Ad

செவ்வாய், 25 மே, 2021

மேடம் ஷகிலா - 19 : முற்போக்கு பேசும் பெண்களிடம் தங்கள் மனைவி பழகுவதை ஆண்கள் ஏன் விரும்புவதில்லை?!

விகடனின் ‘வல்லமை தாராயோ’ யூ-ட்யூப் சீரிஸ் மூன்று முக்கியமான விஷயங்களை பேசுகிறது. ஒரு பெண்ணுக்கு பிறந்த வீட்டில் இருந்த அடக்குமுறை, கணவன் மனைவி இடையேயான உறவு, கணவனின் உடன்பிறந்தவர்கள் அவளது முடிவுகளில் தலையிடுவதால் ஏற்படும் பிரச்னைகள், இவை எல்லாவற்றையும் தாண்டி அவள் எப்படி தன் உரிமைகளை மீட்டு சுயமரியாதையுடன் வாழ்கிறாள் என்பதுதான் கதை.

உடன் பிறந்தவர்களின் வாழ்க்கையில் அன்பின் பெயரால் தலையிடும் அதிகப்பிரசங்கித்தனம் இன்னமும் நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. உடன்பிறந்தவர்கள் என்றதும் கணவனின் உடன் பிறந்தவர்கள் மட்டும் பெண்களை கொடுமைப்படுத்துவது என நினைத்துக் கொள்கிறோம். பெண்ணின் உடன் பிறந்தவர்கள்கூட அவளது திருமண வாழ்வில் தலையிட்டு பிரச்னை உண்டு செய்யும் குடும்பங்களும் இங்கு உண்டு. ‘வல்லமை தாராயோ’ சீரிஸில் வரும் கௌசல்யா நம் எல்லோர் வீடுகளிலும் இருக்கிறா

கதாநாயகனான சித்தார்த்தை அவரது அக்கா கௌசல்யா மகனைப் போல வளர்க்கிறாள். அக்காவின் கணவரும் அவ்வாறே நினைக்கிறார். ஆனால், சித்தார்த்தின் திருமணம் முதல் அதன்பின் அவன் வாழ்வில் நடக்கும் அனைத்து முடிவுகளையும் தானே எடுக்க வேண்டும் என அவனது அக்கா கௌசல்யா நினைக்கிறார். சித்தார்த் தன் மனைவியை தேனிலவுக்கு அழைத்து செல்வது முதல் அவளை வேலைக்கு செல்ல அனுமதிக்காதது வரை அவனது அக்கா அந்த வீட்டில் நடக்கும் ஒவ்வொரு சிறு விஷயத்திலும் தன்னுடைய தலையீட்டை உறுதிப்படுத்திக் கொள்வார்.

ஒரேசமயத்தில் கௌசல்யா தனது தம்பியிடம், தம்பி மனைவியிடம், தம்பி மனைவியின் குடும்பத்தாரிடம் என வெவ்வேறு முகங்களை காட்டுகிறாள். சித்தார்த்தின் அக்கா கௌசல்யா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் சுபாஷினி கண்ணன். சுபாஷினியின் எக்ஸ்பிரஷன்ஸ் மற்றும் வசன உச்சரிப்பு கதை மற்றும் வசனங்களுக்கு கூடுதல் நம்பகத்தன்மையை அளிக்கிறது. அந்த கதாபாத்திரத்திற்கு மிகப் பொருத்தமான தேர்வாக சுபாஷினி கண்ணன் மிளிர்கிறார்.

வல்லமை தாராயோ

பொதுவாக இதுபோன்ற விஷயங்களை இன்று பேசும்போது, “இன்னிக்கு பொண்ணுங்க ரொம்ப ஸ்மார்ட்... இப்படி எல்லாம் நாத்தனார் தலையீட்டை அனுமதிக்க மாட்டாங்க” என்கிறார்கள். ஆனால், இன்று முப்பது வயதிற்கு மேல் இருக்கும் பெண்கள் பெரும்பாலும் கௌசல்யாவை போல ஒரு நாத்தனாரை கடந்துதான் வந்திருப்பார்கள்.

கல்வி, வேலை போன்ற விஷயங்களில் இளையோரை மூத்தவர்கள் வழிநடத்துவது நம் குடும்பங்களில் சாதாரணமான ஒன்று. அதற்கும் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சிறுவயதிலிருந்து தங்கள் உடன் பிறந்தவர்கள் தங்கள் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்று விரும்பும் மூத்தவர்கள் தங்கள் சகோதரி, சகோதரனின் திருமணத்திற்கு பிறகும் அவர்கள் வாழ்க்கை முடிவுகளில் தலையிடுவது பல குடும்பங்களில் நடக்கிறது.

தங்கள் உடன்பிறந்தவர்களின் மீதுள்ள அக்கறை மற்றும் அன்பினால் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து அவர்களை வழி நடத்துவதாக காரணம் சொல்கிறார்கள். வழிகாட்டுதல் என்பது வேறு நமது முடிவை மற்றவர்கள் மீது திணிப்பது வேறு. பெற்றோர்கள் கூட தங்கள் பிள்ளைகளின் வாழ்வில் குறிப்பிட்ட இடத்தில் நிற்க வேண்டியது அவசியம்.

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அறிவியல் வளர்ச்சியில் நம் வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் செல்போன், வாகன வசதிகள் வரை ஒவ்வொரு பத்தாண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் வருகின்றன. மக்களின் வாழ்க்கை முறை, திருமணங்கள், கணவன் - மனைவி உறவு என எல்லாவற்றிலும் மாற்றங்கள் உண்டு. ”நான் அந்தக் காலத்தில் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன். இன்று எல்லாம் எளிதாக நடக்கிறது” என சிலர் புலம்புவதை கேட்கலாம். இதை நேரடியாகவே தங்கள் சகோதரனின் மனைவியிடம் சொல்பவர்களும் நம் வீடுகளில் இருக்கிறார்கள்.

பொறாமை, ஈகோவினால் சகோதரர் மனைவியை அவளது பிறந்த வீட்டின் வசதியை ஒப்புமைபடுத்தி கீழ்த்தரமாக பேசுவது, முட்டாள் பட்டம் கட்டுவது பல வீடுகளிலும் நேரடியாக அல்லது மறைமுகமாக நடக்கிறது. குறிப்பாக தங்கள் கணவரிடம் சம உரிமை கோரும் பெண்கள் அதே உரிமை தங்களது சகோதரன் மனைவிக்கும் உண்டு என நினைப்பதில்லை. பெற்றோர், சகோதரர்கள் இடத்தில் செலுத்தும் ஆதிக்கத்தை சகோதரனின் மனைவியிடமும் செய்ய நினைக்கிறார்கள்.

தம்பி மனைவிக்கு கிடைத்திருக்கும் வசதியான வாழ்க்கை கௌசல்யாவுக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது. அவர்கள் இருவரும் ஹனிமூனுக்கு தனியாக செல்வது முதல் எல்லாவற்றையும் தம்பியை தன்னிடம் இருந்து பிரிக்கும் யுத்தியாக கௌசல்யா கற்பனை செய்து கொள்கிறாள். அதை ஒரு கட்டத்தில் அவளே ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோருகிறாள். ஆனால், நிஜத்தில் இறுதிவரை தங்கள் தவறை உணராத கௌசல்யாக்களே இங்கு அதிகம்.

வல்லமை தாராயோ

பெண் என்றதும் அலுவலகங்களில் வேலை கிடைத்துவிடும் என்று திரைப்படங்களில் காட்டுவதில் சற்றும் உண்மையில்லை. ஒரு பெண் வேலையில் சேர, தொழில் தொடங்க ஆண்களைவிட அதிக சிரமங்களை சந்திக்க வேண்டும். திருமணம், மகப்பேறு விடுப்பு, குடும்பம், வேலை நேரம் என நிறைய காரணங்களைக் காட்டி பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது நடுத்தர மற்றும் சிறு தொழிற்கூடங்களில் நடந்துகொண்டு இருக்கிறது. பெண்களுக்கு ஹர்ஷிதா, கௌதம் போல நண்பர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவுவதால்தான் பொருளாதார சுதந்திரம் பெரும்பாலானோருக்கு சாத்தியமாகிறது.

கதாநாயகன் நாயகி அபிராமியை அவளது நண்பன் மற்றும் உயர் அதிகாரியான கௌதமுடன் இணைத்து சந்தேகப்பட்டு பேசுகிறான். ஓரிடத்தில் அபிராமியிடம் கௌதம், “அந்த சூழ்நிலையில் நானாக இருந்தாலும் அப்படித்தான் யோசிப்பேன்… இந்த விஷயத்தில் எல்லா ஆண்களும் ஒன்றுதான்” என்று சொல்கிறான்.

”எல்லா ஆண்களும்” என்பதில் உடன்பாடு இல்லை. #NotAllMen அபிராமிக்கு சூழ்நிலையின் தீவிரத்தை புரிய வைப்பதற்காக பேச்சுவாக்கில் அப்படி ஒரு வாக்கியத்தை சொல்லி இருக்கலாம். இயக்குநரும், வசனம் எழுதியவரும் ஆண்களின் மேல் அவ்வளவு கடினமாக இருக்க தேவையில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.

வண்ணதாசன் அவர்களின் கதைகளில் ஒரு அத்தை, சித்தி அல்லது அண்ணி கதாபாத்திரம் ஆண்களுடன் சகஜமாக பேசக்கூடியவர்களாக, ஆண் நண்பர்கள் உடையவர்களாக இருப்பார்கள். ஊரில் உள்ள எல்லோருக்கும் அவர்கள் மீது தவறான கணிப்பு இருந்தபோதும் அவர்களின் கணவர்கள் அவர்கள் மீது அதீத நம்பிக்கையும், காதலும் உடையவர்களாக, அவர்களை புரிந்து கொண்டவர்களாக இருப்பார்கள். தங்கள் மனைவியின் சுதந்திரம் பற்றிய புரிதலுடன் இருப்பார்கள். இன்று நிறைய குடும்பங்களில் ஆண் – பெண் நட்பு இயல்பானது என புரிந்து கொள்கிறார்கள்.

சமூக வலைத்தளங்கள் வந்த இந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளி / கல்லூரி படிப்பை முடித்த பெண்கள் பெரும்பாலும் தங்கள் நண்பர்களின் தொடர்பை தொலைத்தவர்கள்தான். சுயமாக சிந்திக்கும், பொருளாதார சுதந்திரம் இருக்கும் பெண்கள் ஓரளவு தங்களுடைய நட்பை தக்கவைத்துக் கொள்கிறார்கள்.

‘வல்லமை தாராயோ’ சீரிஸில் கதாநாயகி அபிராமியின் வாழ்வில் துணை நிற்கும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் அவளது தோழிகளான அனு மற்றும் ஹர்ஷிதா. கல்லூரி தோழி அனு முற்போக்காக சிந்திக்கும் சுதந்திரமான பெண். அதன் காரணமாகவே அவளுடன் பழக அபிராமியின் குடும்பத்தினர் அனுமதிக்க மாட்டார்கள். பெற்றோர் மற்றும் கணவன் வீட்டினரின் எதிர்ப்பை தாண்டி அபிராமி அனுவுடன் நட்பை தொடர்கிறாள். அவர்களின் நட்பு எல்லா சூழ்நிலையிலும் தொடர்வதற்கு காரணம் அனு எப்போதும் அபிராமியை அளவுகடந்து நேசிப்பவளாகவும் அபிராமியின் கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பச் சூழலை புரிந்து கொள்பவளாகவும் இருக்கிறாள். பெண்களின் நட்புகள் பல ஆண்டுகளாக தொடர்வதற்கு அதிக புரிதலும் விட்டுக்கொடுத்தலும் அவசியம். மிகச் சில பெண்களுக்கே அது சாத்தியமாகிறது.

கிராமத்தில் இருந்து நகரத்துக்கு குடிபெயரும் கதாநாயகி அபிராமிக்கு பக்கத்து வீட்டு பெண் ஹர்ஷிதா தனது பால்கனியில் மது அருந்துவதை வைத்து அவளை தவறாக எண்ணுவாள். அவளுடன் பழக ஆரம்பித்த பிறகு ஹர்ஷிதாவின் நல்ல மனம் அபிராமிக்கு தெரியவரும். உணவுப் பழக்கம், அணியும் ஆடைகள் மற்றும் மது அருந்துவது அனைத்தும் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம். அதை வைத்து ஒருவரை நல்லவர், கெட்டவர் என்று தீர்மானிக்க கூடாது என்பதை அபிராமி புரிந்து கொள்ளும்போது அவளால் ஹர்ஷிதாவின்மீது இயல்பாக அன்பு செலுத்த முடிகிறது. ஹர்ஷிதா அபிராமிக்கு சொந்தக்காலில் நிற்பதற்கான அவசியத்தை உணர்த்துவதோடு மட்டுமல்லாமல் அதற்கான உதவியும் செய்கிறாள்.

பொதுவாக முற்போக்காக பேசும் பெண்களிடத்தில் தங்கள் மனைவி பழகுவதை ஆண்கள் விரும்புவதில்லை. இது சாதாரணமாக நம் வீடுகளில் நடக்கக்கூடியது. மனைவியைவிட அறிவில் குறைந்தவர்கள் எனத் தாங்கள் நம்பக்கூடிய பெண்களிடம் மட்டுமே தங்கள் மனைவியை ஆண்கள் சுதந்திரமாக நட்பு கொள்ள அனுமதிக்கிறார்கள்.

அபிராமியின் அண்ணன் அவளிடம் சுயமரியாதையின் முக்கியத்துவம் பற்றி திரும்பத்திரும்ப பேசினாலும் அவள்மேல் அவனுடைய முடிவுகளை திணிக்க மாட்டான். உடன் பிறந்தவர்கள் தனிமனித சுதந்திரத்தை அறிந்து அவர்களுக்கு நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு கதாநாயகியின் அண்ணன் சேது சிறந்த உதாரணம். தன் தங்கையின் உரிமைக்காக குரல் கொடுக்கும், பெண்ணியம் பேசும் முற்போக்குவாதியான சேது தனக்கு திருமண வாழ்க்கை ஒத்துவராது என திருமணம் செய்து கொள்ள மறுக்கிறான். பெண்களை சமமாக பார்க்கும் சேதுவை போன்றவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் பிறகு பெண்களுக்கு சம உரிமை இருக்கும் இல்லறம் எப்படி சாத்தியமாகும்? #JustAsking

இரண்டு விஷயங்கள் பற்றி குறிப்பிட்டு சொல்லவேண்டும்.

கிராமத்தில் இருந்து நகரத்துக்கு குடிபெயரும் அபிராமி ஆரம்பத்தில் உடையை வைத்து இன்னொருவரை Judge செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், எல்லா விஷயங்களிலும் முற்போக்காக சிந்திக்கும் அவளது தோழி அனு, ஜீன்ஸ் போட மறுக்கும் அபிராமியிடம், “உன்னைவிட உடல் பருமனாக இருப்பவர்கள் எல்லாம் போடும்போது நீ ஏன் யோசிக்கிற” என்பாள். இந்த #BodyShaming வசனம் துருத்திக்கொண்டு தெரிகிறது. தவிர்த்திருக்கலாம்.

ஆரம்பத்திலிருந்து நல்ல நண்பனாக இருக்கும் கௌதமிற்கு அபிராமியை பிடித்திருக்கும். ஆனால், ஒருபோதும் அவன் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டது இல்லை. அபிராமியின் விவாகரத்திற்கு பிறகு அவர்கள் இருவரின் பொதுவான நண்பர்கள் தூண்டுதலினால் அபிராமியை தனியாக அழைத்து அவளை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கௌதம் கூறுவான். அவளுக்கு விருப்பம் இல்லையெனில் இப்படியே நண்பர்களாக தொடருவோம் என்பான். யோசித்து பதில் சொல்லுமாறு சொல்லியிருப்பான். அங்கே அமைதியாக இருந்துவிடும் அபிராமி தனது மற்றும் தனது முன்னாள் கணவனுடைய குடும்பம் என எல்லோரும் இருக்கும் ஒரு நிகழ்வில் கௌதமிடம் அவளுடைய பதிலை கூறுவாள். அது தவறு. தனியாக அழைத்துப் பேசிய கௌதமிடம் அபிராமி தனது முடிவை அதே நாகரீகத்துடன் தனியாகத்தானே சொல்ல வேண்டும்?

வல்லமை தாராயோ

“நீங்க என்னுடைய நல்ல நண்பர். உங்கமேல எனக்கு மரியாதை இருக்கிறது.. மரியாதை மட்டும்” என்று எல்லோர் முன்னிலையிலும் கூறுவாள். ”மரியாதை மட்டும்” என்கிற வார்த்தைகள், அதை அபிராமி உச்சரிக்கும் விதம், Attitude எல்லாமும் சேர்ந்து அந்த இடத்தில் கௌதம் அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பியதே குற்றம் என்பதுபோல் எண்ணச் செய்கிறது.

பெண்கள் சுயமாக முடிவெடுக்கவும், தேவைப்பட்டால் தனித்து வாழவும் தைரியம்கொள்ள வேண்டும் என்பது சரிதான். அதேசமயம் விவாகரத்துக்குப் பின் தனித்து வாழும் ஒரு பெண், ஏற்கெனவே நன்றாக தெரிந்த அன்புமிக்க ஒரு நண்பனுடன் சேர்ந்து வாழ்வதில் எந்த தவறும் இல்லை. பெண் முன்னேற்றம் அல்லது பெண் விடுதலை என்றதும் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி தனித்து வாழ்வதாக 1980-களின் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அந்த காலம் மாறிவிட்டது. இன்றைய பெண்கள் மிக ப்ராக்டிக்கலானவர்கள். பாலசந்தர் காலத்து க்ளைமேக்ஸ் புரட்சிகள் தேவையில்லை. பெண்களிடம் ஒரு சர்வே எடுத்தால், பெரும்பாலான பெண்கள் அபிராமி அவளை நன்கு புரிந்துகொண்ட நண்பன் கௌதமுடன் சேர்வதுதான் சரி என்பார்கள்.

ஒரு சாதாரண கதை போல் தெரியும் இதுதான் இன்று நடுத்தர குடும்பங்களின் நிலை. இந்த சீரிஸை பார்க்கச் சொல்லி நான் பரிந்துரைத்த அவ்வளவு பெண்களும் ‘’பார்க்க ஆரம்பித்ததும் மனசு கனமாகி விட்டது, அழுகை வந்தது’’ என்றும் அபிராமியின் மாற்றங்கள் சிலருக்கு Inspirationஆக இருந்ததாகவும் கூறினார்கள்.

பெண்களை, அவர்களின் அகவுலகை சரியாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஆண்கள் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையை இந்த சீரிஸின் கதையும், வசனங்களும் ஏற்படுத்துகிறது. இந்த கதையை எழுதிய ’கோலங்கள்’ V. திருச்செல்வம், இயக்குனர் சிதம்பரம் மணிவண்ணன், வசனம் எழுதிய ஸ்ரீவித்யா மற்றும் அ. பாரி மற்றும் குழுவினருக்கு மனமார்ந்த அன்பும் நன்றியும்!



source https://cinema.vikatan.com/television/why-women-should-watch-vallamai-tharayo-youtube-series-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக