Ad

புதன், 26 மே, 2021

ஆண்டிகுவாவில் இருந்து படகில் தப்பிய வைர வியாபாரி மெஹுல் சோக்‌ஷி.. டொமினிகாவில் சிக்கினார்!

வைர வியாபாரிகள் நீரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்‌ஷியும் வெளிநாடுகளில் இருந்து வைரம் இறக்குமதி செய்ய பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டனர். இதில் நீரவ் மோடி லண்டனில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடந்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து உள்துறை அமைச்சகமும் இதற்கு அனுமதி கொடுத்துவிட்டது. இதையடுத்து நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி நடந்து வருகிறது. அவருடன் தலைமறைவான மெஹுல் சோக்‌ஷி ஆண்டிகுவா என்ற நாட்டில் குடியுரிமை வாங்கிக்கொண்டு தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் படி சி.பி.ஐ.மூலம் மத்திய அரசு ஆண்டிகுவா அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து ஆண்டுகுவா அரசு மெஹுல் சோக்‌ஷியை இந்தியாவுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மெஹுல் சோக்‌ஷி திடீரென காணாமல் போய்விட்டார். அவரை அந்நாட்டு அரசு தேட ஆரம்பித்தது. தற்போது ஆண்டிகுவாவுக்கு அருகில் உள்ள டொமினிகா என்ற குட்டி தீவு நாட்டில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரித்த போது படகு மூலம் டொமினிகா வந்திருந்தது தெரிய வந்தது. அங்கிருந்து கியூபாவுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது மெஹுல் சோக்‌ஷியை ஆண்டிகுவாவிடம் ஒப்படைக்க டொமினிகா போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆண்டிகுவா அரசு சோக்‌ஷியின் குடியுரிமையையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. மெஹுல் சோக்‌ஷி கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதை ஆண்டிகுவா அரசு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதே சமயம் தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து ஆண்டிகுவா கோர்ட்டில் வாதாடவும் சோக்‌ஷி தயாராகி வருகிறார். இதற்காக இங்கிலாந்தில் இருந்து பிரபல வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் விரைவில் மெஹுல் சோக்‌ஷி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று சி.பி.ஐ.நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மெஹுல் சோக்ஸி

நீரவ் மோடிக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள் தான் மெஹுல் சோக்‌ஷிக்கும் ஆஜராவார்கள் என்று தெரிகிறது. ஆனால் ஆண்டிகுவாவுக்கு கொண்டு வந்தால் சோக்‌ஷி சட்டத்தின் மூலம் தப்பித்துக்கொள்வார் என்பதால் அவரை நேரடியாக இந்தியாவிற்கு நாடு கடத்தும்படி டொமினிகா அரசிடம் தான் கேட்டுக்கொண்டிருப்பதாக ஆண்டிகுவா பிரதமர் கேஸ்டன் புரொவுன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டொமினிகா பிரதமரிடம் தான் பேசிவிட்டதாகவும், அவரும் நாடு கடத்த சம்மதித்துவிட்டதாகவும், மீண்டும் மெஹுல் சோக்‌ஷியை ஆண்டிகுவாவுக்குள் ஏற்கமாட்டோம் என்றும் புரொவுன் தெரிவித்துள்ளார்.

சி.பி.ஐ அலுவலகம்

டொமினிகாவில் சோக்‌ஷி குடியுரிமை பெற்று இருக்கவில்லை என்பதால் அந்நாட்டில் அவருக்கு எந்த வித சட்ட பாதுகாப்பும் கிடைக்காது என்றும் புரொவுன் தெரிவித்துள்ளார். அதேசமயம் சோக்‌ஷியை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை இந்தியாதான் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் சோக்‌ஷி டொமினிகாவில் இருந்து இந்தியாவுக்கு நேரடியாக நாடு கடத்தப்படுவார் என்று தெரிகிறது. ஆனால் டொமினிகா கோர்ட்டில் சோக்‌ஷி தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு எதிராக வழக்கு தொடரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.ஐ.சோக்‌ஷியை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான வேலையை துரிதமாக தொடங்கி இருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/mehul-chokshi-a-diamond-dealer-who-escaped-by-boat-from-antigua-caught-by-police

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக