Ad

புதன், 26 மே, 2021

மும்பை: `பரம்பீர் சிங் ரூ.10 கோடி கேட்டார்’ - தொடரும் புகார்கள்.. கைது செய்ய மாநில அரசு தீவிரம்?

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் பதவி பறிப்புக்கு காரணமாக இருந்த மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர், இப்போது பல்வேறு புதிய சிக்கல்களில் மாட்டி வருகிறார். அனில் தேஷ்முக் மும்பையில் உள்ள பீர் பார் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களிடம் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி மாமூல் வாங்கி கொடுக்கும் படி குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் என்பவரிடம் கேட்டுக்கொண்டதாக மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார். இக்கடிதத்தை தொடர்ந்து இது குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அனில் தேஷ்முக், பரம்பீர் சிங்

இதனால் அனில் தேஷ்முக் தனது பதவியை இழந்தார். பரம்பீர் சிங் கமிஷனர் பதவியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. தானே போலீஸ் அதிகாரி பீம்ராவ் கொடுத்த லஞ்ச ஊழல் புகார் தொடர்பாக பரம்பீர் சிங் மீது போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். விரார் பகுதியை சேர்ந்த பில்டர் ஒருவரும் தன்னிடம் பரம்பீர் சிங் மிரட்டி பணம் பறித்தார் என்று புகார் செய்துள்ளார். அது குறித்தும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இவ்வழக்குகளில் பரம்பீர் சிங்கை கைது செய்ய மும்பை உயர் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. பரம்பீர் சிங், போலீஸ் அதிகாரி பிரதீப் சர்மா, ராஜ்குமார் ஆகியோர் மீதான மிரட்டி பணம் பறித்தல் புகாரை சி.ஐ.டி.போலீஸார் விசாரித்து வருகின்றனர். மற்றொரு புறம் தன் மீதான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும் என்று கோரி பரம்பீர் சிங் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு எதிராக லஞ்ச ஊழல் புகார் தெரிவித்ததால் பழிவாங்கும் நோக்கில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் சூதாட்டக்காரர் சோனு ஜலான் மகாராஷ்டிரா டிஜிபி சஞ்சய் பாண்டேயிக்கு எழுதிய கடிதத்தில் தன்னிடம் பரம்பீர் சிங் 10 கோடி ரூபாய் கேட்டதாக கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தை தொடர்ந்து சோனு ஜலானை அழைத்து சி.ஐ.டி.போலீஸார் வாக்குமூலம் வாங்கியிருக்கின்றனர். அதில் 2018-ம் ஆண்டு மே மாதம் என்னை மிரட்டி பணம் பறித்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கிரிக்கெட் சூதாட்டபுகார் தொடர்பாக கைது செய்தனர். அப்போது தானே போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங்கிடம் என்னை அழைத்து சென்றனர். பரம்பீர் சிங் என்னிடம் இந்தியாவில் உள்ள கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் குறித்த விபரங்களை கேட்டார்.

பரம்பீர் சிங்

அதோடு என்னையும் எனது குடும்பத்தினரையும் பெரிய வழக்கில் சிக்கவைத்துவிடுவேன் என்று மிரட்டினார். இதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் பிரதீப் சர்மாவிடம் ரூ.10 கோடி கொடுக்கவேண்டும் என்று பரம்பீர் சிங் தெரிவித்தார் என்று சோனு ஜலான் சி.ஐ.டி.போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த புதிய குற்றச்சாட்டு பரம்பீர் சிங்கிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்ததி இருக்கிறது. ஏற்கனவே மாநில அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்திருக்கும் பரம்பீர் சிங்கை கைது செய்ய மாநில அரசு துடித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் உயர்நீதிமன்றம் அவரை கைது செய்ய தற்காலிக தடை விதித்திருக்கிறது. இதனால் மாநில அரசு எதுவும் செய்ய முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் இந்த வழக்கு சூடுபிடித்துக்கொண்டே செல்கிறது.



source https://www.vikatan.com/news/crime/complaints-against-former-mumbai-police-commissioner-continues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக