சமீபத்தில் நடந்துமுடிந்திருக்கும் தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் எல்லா வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழ் சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்குமான தொடர்பை இந்தத் தேர்தல் பரிசீலனைக்கு உட்படுத்தியிருக்கிறது.
தமிழக அரசியலுக்கும், தமிழ் சினிமாவுக்குமான தொடர்பு நீண்ட நெடியது. திரையுலகிலிருந்து முதலமைச்சர்கள் உருவான மாநிலம் தமிழகம்; தமிழர்கள் சினிமா கவர்ச்சியில் அரசியலை இழக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் இதனால் உண்டு. தங்கள் அரசியல் கனவுக்கான பாதையாக சினிமாவைப் பயன்படுத்துகின்றனர் என்ற விமர்சனம் திரையுலகின் முன்னணி நடிகர்கள் மீது உள்ளது.
இந்தப் பின்னணியில் தான் கணிசமான அளவில் திரைத்துறையினர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி, நடிகை குஷ்பு, ஶ்ரீபிரியா, நகைச்சுவை நடிகர் மயில்சாமி என கட்சி சார்பிலும், சுயேட்சையாகவும் இந்தத் தேர்தலில் களம்கண்ட திரையுலகினரின் பட்டியல் நீண்டது. ஆனால், திரையுலகப் பின்னணி கொண்டவர்களில் இறுதியில் வெற்றிபெற்றது அம்பேத்குமார் என்கிற தயாரிப்பாளரும், திமுகவின் உதயநிதி ஸ்டாலினும் மட்டுமே!
இது ஒருபுறம் இருக்க, தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்த தேர்தல்களில், வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகிவிட்ட பிறகும் நடிகர்கள் திரைப்படங்களில் நடித்துவந்ததும் தனி வரலாறு.
தமிழ்நாடு சட்டமன்றத்துக்குள் முதன்முறையாக நுழைந்தவர் பாடகியும் நடிகையுமான கே.பி. சுந்தராம்பாள். 1957-ல் முதலமைச்சராக காமராஜர் இருந்தபோது, தமிழக சட்ட மேலவை உறுப்பினராக சுந்தராம்பாள் நியமிக்கப்பட்டார்.
ஆனால், ‘லட்சிய நடிகர்’ என்று அழைக்கப்பட்ட எஸ்.எஸ். ராஜேந்திரன் தான், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்துக்கு சென்ற முதல் நடிகர் ஆவார். 1957 தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த எஸ்.எஸ்.ஆர், 1962 தேர்தலில் அதே தேனி தொகுதியில் வெற்றிபெற்று திமுக உறுப்பினராக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்ட பிறகும் எஸ்.எஸ்.ஆர், தொடர்ந்து படங்களில் நடித்துவந்தார். 1962 முதல் 1967 வரையிலான காலகட்டத்தில் இவர் நடித்திருந்த படங்களின் எண்ணிக்கை 33.
இவருக்குப் பின் தமிழ்த் திரையுலகிலிருந்து தமிழக அரசியலுக்குள் நுழைந்தவர்களில் அந்தக் காலகட்டத்தில் குறிப்பிடத்தக்கவர், தமிழக அரசியலின் போக்கையே மாற்றி தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுத்தவர் எம்.ஜி. ராமச்சந்திரன். 1967 தேர்தலில் பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்த எம்.ஜி.ஆர், 1967 முதல் 1971 வரையிலான அந்தக் காலகட்டத்தில் 'விவசாயி', 'காவல்காரன்', 'அரச கட்டளை', 'அடிமைப் பெண்', 'ரிக்ஷாகாரன்' உள்ளிட்ட 23 படங்களில் நடித்தார்.
1971 தேர்தலில் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது 'நான் ஏன் பிறந்தேன்', 'அன்னமிட்ட கை', 'நினைத்ததை முடிப்பவன்', 'இதயக்கனி', 'ஊருக்கு உழைப்பவன்' உள்ளிட்ட 19 படங்களில் நடித்தார்.
மூன்றாவது முறையாக மீண்டும் 1977-ல் சட்டமன்றத்துக்குத் தேர்தெடுக்கப்பட்டபோது, அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. அப்போது 'நவரத்தினம்', 'இன்று போல் என்றும் வாழ்க', 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' ஆகிய படங்களில் நடிந்திருந்த நிலையில், முதலமைச்சராக அவர் பொறுப்பேற்க வேண்டியிருந்ததால், அத்துடன் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தினார்.
நவீன காலகட்டத்தில், திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் விஜயகாந்த். தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கி, தான் சந்தித்த முதல் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அரசியலில் ஈடுபடத் தொடங்கியபோதும், திரைப்படங்களில் நடித்துவந்த விஜயகாந்த், சட்டமன்ற உறுப்பினர் ஆனபிறகும், ஒரு நடிகராக தொடர்ந்துவந்தார். 2006 முதல் 2011 காலகட்டத்தில் 'பேரரசு', 'தர்மபுரி', 'சபரி', 'அரசாங்கம்', 'மரியாதை', 'எங்கள் ஆசான்', 'விருதகிரி' ஆகிய படங்களில் நடித்தார். 2011 தேர்தலில் ரிஷிவந்தியம் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜயகாந்த், சட்டமன்றத்தில் தேமுதிக எதிர்க்கட்சியாக உருவெடுத்திருந்த நிலையில் திரைப்படங்களில் நடிப்பது நின்றுபோனது.
மேலும், நடிகர்கள் ஐசரி வேலன், டி. ராஜேந்தர், ராமராஜன், வாகை சந்திரசேகர், ராதா ரவி, சரத்குமார், நெப்போலியன், எஸ்.வி.சேகர், கருணாஸ் போன்ற பலரும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவந்தனர்.
இந்தப் பின்னணியில் தான், நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் போட்டியிட்டனர். என்றபோதிலும், நடிகராக தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒருவரே!
ஆரம்பத்தில் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இயங்கிவந்த உதயநிதி, 2012-ல் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 'இது கதிர்வேலன் காதல்', 'நண்பேன்டா', 'கெத்து', 'மனிதன்' உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் உதயநிதி கதாநாயகனாக நடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக 2020-ல் வெளியான படம் 'சைக்கோ'. அதன் பிறகு தீவிர அரசியலில் இறங்கிய உதயநிதி, இன்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
'கண்ணை நம்பாதே', 'ஏஞ்சல்' ஆகிய படங்களில் தற்போது நடித்துவரும் உதயநிதி, இந்தி திரைப்படமான 'ஆர்ட்டிக்கிள் 15'-ன் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் பின்னணியில், திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பது குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.
“தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் நடிகர் ஒருவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என்று எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. மருத்துவர், வழக்கறிஞர் என சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் தங்கள் தொழிலைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு சட்டரீதியாக எந்தத் தடையும், நிபந்தனையும் கிடையாது. அதுபோலவேதான் சினிமா தொழிலும்!” என்கிறார் வழக்கறிஞர் ரமேஷ்.
ஆக, இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழ்த் திரையுலகுக்கும் தமிழக அரசியலுக்குமான நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சியில் சிறு அசைவை ஏற்படுத்தியிருக்கிறது; இது தற்காலிகமானதா, நிரந்தரமானதா என்பது அடுத்தடுத்த தேர்தல்களில் தெரிந்துவிடும்!
source https://www.vikatan.com/government-and-politics/cinema/tamil-actors-who-continue-to-act-in-films-after-being-elected-as-mla
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக