ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளி ஒருவர் 'மரண வாக்குமூலம்' என்ற பெயரில் எழுதியுள்ள கடிதம், சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவரும் சூழலில் பாதிக்கப்படுவோர், பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதி, மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து மரணங்களும் தொடர்கின்றன.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 600-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாவட்ட கலெக்டரும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை. மருத்துவர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் இல்லை. உணவுகளைச் சரியான நேரத்துக்குக் கொடுப்பதில்லை என்ற புகார்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
இந்தநிலையில், அங்கு சிகிச்சையிலுள்ள யோகேஸ்வரன் என்பவர் 'மரண வாக்குமூலம்' என்று தலைப்பிட்டு ஒரு கடிதம் எழுதி, அதைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அந்தக் கடிதத்தில் "கொரோனாவால் பாதிக்கப்பட்டு நானும் என் பெற்றோரும் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளோம். கடந்த இரண்டு நாள்களாகச் சாப்பாடு தரவில்லை. இதை மருத்துவர்களிடமும், கண்காணிப்பாளரிடமும் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அலட்சியமாக நடந்துகொள்கிறார்கள். கொரோனா தொற்றால் இறப்பதைவிட பசி, பட்டினியால் இறந்துவிடுவோம் என்பது உறுதியாகிவிட்டது. அதுபோல் இங்கு சுகாதாரக் கேடும் அதிகமாக இருக்கிறது. தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எங்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று தெரிவித்திருப்பவர்,
``என் உயிருக்கு எந்த ஆபத்து ஏற்பட்டாலும் அதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் முறையற்ற செயல்பாடுதான் காரணம்’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனை டீன் அல்லியிடம் பேசினோம். ``மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவர்கள், பணியாளர்களும் சிறப்பாகச் சேவை செய்துவருகிறார்கள். மூன்று வேளை சத்தான உணவு வழங்கப்படுகிறது. அனைத்து வசதிகளும் உள்ளன. ஒரு சில நோயாளிகள் தவறாகத் தகவல் பரப்புகிறார்கள். அர்ப்பணிப்போடு பணியாற்றும் மருத்துவர்களிடம் சண்டை போடுகிறார்கள். இவர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்றார்.
உணவுப் புகார் சம்பந்தமாக நேற்று ராமநாதபுரம் எம்.எல்.ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் மருத்துவமனையில் விசாரணை நடத்தினார். இன்று சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்வதாகத் தகவல் வந்திருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/letter-shared-by-corona-patient-and-ramnad-hospital-dean-explanation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக