கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் உடல்நலக்குறைவால் காலமானதால் இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. இடைத் தேர்தலில் பா.ஜ.க-வின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளராக வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் ஆகியோர் நேருக்கு நேர் மோதினர். இந்த தேர்தலில் பா.ஜ.க கொண்டுவர இருந்த கன்னியாகுமரி வர்த்தக துறைமுகம் முக்கிய அம்சமாக இடம்பெற்றது.
கடற்கரை கிராம மக்களின் வாழ்வாதாரத்தை வர்த்தக துறைமுகம் பாதிக்கும் என்ற பிரசாரம் பா.ஜ.க-வுக்கு எதிராக அமைந்தது. அதை விஜய் வசந்த் நன்றாக பயன்படுத்திக்கொண்டார். கடந்த 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வசந்தகுமார் 2,59,933 வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை வீழ்த்தினார்.
இருமுனைப் போட்டியில் பா.ஜ.க வெற்றிபெற வாய்ப்பு குறைவு என்ற நிலையில் வெற்றி வித்தியாசம் குறைவான அளவே இருக்கும் என பா.ஜ.க தரப்பில் கூறப்பட்டது. ஆனால் மூன்று சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 29,623 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்த் முன்னிலையில் உள்ளார். எனவே வசந்தகுமாரைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்த் வெற்றிப்பெறுவார் என காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
69 வயது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இது 9-வது பொதுத்தேர்தல். அரசியலில் மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணனை தனது முதல் தேர்தலிலேயே 38 வயதான விஜய் வசந்த் வீழ்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது என கலங்குகிறார்களாம் பா.ஜ.க வினர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/in-kanniyakumari-lok-sabha-by-election-vijay-vasanth-in-lead
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக