Ad

சனி, 1 மே, 2021

மம்தா பின்னடைவு; நெருங்கி வரும் பாஜக - திரிணாமுல் வெற்றி பெற்றாலும் தாக்குப்பிடிக்க முடியுமா?

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளது. அதே சமயம் பா.ஜ.க பெற்று வரும் இடங்களின் எண்ணிக்கையைப் பார்க்கையில், மம்தா ஒருவேளை ஆட்சியமைத்தாலும்,
அதை அவரால் நீண்ட காலத்துக்குத் தக்க வைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேற்கு வங்க சட்டசபைக்கு மொத்தமுள்ள 294 இடங்களில், 292 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 11.00 மணி நிலவரப்படி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 167 இடங்களிலும், பா.ஜ.க 122 இடங்களிலும், இடதுசாரிகள் 4 இடங்களிலும் மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

மம்தா

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் தற்போது காணப்படும் டிரெண்ட் கடைசி வரை நீடித்தால், மம்தா கட்சி மெஜாரிட்டிக்குத் தேவையான 148 இடங்களை விட கூடுதலாக பத்து, பதினைந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும்.

இதனிடையே முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் காலை 10.30 மணி நிலவரப்படி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுவேந்து அதிகாரியை விட 8,206 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கிய நிலையில் காணப்படுகிறார். இதே நிலை நீடித்தால் மம்தா, இந்தத் தொகுதியில் தோல்வியடையும் நிலை ஏற்படும்.

மம்தாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாக்கு எண்ணிக்கையில் ஒட்டு மொத்தமாக அந்தக் கட்சி முன்னிலையில் உள்ளபோதிலும், மம்தாவுக்கு
ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவு, அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும், திரிணாமுல் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டால்,
நந்திகிராமில் மம்தா தோற்றுவிட்டாலும் அவரே முதலமைச்சர் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன. முதலமைச்சராக பதவியேற்கும் ஒருவர், 6 மாத காலத்துக்குள் சட்டசபை உறுப்பினர் ஆக வேண்டும் என்பது விதி. எனவே தனது
கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரை ராஜினாமா செய்ய வைத்து, அந்தத் தொகுதியில் மம்தா போட்டியிட்டு வெற்றி பெற முடியும்.

பாஜக - திரிணாமுல் காங்கிரஸ்

அதே சமயம் மம்தா மீண்டும் முதல்வரானாலும், அவரை நீண்ட நாட்கள் நிம்மதியாக ஆட்சி நடத்த பா.ஜ.க விடாது. பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, தேர்தலில் முடிந்த அளவுக்கு முட்டி மோதி பார்ப்பது. முடியாவிட்டால் வெற்றி பெற்ற கட்சியின் எம்.எல்.ஏ-க்களைக் கொத்தாக தூக்கிக் கொண்டு வந்துவிடுவது என்பதே அதன் சமீபத்திய பாலிசியாக இருக்கிறது.

அந்த வகையில், தேர்தலுக்கு முன்னரே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.எல்.ஏ-க்களையும், அமைச்சர்களையும் கொத்தாக தூக்கிய பா.ஜ.க-வால், தேர்தலுக்குப் பின்னர் அதைச் செய்யாது என எதிர்பார்க்க முடியாது.

எனவே, மம்தா மீண்டும் ஆட்சியமைத்தாலும் அவரது ஆட்சி நீடிப்பது என்பது பா.ஜ.க அரங்கேற்றும் சித்து விளையாட்டுக்களைப் பொறுத்தே அமையும்!

Made with Flourish


source https://www.vikatan.com/government-and-politics/election/west-bengal-assembly-election-2021-mamata-trails-in-nandhigram-bjp-neck-to-neck-fight

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக