Ad

செவ்வாய், 25 மே, 2021

புதுச்சேரி: உணவு, பி.பி.இ கிட் தரமில்லை என்று தெரிவித்த செவிலியர்களுக்கு சுகாதாரத்துறை மெமோ!

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் பொதுமக்களின் அலட்சியம் காரணமாக தொற்றை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை.

புதுச்சேரி கொரோனா சிறப்பு மருத்துவமனை

இது ஒருபுறமிக்க தொடர்ச்சியாக கொரோனா வார்டில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் தொற்று ஏற்பட்டு உயிரிழப்புகளை சந்தித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி செவிலியர் சங்கத்தின் தலைவியான பாக்கியவதி, அரசு கொடுக்கும் பி.பி.இ கிட்டை பயன்படுத்தினால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது என்றும், தரமில்லாத பி.பி.கிட்டினால்தான் செவிலியர்கள் தொடர்ச்சியாக உயிரிழக்கிறார்கள் என்றும் சமூக வலைத்தளத்தில் ஒரு ஆடியோவை பேசி பதிவிட்டிருந்தார்.

அதேபோல தன்னார்வலர்களிடம் இருந்து நன்கொடை பெற்று நோயாளிகளுக்கு உணவு வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்த செவிலியர்கள் அணுராதா மற்றும் சாந்தி, 'செவிலியர்களின் பாதுகாப்பு குறித்து யோசிக்காத அரசு, கொரோனா நோயாளிகளையாவது கவனிக்க வேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் விரைவில் குணமடைய வேண்டுமென்றால் புரதச் சத்து மிக முக்கியமானது.

செவிலியர்கள்

ஆனால் அவர்களுக்கு வெறும் கஞ்சியும், பாலும் மட்டுமே வழங்கப்படுகிறது. உணவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போனது ? மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் செய்துவரும் உதவிகள் காரணமாகவே நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

அரசு தெரிந்து செய்கிறதா அல்லது தெரியாமல் செய்கிறதா என்று தெரியவில்லை. உண்மையைக் கூற வேண்டுமென்றால் அனைவரிடமும் பிச்சை எடுத்து வந்து நோயாளிகளுக்கு சாப்பாடு போடுகிறோம். N95 முகக்கவசம், பி.பி.இ கிட் என அனைத்தையும் நாங்களே வாங்கிக் கொள்கிறோம்.

நோயாளிகளையாவது நீங்கள் பாருங்கள் என்று அரசிடம் கூறுகிறோம். ஆனால் அவர்களுக்கான உணவையும் நாங்கள் தான் வாங்கித் தர வேண்டியதாக இருக்கிறது. வெறும் ஜுரம் அடித்தால்தான் கஞ்சி கொடுக்க வேண்டும். ஆனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெறும் கஞ்சி கொடுத்தால் அவர்கள் எப்படி எழுந்து நடப்பார்கள் ?

அவர்களுக்கு புரதச் சத்துள்ள உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை” என்று பேசியிருந்தனர். அரசு மருத்துவமனை செவிலியர்களின் இந்த வாக்குமூலம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளும், மக்கள் பிரநிதிகளும் பி.பி.கிட் விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

Also Read: புதுச்சேரி: `பி.பி.இ கிட்டுக்காக பிச்சை எடுக்கிறோம்!’- அதிர வைக்கும் செவிலிய அதிகாரியின் வாக்குமூலம்

இந்நிலையில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர், ’உயரதிகாரிகளிடம் கலந்தாசிக்காமல் பி.பி.இ கிட்டின் தரம் குறித்துப் பேசிய அந்த மூன்று செவிலியர்களும் 48 மணி நேரத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும்’ என்று 24.05.2021 தேதியிட்ட அந்த கடிதத்தில் உத்தரவிட்டிருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/news/puducherry-3-nurse-who-complained-of-poor-ppe-kits-sent-memo

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக