Ad

வியாழன், 27 மே, 2021

ஜெயவர்த்தனே என்னும் ஜெயங்கொண்டான்: கிளாசிக்கல் கிரிக்கெட் பாஷை பேசிய பேட்ஸ்மேன், தன்னிகரற்ற தலைவன்!

பேட்டிங்கில், சைலண்ட் கில்லர், கில்லாடி ஃபீல்டர், ஃபீல்டுகளை ஆக்கிரமிக்கும் கேப்டன், கேப்டன் மெச்சும் கோச் என எடுத்த பாத்திரங்களில் எல்லாம் வல்லவராய் விளங்கிக் கொண்டிருப்பவர்தான் இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனே.
கிரிக்கெட்டின் பல பரிமாணங்களிலும் பரிணமித்து, முழுமையான கிரிக்கெட்டராக, ஏதோ ஒரு வகையில் தன்னை நிரூபித்துக் கொண்டேயிருக்கும் ஜெயவர்த்தனேயின் பிறந்தநாளான இன்று, அவரது கிரிக்கெட் கரியரில், யாரும் எட்ட முடியாதவாறு, அவர் நிறுவி வைத்துள்ள உயரங்களின் அளவீடுகளில் சில இங்கே!

அர்ஜுனா ரணதுங்கா மற்றும் அரவிந்தா டீ சில்வா தாங்கி வழிநடத்தி, உலகக்கோப்பையை வென்ற இலங்கை அணியில், அவர்கள் சென்றபின், வெற்றிடம் உருவாகாமல் அணியை அடுத்தடுத்த உயரங்களுக்கு எடுத்துச்செல்லும் வெற்றிச் சமன்பாட்டின் முக்கிய அம்சமாக அடையாளம் காணப்பட்டார் ஜெயவர்த்தனே.

காட்டாறாக அடித்து நொறுக்கி ரன்களைச் சேர்க்கும் ஓப்பனர்கள், லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒருபுறமெனில், தெளிந்த நீரோடையாக நகரும் மத்திய ஓவர்களிலும், பொறுப்பாக, நிதானமாக அதேசமயம், விக்கெட் வீழாமலும் பார்த்துக் கொண்டு, ஸ்ட்ரைக்கைச் சரியாகக் கைமாற்றி ரன்சேர்க்கும் மிடில் ஆர்டர் பேட்டிங்கும் ஒரு கலைதான். அந்த மிடில் ஓவர்களில் நங்கூரமாக நின்று, அணியை பல சந்தர்ப்பங்களில் மூழ்காமல் கரைசேர்க்கத் தொடங்கினார் ஜெயவர்த்தனே.

மஹேலா ஜெயவர்த்தனே

ஒருநாள் போட்டிகளில் 12650 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 11800 ரன்களும் குவித்து, கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு ஃபார்மட்டுகளிலும், 10 ஆயிரம் ரன்கள் எடுத்த 7 பேட்ஸ்மேன்களில் ஒருவராகத் திகழ்ந்ததோடு, அனைத்து ஃபார்மட்டிலும் சேர்த்து, அதிக ரன் அடித்தவர்கள் வரிசையில் 4-வது இடத்திலும் வந்து, சாம்பியன் பேட்ஸ்மேனாகவும் கோலோச்சியவர்.

எதிரணியை அச்சுறுத்தும் ஒரு பிம்பமாய் உருவான அவரின் ரன்பசிக்கு, எதிரணி பௌலர்கள் பலர், பலமுறை பலியாகத் தொடங்கினர். அந்த ரன்களையும் வெறிபிடித்த வேங்கையாக வேட்டையாடிச் சேர்க்காமல், நேர்த்தியாக, மிக ரம்மியமாகக் குவித்தார். அன்ஆர்தடாக்ஸ் ஷாட்களினால் பேட்ஸ்மேன்கள் ஸ்கோர் செய்யத் தொடங்கிய காலநிலையைச் சேர்ந்தவராக இருப்பினும், அவரது பேட் பேசியது என்னவோ, கிளாசிக்கல் கிரிக்கெட் பாஷையைத்தான். அவரது பேட்டின் டிரைவ்களும் ஃபிளிக் ஷாட்டுகளும் அத்தனை கவித்துவமானவை. லேட் கட் ஷாட்டுகளும், லெக் க்ளான்ஸ்களும், ரசிகர்களின் மனதைக் கொள்ளை அடித்தவை.

சேஸிங்கில், அவர், தன்னிகரற்றவராக திகழ்ந்தார். கிட்டத்தட்ட, அவரது 74 சதவிகிதம் அரைசதங்களும், 84 சதவிகிதத்துக்கும் அதிகமான சதங்களும், சேஸிங்கின்போது வந்தவைதான். அதிலும் அணி சேஸ் செய்து வென்ற போட்டிகளில், ஜெயவர்த்தனேயின் சராசரி, 53-க்கும் மேல்.

சேஸிங் ஸ்பெஷலிஸ்ட்தான் எனினும், முதலில் பேட்டிங் செய்யும் சந்தர்ப்பங்களிலும், நம்பத்தகுந்தவராகவே, ஜெயவர்த்தனே இருந்தார். அணிக்கு என்ன தேவையோ, அதற்கேற்றாற் போல் தன்னை வளைத்து உருவாக்கிக் கொண்டு எல்லாக் காலத்திற்கும் உரியவரான ஜெயவர்த்தனே, எல்லா ஃபார்மட்டுக்கும் தகுந்தவராக தன்னைத் தகவமைத்துக் கொண்டார். டெஸ்டில்தான், ஒரு முச்சதம் உள்ளிட்ட ஏழு இரட்டைச்சதங்களுக்கு மேல் குவித்தார் என்று பார்த்தால், அதற்கு நேர்எதிர் ஃபார்மட்டான டி20-யிலும், 64 பந்துகளில், சதமடித்துச் சிரிப்பார். இவையெல்லாம்தான் அவரது மிகப்பெரிய பலங்கள்.

ஜெயவர்த்தனே, சங்ககரா

2006-ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சங்ககாராவுடன் இணைந்து, 624 ரன்கள் பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்த ஜெயவர்த்தனே, 572 பந்துகளில், 374 ரன்களைக் குவித்து சாதனை நிகழ்த்தி, தனது திறனை நிரூபித்தார். அதே ஆண்டு, இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தின் போதும், ஒருநாள் தொடரில், 109 ஆவரேஜோடு 328 ரன்களையும், டெஸ்ட் தொடரில் 230 ரன்களையும் குவித்துக் காட்டி, 'ஃபிளாட் டிராக் புல்லி' என்ற விமர்சனத்துக்கும், துணைக்கண்டங்களில் மட்டும்தான் இவர் சாதிப்பார் என்னும் விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

அமைதியே உருவான அவரால், அழுத்தங்களைச் சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுப்புபவர்களுக்கு, இறுதிப்போட்டிகளில், தன்னுடைய இன்னொரு அவதாரத்தைக் காட்டுவார் ஜெயவர்த்தனே. அவருடைய ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளின் சராசரி 33 என்றால், அவர் விளையாடிய ஒருநாள் தொடர்களின் இறுதிப் போட்டிகளில் மட்டும், அவரது சராசரி, 38 ஆக இருந்திருக்கிறது. இதற்கும் ஒருபடி மேலே போய், ஐசிசி நடத்தும், மிக முக்கிய தொடர்களில் எல்லாம், ஜெயவர்த்தனேயின் ஆட்டத்திறன் பன்மடங்கு பல்கிப்பெருகும். இரண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டிகள், மூன்று டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் ஆடியுள்ள ஜெயவர்த்தனே, அத்தனை தொடர்களிலும் மிக முக்கியப் பங்காற்றினார்.

சரி, பேட்ஸ்மேனாக ரன்களைக் குவித்தார் என்றால், ஃபீல்டராக தன் அணிக்காக, பல ரன்களைத் தடுத்த பெருமையும் ஜெயவர்த்தனேவைச் சாரும். அதிவேகமாக செயல்பட்டு பந்துகளைத் தடுத்தல், ஓடியபடி குறிபார்த்து பந்தை எறிந்து, ஸ்டம்புகளைத் தகர்த்தல் இதிலெல்லாம் அவர் கெட்டிக்காரர். 218 கேட்சுகளை ஒருநாள் போட்டிகளில் பிடித்துள்ள ஜெயவர்த்தனே, ஸ்லிப்பில் அசைக்கமுடியாத அரணாகத் திகழ்ந்தார். இவருக்கும் முத்தையா முரளிதரனுக்கும் விக்கெட் எடுப்பதில் இருந்த புரிந்துணர்தல் குறித்து தனிக்கட்டுரையே வரையலாம். இருவரும் இணைந்து, டெஸ்டில் 77 விக்கெட்டுகளை இவ்வகையில் வீழ்த்தியுள்ளனர்.

இப்படி ஒரு முழுமையான கிரிக்கெட்டராக எல்லாத் தடங்களிலும், தடம் பதித்தார் ஜெயவர்த்தனே. தனியொரு வீரராகச் சாதிப்பது வேறு, அதே நேரத்தில் கேப்டனாக அந்த வீரரே மாறும்போது, அவருக்குக் கூடுதல் பொறுப்பும், சவால்களும் காத்திருக்கும். பல நெருக்கடியான நேரங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும், முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும், முடிவு தவறாகும்பட்சத்தில், அதற்குரிய விளக்கத்தையும் கொடுக்க வேண்டியிருக்கும். இதையெல்லாம், பிசிறின்றிச் சரியாகச் செய்பவர்கள்தான் தலைசிறந்த கேப்டனாக இருக்கமுடியும். அவ்வகையில், கேப்டன்ஷிப் முள்கிரீடம்தான்! ஆனால், அது ஜெயவர்த்தனேவுக்கு, அப்படி இல்லை. டெஸ்ட், ஒருநாள், டி20 என எல்லா அரங்கிலும், இலங்கைக்குத் தலைமை தாங்கிய ஜெயவர்த்தனே, ஜெயங்கொண்டானாய்த்தான் பல தருணங்களிலும் இருந்து வந்தார்.

மஹேலா ஜெயவர்த்தனே

இவரது தலைமையின்கீழ், இலங்கையில் நடந்த 11 டெஸ்ட் தொடர்களில், 8-ல் வெற்றி பெற்றிருக்கிறது. வொய்ட் பால் கிரிக்கெட்டில், பல சாதனைக் கதைகளை எழுதியுள்ளார். கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் 54 சதவிகிதமாக இருந்த அவரது வெற்றி சதவிகிதம், டி20 தொடர்களில் 67-ஆக இருக்குமளவு, சக்ஸஸ்ஃபுல் கேப்டனாகத்தான் இவர் இருந்து வந்தார்.

சாதாரண தொடராக இருந்தாலும் சரி, ஐசிசியால் நடத்தப்படும் மிகப்பெரிய தொடர்களாக இருந்தாலும் சரி, அவரது அணுகுமுறை ஒன்றாகத்தான் இருக்கும். அது வெற்றியை நோக்கி அணியை வழிநடத்துவதாகத்தான் இருக்கும். பொதுவாக, கேப்டனாகப் பதவியேற்ற பின்பு சில வீரர்களின், ஆட்டத்திறன் குறைந்து போவதுண்டு. ஆனால், ஜெயவர்த்தனேவைப் பொறுத்தவரை, அது அவரை இன்னமும் மேம்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும்.

மேற்கிந்தியத் தீவுகளில், 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையின் போது, நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், 109 பந்துகளில், 115 ரன்களை விளாசி, கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய அவர், சுழலுக்குச் சாதகமான பிட்ச்களில் மட்டுமே சாதிப்பார் என்ற கருத்தையும், அன்று மாற்றிக் காட்டினார்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக, உபுல் தரங்கா, அஜந்தா மெண்டீஸ், மலிங்கா, ஹெராத், மேத்யூஸ், சண்டிமால் உள்ளிட்ட பல வீரர்களை பட்டை தீட்டி இலங்கை அணியை வலுமிக்க அணியாக மாற்றிய பெருமையும் அவரைச் சாரும். கேப்டனாக இருந்தபோதும், அதிலிருந்து ஒதுங்கி சிலகாலம் இருந்தபோதும், அணியின் நலனை மனதில் நிறுத்தி அதற்குரிய வழிமுறைகளைத் தேடிக்கொண்டேதான் இருந்தார் ஜெயவர்த்தனே.
மஹேலா ஜெயவர்த்தனே

கேப்டனாக, களத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வெற்றிகளைத் தனதாக்கியதில்லை எனினும், எந்த வீரரை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அவரது பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைக் கண்டறிந்து, அவர்களைச் செதுக்கி, அவர்களிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வைப்பதுதான், ஜெயவர்த்தனேயின் சிறப்பம்சம். இதுதான் பயிற்சியாளராக மாறியபின்னும் அவருக்குக் கைகொடுத்தது.

தனது ஓய்வுக்குப் பின்பு, பயிற்சியாளராக, தனது வாழ்வின் இன்னொரு பொற்காலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஜெயவர்த்தனே. 2015-ல் பேட்டிங் கன்சல்டன்டாக இங்கிலாந்துடன் பயணித்த ஜெயவர்த்தனேவை மும்பை இந்தியன்ஸ், தங்களது பயிற்சியாளராக, 2017-ல் தங்கள் அணிக்குள் கொண்டு வந்தது. அதன்பின் நடந்ததெல்லாம் வரலாறு எனச் சொல்லுமளவு, அதற்கடுத்த நான்கு ஆண்டுகளில், மூன்று முறை சாம்பியனாக வலம் வந்தது மும்பை இந்தியன்ஸ். மும்பையின் மாஸ்டர் மைண்டாகக் கருதப்படும் ஜெயவர்த்தனே, வெற்றி வியூகங்களை வகுப்பது, அணிக்கான பிளேயிங் லெவனை இறுதி செய்வது, எதிரணியை வீழ்த்துவதற்கான தந்திரங்களைத் திட்டமிடுவது, அணி வீரர்களுக்கு அவர்களது ஆட்டத்திலுள்ள குறைபாடுகளைக் களைந்தெறிய உதவுவது என அத்தனையிலும் ராஜகுருவாக இருந்து வருகிறார்.

Also Read: சுனில் நரைன்: டி20-யின் ராஜா, சூப்பர் ஓவரையே மெய்டனாக வீசிய தந்திரக்காரன்... சாதித்தது எப்படி?

2017 ஐபிஎல் இறுதிப்போட்டியில், 129 ரன்களை மட்டுமே மும்பை இந்தியன்ஸ் சேர்த்திருந்தது. டிஃபெண்ட் செய்வதில் சக்கரவர்த்திகளாக இருந்தாலும், இந்த ரன்கள் இறுதிப்போட்டிக்கு எப்படி போதும் என வீரர்கள் மனச்சோர்வில் சுருள, டிரெஸ்ஸிங் ரூமில், அவர்களுக்குத் தனது பேச்சால், உத்வேகமேற்படுத்தி தோட்டாக்களாக முன்னோக்கிச் செல்ல வைத்தார் ஜெயவர்த்தனே. "நீங்கள் ஒரு ரன் வித்தியாசத்தில் வெல்லுங்கள், அல்லது பத்து ரன்கள் வித்தியாசத்தில் வெல்லுங்கள், அது எனக்குப் பிரச்னை இல்லை, ஆனால், வெற்றி மட்டுமே வேண்டுமென்று நினைத்து விளையாடுங்கள். தோற்று விடுவோம் என்ற எண்ணம்கூட உங்களை அதனை நோக்கி அழைத்துச் சென்றுவிடும். எனவே, அதனை உதறித்தள்ளி முன்னேறுங்கள்" என்று அவர் பெப் டாக் கொடுக்க, களமிறங்கிய மும்பை, கோப்பையோடுதான் திரும்பியது.

கேப்டனாக இருந்தபோதும் சரி, பயிற்சியாளராக மாறியபின்னும் சரி, தனது வீரர்களை எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்ததில்லை ஜெயவர்த்தனே. அதேபோல், எந்த வீரர் மீதும், தனது கருத்துக்களையும் திணித்ததில்லை. அவர்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வைத்து, அதனை மேம்படுத்துவதைத்தான் அவர் காலங்காலமாகச் செய்து வருகிறார். அவரது வெற்றியின் ரகசிய ஃபார்முலாவும் இதுதான்.

ஜெயவர்த்தனே

மும்பையின் துரோணராக இவரை வர்ணித்து, அவர்களது வெற்றிக்கே இவர்தான் காரணம் என்று பேசப்பட்டபோது, அதனை மிக வேகமாக மறுத்த ஜெயவர்த்தனே, அதில் திரைமறைவிலிருந்து இயங்கும் அத்தனை பேருடைய உழைப்பும் இருக்கிறது என்று பேசியிருந்தார். அதேபோல், எப்படி வீரர்களின் ஈகோவைக் கையாள்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ஈகோவும் நல்லதுதான், அது அவர்களுக்குள்ள மிகச்சிறந்த வீரரை வெளிக்கொணரும் என்று கூறியிருந்தார். இந்த நேர்மறைச் சிந்தனைகளும் அணுகுமுறைகளும்தான், ஜெயவர்த்தனேவுக்கு மேலும் மேலும் புகழ் சேர்த்துக் கொண்டிருக்கிறது. இதுதான் இந்திய கோச்சாக இவரை ஏன் நியமிக்கக்கூடாது என்ற கேள்வியையும் எழுப்ப வைத்தது.

வீரராக, கேப்டனாக தான் சாதிக்கத் தவறியவற்றைக்கூட பயிற்சியாளராக தற்போது சாதித்து வரும் ஜெயவர்த்தனே, தான் அடையாமல் மிச்சம் வைத்துள்ள உச்சங்களின் சொச்சங்களைக்கூட, இனிவரும் காலங்களில் எட்டுவார் என உறுதியாக நம்பலாம்.

பிறந்தநாள் வாழ்த்துகள் மஹேலா ஜெயவர்த்தனே!



source https://sports.vikatan.com/cricket/mahela-jayawardene-celebrating-his-legendary-cricket-career-on-his-birthday

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக