Ad

வெள்ளி, 7 மே, 2021

`மம்தா இப்படி தான் அரசை வழிநடத்துகிறாரா?’ - மேற்கு வங்கத்தில் கைதான வானதி சீனிவாசன் காட்டம்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஆட்சி அமைக்க 148 தொகுதிகளைக் கைப்பற்றினால் போதும் என்ற நிலையில், மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளைக் கைப்பற்றித் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவிருக்கிறது. கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும், கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரியை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு 1,737 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். மம்தா பானர்ஜியின் வலதுகரமாக இருந்த சுவேந்து அதிகாரி பாஜக பக்கம் சென்று தற்போது மம்தாவை வீழ்த்தியிருக்கிறார்.

மம்தா பானர்ஜி

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் மம்தா தோற்றதால் விரக்தியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு பதிலடியாகவும், திரிணாமூல் காங்கிரஸ் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றி விட்டது என்ற விரக்தியிலும் பாஜக தொண்டர்களும் வன்முறையில் ஈடுபட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன. மாநிலத்தின் பல இடங்களில் வெடித்த மோதலால் சுமார் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மேற்கு வங்க போலீஸார் தெரிவிக்கின்றனர். அதில் சுமார் 10 பேர் பா.ஜ.க தொண்டர்கள் என்றும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பா.ஜ.க-வினர் தற்போது மேற்கு வங்கம் கலவரத்தினை கையில் எடுத்து பெரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். முன்னதாக பா.ஜ.க தேசிய தலை ஜே.பி நட்டா மேற்கு வங்கம் வந்து பாதிக்கப்பட்ட பா.ஜ.கவினர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை `ரத்தம் படிந்த கைகள்’ என கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் மேற்கு வங்க வன்முறையைக் கண்டித்து தலைநகர் கொல்கத்தாவில் நேற்று பா.ஜ.க சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜ.க மகளிர் அணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன், பா.ஜ.க எம்.பி. ரூபா கங்குலி, மேற்கு வங்க மாநில பா.ஜ.க மகளிர் அணித் தலைவர் அக்னிமித்ரா பால் உள்ளிட்டோரை அம்மாநில போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் வானதி சீனிவாசன், ``மேற்கு வங்கத்தில் அமைதியான போராட்டங்கள் கூட தவறா? மம்தா பானர்ஜி இப்படி தான் தனது அரசாங்கத்தை நடத்துகிறாரா? இங்கு எதாவது சுதந்திரம் இருக்கிறதா? கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி, அமைதியான முறையில் ஊடகத்தினருரிடம் பேசும் போது நான், பா.ஜ.க எம்.பி. ரூபா கங்குலி, மேற்கு வங்க மாநில பா.ஜ.க மகளிர் அணித் தலைவர் அக்னிமித்ரா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டோம். தலைவர்களுக்கு கூட இதுதான் நிலைமை என்றால், மம்தா மக்கள் மீது இரக்கமற்றவராக இருப்பார் என்று நான் அஞ்சுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: மேற்குவங்கம்: தேர்தல் முடிவுகளால் வெடித்த மோதல்; 14 பேர் பலி! - பதற்றமான சூழலில் பதவியேற்ற மம்தா



source https://www.vikatan.com/government-and-politics/politics/vanathi-srinivasan-arrested-in-west-bengal-in-protest-against-the-ruling-tmc-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக