Ad

வியாழன், 27 மே, 2021

தூத்துக்குடி: வசவப்பபுரத்தில் முதுமக்கள் தாழிகள்; இங்கும் அகழாய்வு நடத்த மக்கள் கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகில் உள்ளது வசவப்பபுரம். இவ்வூர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களின் எல்லையாக உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை போன்ற பகுதியில் மாநில அரசு அகழாய்வு செய்து பல்வேறு பொருள்களைக் கண்டெடுக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது ஊரடங்கினால் அகழாய்வுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வசவப்பபுரம் பரம்புப் பகுதிலும் பல முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.

அதிகாரிகள் ஆய்வு

அந்த தாழிகளுக்குள் விதவிதமான ஜாடிகள் உள்ளிட்ட மண்பாண்டங்களால் ஆன பொருள்கள், இரும்பு ஆயுதங்கள், விளக்கு தூபம் உள்ளிட்ட பல வகையான பொருள்களும் கிடைத்துள்ளன.

”எங்க ஊர்ல மழை பெய்ஞ்சாலே, வித்தியாசமான மண் பானைகள், மண்ணாலான பொருட்கள் மண்ணுக்குள்ளருந்து வெளியே தென்படும். அப்படி கிடச்சப் பொருள்களைச் சேகரிச்சு வச்சிருக்கோம். இதை தாசில்தாரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். ஆதிச்சநல்லூர், சிவகளையில் அகழாய்வு நடத்துவதைப்போல வசவப்பபுரத்திலும், மாநில அரசு தொல்லியல் ஆய்வு நடத்தவேண்டும்” என்கின்றனர் ஊர்மக்கள்.

இதுகுறித்து எழுத்தாளரும் தொல்லியல் ஆய்வாளருமான முத்தாலங்குறிச்சி காமராசுவிடம் கேட்டோம், "தாமிரபரணி ஆற்றங்கரை நெடுகிலும் பழங்கால தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் பல இடங்களில் புதையுண்டு கிடக்கின்றன என்பதை, கடந்த 1902-ல் ஆய்வு செய்த அறிஞர் அலெக்ஸாண்டர் இரியா கண்டுபடித்தார்.

மண், இரும்பினாலான பொருள்கள்

ஆதி கால மக்கள் வாழ்ந்த இடம் தாமிரபரணி ஆற்றங்கரையே என்பதை அறிந்த அவர், தாமிரபரணிக் கரையோரமுள்ள 37 இடங்களில் தொல்பொருள் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அந்த இடங்களில் சிறிய ஆய்வுகளையும் மேற்கொண்டார். அந்த 37 இடங்களுக்கும் எப்படிச் செல்ல வேண்டும் என்று, 100 வருடங்களுக்கு முன்பே வரைபடமும் தயாரித்து அதை ஆவணப்படுத்தியுள்ளார். அதில், இந்த வசவப்பபுரம் பகுதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலெக்ஸாண்டர் இரியா கூறிய 37 இடங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் மனுதாராக சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தேன். அதற்காக கடந்த ஆண்டு மாநில அரசு ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரண்டாம் கட்ட ஆய்வும், கொற்கையில் முதல் கட்ட ஆய்வும் நடத்த நிதியும் ஒதுக்கீடு செய்தது. அதுபோலவே தாமிரபரணி கரையில், அலெக்ஸாண்டர் இரியா அடையாளம் கண்ட தொல்லியல் தலங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவித்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ததுடன், ஆய்வுக்குழுவையும் நியமித்துள்ளது.

அதிகாரிகள் ஆய்வு

ஆனால், ஊரடங்கினால் ஆய்வுப் பணிகள் தடைப்பட்டுள்ளன. இதற்கிடையில், வருகிற செப்டம்பர் மாதம்வரை இவ்விடத்தில் ஆய்வு செய்ய மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, முதல் கட்டமாக வசவப்பபுரம் பரம்பு பகுதியை அகழாய்வாளர்கள் ஆய்வு செய்து முறையான அறிக்கை அனுப்ப வேண்டும்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/archaeology/ancient-antiques-found-in-vasavappapuram-as-people-request-for-excavation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக