Ad

செவ்வாய், 4 மே, 2021

``எனது கருத்தை சினிமா மூலம் கொண்டு செல்வேன்!” - ட்விட்டர் கணக்கு முடக்கம் குறித்து கங்கனா

பாலிவுட்டில் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சைக்குறிய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்காக ட்விட்டர் நிர்வாகம் பல முறை கங்கனா மீது நடவடிக்கை எடுத்து சில மணி நேரம் கணக்கை முடக்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளரான கங்கனா, மும்பை போலீஸார் குறித்து மிகவும் மோசமாக விமர்சித்த போது சிவசேனா கங்கனாவை கடுமையாக கண்டித்தது. இதனால் கங்கனா தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். அதன் பிறகு பிரதமர் மோடி பாதுகாப்பு கொடுத்த பிறகுதான் மும்பைக்கு வந்தார். அடிக்கடி மகாராஷ்டிராவில் உள்ள சிவசேனா கூட்டணி அரசு குறித்து சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தற்போது மேற்கு வங்க தேர்தலுக்கு பிறகு நடந்த வன்முறை தொடர்பாக கங்கனா ட்விட்டரில் வெளியிட்ட பதிவுக்காக அவரின் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் நிரந்தமாக முடக்கியுள்ளது.

முடக்கப்பட்ட பக்கம்

கங்கனா மேற்கு வங்க தேர்தல் தொடர்பாக சில வீடியோ பதிவுகளை பதிவிட்டதோடு, பிரதமர் நரேந்திர மோடி, மம்தா பானர்ஜியை அடக்கவேண்டும் என்றும் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும். பாஜக வெற்றி பெற்ற அசாம், புதுச்சேரியில் எந்த வித வன்முறையும் நடக்கவில்லை. ஆனால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டு வங்காளம் பற்றி எரிகிறது என்று தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிட்டு இருந்தார். நேரு மற்றும் இந்திரா காந்தியையும் இதில் இழுத்திருந்தார். இதையடுத்து கங்கனா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ட்விட்டரில் ஏராளமானோர் பதிவிட்டு இருந்தனர். இப்பதிவுகளை தொடர்ந்தே ட்விட்டர் நிர்வாகம் கங்கனாவின் கணக்கை நிரந்தரமாக முடக்கியுள்ளது.

இது குறித்து ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மீண்டும் மீண்டும் ட்விட்டர் விதிகளை மீறி செயல்பட்டதால் கங்கனாவின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. எங்களது நடத்தை கொள்கையின் படி ஒருவரை துன்புறுத்தும் வகையில் பதிவிடக்கூடாது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தார். கணக்கை முடக்கியவுடன் கங்கனா அளித்த பேட்டியில், ``ட்விட்டர் நிர்வாகம் எனது கணக்கை முடக்கியதன் மூலம் அவர்கள் அமெரிக்கர்கள் என்ற என் கருத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளையர்கள் மற்றவர்களை அடிமைப்படுத்த உரிமை உண்டு என்று நினைக்கின்றனர். அவர்கள் நாம் என்ன பேசவேண்டும் என்ன செய்யவேண்டும் என்று சொல்ல விரும்புகின்றனர். எனது கருத்தை வேறு தளங்கள் மூலமும், சினிமா மூலமும் கொண்டு செல்வேன். நாட்டில் மக்கள் எங்கு துன்புறுத்தப்படுகிறார்களோ அவர்களுக்காக எனது இதயம் துடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். கங்கனா ட்விட்டரில் பதிவிட்டிருந்த கருத்தை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டு இருந்தார். ஆனால் அதற்காக இன்ஸ்டாகிராமில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கங்கனாவின் சகோதரி ரங்கோலியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/india/post-election-riots-controversial-post-permanently-freezes-actress-ganganas-twitter-account

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக