜய் வசந்த் கை!
திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன் முன்னிலை
திருநெல்வேலியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இருக்கிறார். வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே திருநெல்வேலி தொகுதிக்காக பா.ஜ.க சார்பில் வேட்புமனு தாக்கலைச் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது ஓவர் கான்பிடென்ட் என விமர்சிக்கப்பட்ட இவரது நடவடிக்கை குறித்த விமர்சனங்களுக்கு தற்போது வரையிலான தேர்தல் முன்னணி நிலவரங்கள் பதிலளித்துக்கொண்டிருக்கின்றன. தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டவர் என்பதால் மக்களிடையே இவருக்கு நல்ல அறிமுகம் இருந்தது. அதுமட்டுமல்ல தேவேந்திர குல வேளாளர் தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு அந்தச் சமூக மக்களின் வாக்குகளையும், இவர் சார்ந்த சமூகத்து மக்களின் வாக்குகளும் இவருக்கு நன்றாகவே கை கொடுத்திருக்கின்றன என்பதையே முன்னிணி நிலவரம் காட்டுகிறது. அதுமட்டுமல்ல தேர்தலுக்கு முந்தைய இரண்டு நாட்களுக்கு மிகப்பெரிய அளவில் லட்டுகளை விநியோகம் செய்ததும் இவரது முன்னணிக்கு காரணம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
தற்போது வரையிலான வாக்கு எண்ணிக்கை நிலவரங்களின் அடிப்படையில் முன்னணியில் இருப்பதை வைத்து அதற்கான காரணங்கள் ஆராயந்ததில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளிவரும் போது இந்த முடிவுகளில் மாற்றம் இருக்கலாம்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-leading-4-constituency-what-are-the-reason-behind-this
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக