130/80mmHg..!
"உங்களது BP இலக்கு, இந்த மேஜிக் எண்ணைத் தாண்டாமல் இருக்கவேண்டும்" என்று மருத்துவ ஆராய்ச்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
அதேசமயம்,
"உங்கள் பிபி எவ்வளவாக இருந்தாலும், அதிலிருந்து ஒரு அஞ்சு பாயின்ட் குறைஞ்சா..." என சில நன்மைகளைப் பட்டியலிடுகிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று..
அதைப்பற்றி அறிந்து கொள்ளும்முன் BP என்றால் என்ன, அது எவ்வாறு கண்டறியப்படுகிறது என்பதை சற்று அறிந்துகொள்வோம்.
பொதுவாக 120/80mmHg என்பது நார்மல் பிளட் பிரஷர் என்று சொல்லப்பட்டாலும், அதனை ஏன் மேலும், கீழும் இரண்டு எண்களால் எழுதுகிறோம் என்பதற்கு இருதயத்தின் செயல்பாட்டை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
மனித உடலில் சராசரியாக உள்ள 5.5 லிட்டர் இரத்தமானது, ஏறத்தாழ 60,000 மைல்கள் பரப்பளவில் இருக்கும் இரத்த நாளங்கள் வழியாகத் தொடர்ந்து இருதயத்திலிருந்து உறுப்புகளுக்கும், உறுப்புகளிலிருந்து இருதயத்திற்கும் வற்றாத நதி போல ஓடிக்கொண்டே இருக்கிறது.
இதில் இருதயம் தன்னைச் சுருக்கி இரத்தத்தை உறுப்புகளுக்கு வெளியேற்றும் வேகம் சற்று அதிகமாயிருப்பதை 120மிமீ சுருங்கழுத்தம் (Systolic pressure) என்றும், உறுப்புகளிலிருந்து வரும் இரத்தத்தை இருதயம் விரிந்து உள்வாங்கும்போது வேகம் சற்று குறைவாக இருப்பதை 80மிமீ விரிவழுத்தம் (Diastolic pressure) என்றும், இவையிரண்டும் சேர்ந்து 120/80 மிமீ பாதரச அளவில் பிளட் பிரஷர் குறிக்கப்படுகிறது. இது இருதயத்தின் அளவு தான் என்றாலும் இந்த அளவினை நிலைப்படுத்த சிறுநீரகங்கள், அட்ரீனல் சுரப்பிகள் மற்றும் autonomic nervous system என்ற நரம்பு மண்டலம் ஆகியனவும் இதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
ஒரே வயதுடைய வெவ்வேறு மனிதர்களுக்கு உடல், எடை, உயரம் போன்றவை வித்தியாசப்படுவதுபோல, இவ்வழுத்தங்களும் வித்தியாசப்படலாம் என்றாலும், 140/90mmHg அல்லது அதற்கு மேற்படும்போது அதை உயர் இரத்த அழுத்தம் என்று வரையறுக்கும் மருத்துவர்கள், அதை 130/80mmHg என்ற மேஜிக் நம்பருக்கு கீழே வைத்திருக்க நமக்குப் பரிந்துரைக்கின்றனர்.
குடும்பத்தில் யாருக்கேனும் பிபி இருந்தாலோ, உடற்பருமன், சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால், மன அழுத்தம், உறக்கமின்மை போன்றவை இருந்தாலோ, புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் இருந்தாலோ, எப்போதும் பரபரப்புடன், கோபத்துடன் காணப்படும் டைப் ஏ பர்சினாலிட்டியாக இருந்தாலோ பிபி எகிறக்கூடும் என்பதுடன் சிறுநீரக, நுரையீரல் அல்லது ஹார்மோன்கள் பாதிப்புகள் இருந்தாலும் இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம் என்று கூறும் மருத்துவர்கள் இதனால் ஏற்படும் விளைவுகளையும் எச்சரிக்கின்றனர்.
ஆம்...
தொடர்ந்து இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, இரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்), பக்கவாதம் (ஸ்ட்ரோக்) மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஒரு கோடி மக்கள் வரை உயிரிழக்க நேரிடுகிறது என்பதுடன், நமது நாட்டில் சென்ற ஆண்டில் மட்டுமே பத்து லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளை இந்த High BP ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் வேதனை. ஆண்களில் நான்கில் ஒருவருக்கும், பெண்களில் ஐந்தில் ஒருவருக்கும் காணப்படும் இந்த உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறிந்து முறையான சிகிச்சை பெறுபவர்கள் நம்மில் வெறும் 24 சதவிகிததினர் மட்டுமே என்கிறது சமீபத்திய புள்ளிவிவரம். அதனால்தான், 130/80 என்ற இலக்கை வலியுறுத்தும் மருத்துவர்கள், தொடர்ந்து மருந்துகளை உட்கொள்ளவும் நமக்குப் பரிந்துரைக்கின்றனர்.
இத்தகைய சூழலில் தான், "உங்களுடைய பிரஷர் எவ்வளவாக இருந்தாலும், அதிலிருந்து ஒரு 5 பாயின்ட்கள் குறைந்தால்..." என்ற லான்செட் இதழின் சமீபத்திய ஆய்வு அதன் பலன்களைச் சொல்கிறது.
"உங்களது இரத்த அழுத்தத்தை ஒரு ஐந்து புள்ளிகள் மட்டுமே குறைத்தீர்கள் என்றால்...
- உங்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்புகள் 10% குறைகிறது.
- உங்களுக்கு ஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்புகள் 13% குறைகிறது.
- இரத்தநாளங்களில் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் 8% குறைகிறது.
- இதனால் ஆயுள் ஆரோக்கியம் கூடுகிறது.
என்று கூறும் இந்த ஆய்வு, இதற்கு பிபி மருந்துகளைப் பயன்படுத்தி ஐந்து பாயின்ட்களைக் குறைத்து, இந்த ஆய்வினை வெளியிட்டுள்ளது.
உண்மையில் நம்மால் மருந்துகளின் துணையின்றி, வாழ்க்கைமுறை மாற்றங்களால் மட்டுமே, அதாவது சரியான உணவு, உறக்கம், உடற்பயிற்சி ஆகியற்றின் மூலமாகவே இந்த ஐந்து பாயின்ட்களை கட்டுப்படுத்த முடியும் என்பதுடன் நமது ஆரோக்கியத்தையும் பெறமுடியும் என்பதுதான் நிதர்சனம்.
எனவே
பிளட் பிரஷரை துல்லியமாகக் கணித்து, அதனை கட்டுக்குள் வைத்து, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்திருப்போம்!
#WorldHypertensionDay
source https://www.vikatan.com/health/healthy/if-we-reduce-5-points-of-bp-it-will-be-helpful-in-many-ways
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக