நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்களில் கமல்ஹாசனும் ஒருவர். அவரது மக்கள் நீதி மய்யம் கட்சி எதிர்கொண்ட முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் எதிர்பார்ப்பு கூடியது. கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராகக் களம் கண்டவர், பரபரப்பின் உச்சத்தில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க-வின் வானதி சீனிவாசனிடம் தோல்வி கண்டார்.
கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் இரண்டாம் இடம் பெற்ற நிலையில், அவரின் கட்சியினர் போட்டியிட்ட எல்லாத் தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தனர். அந்தக் கட்சியின் நட்சத்திர வேட்பாளரான நடிகை ஸ்ரீப்ரியா, தனது சொந்த தொகுதியான மயிலாப்பூரில் போட்டியிட்டார். 14,850 வாக்குகள் பெற்று, மூன்றாம் இடமே பிடித்தார். தேர்தல் தோல்வி குறித்து ஸ்ரீப்ரியாவிடம் பேசினோம்.
``50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் கட்சியினர், அதிகளவில் செலவு செய்து தேர்தலை எதிர்கொண்டனர். மற்ற பல்வேறு கட்சியினர் ஏற்கெனவே தேர்தல் களத்தைப் பலமுறை எதிர்கொண்டவர்கள். நாங்கள் கட்சியைத் தொடங்கி சில ஆண்டுகளே ஆகும் நிலையில், வாக்குக்கு ஒரு ரூபாய்கூட தராமல் தேர்தலை எதிர்கொண்டோம். அது மட்டுமன்றி, `வாக்குக்குப் பணம் வாங்காதீர்கள்’ என எங்கள் கட்சியைத் தவிர வேறு யார் சொன்னார்கள்? தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு வெறும் 15 நாள்கள் மட்டுமே பிரசாரக் களத்துக்குச் செல்ல நேரம் இருந்தது.
கொரொனா விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்த வேட்பாளர் என என்னைப் பல்வேறு பத்திரிகைகளும் குறிப்பிட்டன. அந்த வகையில், நிதானமாகவும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்தும்தான் பிரசாரம் செய்தேன். கொரோனா பிரச்னை இல்லையெனில், இன்னும் கூடுதலான மக்களைச் சந்தித்திருக்க முடியும். அவர்களிடம் நெருங்கிப் பழகி அவர்களுடைய தேவைகளை முழுமையாகக் கேட்டறிந்து வாக்குகள் சேகரித்திருக்க முடியும். திரைப் பிரபலமாக இருந்தாலும்கூட, மயிலாப்பூர் தொகுதி மக்கள் வேட்பாளராக என்னைப் பார்த்தது இதுவே முதல் முறை.
சினிமாவில் இருந்து பலரும் அரசியலுக்கு வந்தாலும்கூட, அவர்களில் எல்லோரையும் மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதிலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் அரசியலுக்கு வரும் சிலரையும் மக்கள் சிலநேரம் ஏற்கத் தவறிவிடுகின்றனர். இந்தச் சூழலில், நான் 1970 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக இருந்திருக்கலாம். தற்போதைய சூழலில் நான் சினிமாவில் நடிப்பதில்லை. அதனால், இளம் வாக்காளர்களில் பலருக்கும் என்னைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கமல் சாரின் தலைமையையும், என்னையும் நம்பி ஏறத்தாழ 15,000 பேர் வாக்களித்துள்ளனர். என்னைப் பொறுத்தவரை இதுவே வெற்றிதான். எனக்குத் தோல்வி கிடைத்தது உண்மையிலேயே என்னை அதிகம் பாதிக்கவில்லை; வருத்தத்தையும் தரவில்லை. மாறாக, மாற்றத்துக்கான விதையை 15,000 பேரிடம் விதைத்திருக்கும் பெருமைதான் ஏற்படுகிறது. எனவே, நல்ல மாற்றத்துக்கான ஆரம்பம் தொடங்கியிருப்பதாகவே நினைக்கிறேன்” என்றவர் கமல்ஹாசனின் தோல்வி குறித்துப் பேசினார்.
``வழக்கமாக வெற்றி பெற்றவர்களைப் பற்றித்தான் அதிகம் பேசுவார்கள். ஆனால், தற்போதுவரை கமல் சாரின் தோல்வி குறித்துதான் பலரும் பேசுகிறார்கள். அவர் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், அவருக்கு ஏற்பட்ட தோல்விதான் எனக்குப் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அவர் கிளம்பிச் செல்லும் காட்சியைப் பார்க்கும்போது மனதளவில் மிகவும் வேதனைப்பட்டேன். அன்று இரவே அவரிடம் தொலைபேசியில் பேசினேன். `பார்த்துக்கலாம் விடுங்க’ என்றார்.
தோல்விகளைக் கண்டு தொண்டர்கள் வருந்தலாம். ஆனால், வெற்றி, தோல்வி எது வந்தாலும் ஒரு தலைவன் கலங்காமல் நடைபோட வேண்டும். அந்தத் துணிச்சல் கமல் சாருக்கு அதிகம் இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களே, அதற்கடுத்த தேர்தல்களில் மாபெரும் தோல்வியைக் கண்டிருக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிடுகையில், நாங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. எங்களுக்குச் சட்டமன்றத் தேர்தல் அனுபவம் புதிது. இதிலிருந்து படிப்பினைகளைப் பெற்று, வரக்கூடிய தேர்தல்களுக்கும் மக்கள் பிரச்னைகளுக்கும் பணியாற்றுவதில் கவனம் செலுத்துவோம்.
மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள், நமக்கான தேவை என்ன? ஒரு தரப்பினர் மட்டும் வளர்ச்சி பெறும் நிலையில், கணிசமான மக்கள் பின்தங்கிய நிலையிலேயே இருப்பது ஏன்? நமக்கான சரியான பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்காமல் போவதற்கும், வாழ்க்கைத் தரம் உயராமல் போவதற்குமான வேறுபாடு என்ன? இதுபோன்ற கேள்விகளுக்கு ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை, என்னுடைய அரசியல் பயண காலகட்டத்தில் இயன்றவரை ஏற்படுத்துவேன்” என்று முடித்தார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/mnm-candidate-sri-priya-speaks-about-tamilnadu-assembly-election-results
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக