Ad

வியாழன், 27 மே, 2021

இரண்டாம் அலையால் சரியாத இந்தியாவின் ஏற்றுமதி; தொடர் வளர்ச்சிக்கு காரணம் என்ன?

கடந்த 2020-ம் ஆண்டின் இதே நேரத்தில், கொரோனாவின் கோரத் தாண்டவத்தை இந்தியா அனுபவித்துக் கொண்டிருந்தது. நாடு முழுவதும் போடப்பட்ட முழு ஊரடங்கால், அனைத்துத்துறை சார்ந்த தொழில்களும் முடங்கிப் போயின. குறிப்பாக, ஏற்றுமதி முற்றிலுமாகத் தடைபட்டுப் போனது.

ஆனால், இந்த ஆண்டு அப்படியில்லை. இந்தியாவின் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும், ஏற்றுமதி சார்ந்த இயக்கமானது நிற்கவில்லை. அது சீரான இயக்கத்தில் முன்னேற்றத்திலேயே இருக்கிறது. இதன் காரணமாக, நடப்பு நிதி ஆண்டின் முதல் ஏழு வாரங்களில், இந்தியாவின் ஏற்றுமதி 50.7 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது கடந்த 2019-2020-ம் நிதி ஆண்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பைவிட 11% அதிகமாகும்.

ஏற்றுமதி

அதே போல, கடந்த ஏப்ரல் மாதத்தில் 30.63 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருள்கள் நம் நாட்டிலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 10.36 பில்லியன் டாலர் அதிகமாகும். அதாவது, இந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி 17.62% வளர்ச்சி அடைந்துள்ளது.

``கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமெடுத்திருப்பதால், உலகின் பல நாடுகள், இந்தியாவிலிருந்து பொருள்கள் இறக்குமதி செய்வதை தடை செய்திருந்தாலும், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சிறப்பான செயல்பாட்டால் இந்த வளர்ச்சியினை அடைந்திருக்கிறோம்" என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி செயல்பாட்டின் களநிலவரம் என்ன, எந்தெந்தப் பொருள்களுக்கு, எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பான ஃபியோ (FIEO) அமைப்பின் இணை துணை இயக்குநர் உன்னிகிருஷ்ணனிடம் பேசினோம்.

உன்னி கிருஷ்ணன் தென்மண்டல அலுவலகத்தின் இணை, துணை பொது இயக்குநர், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு, (FIEO)

``தற்போதைய நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. கொரோனா அச்சம் காரணமாக, சில நாடுகள் இந்தியப் பொருள்களை இறக்குமதி செய்ய தடை விதித்திருந்தாலும், இந்தியாவின் உணவுப் பொருள்களுக்கு, குறிப்பாக, மிளகு, ஏலக்காய், மஞ்சள் மாதிரியான நறுமணப் பொருள்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

தற்போதைய நிலையில், உணவு விஷயத்தில் மக்கள் அதிக கவனம் செலுத்துவதால், வெளிநாட்டவர்கள்கூட, இந்திய பாரம்பரிய உணவுகளை சுவைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் காரணமாக அங்கு இந்திய உணவுப் பொருள்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. வழக்கம்போல, பழங்கள், காய்கறிகள் என விவசாயம் சாந்த உணவுப் பொருள்களும் ஏற்றுமதியில் முன்னணியில் இருந்து வருகின்றன.

மலேசியா, சிங்கப்பூர் தவிர, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகளாக அமெரிக்காவும் சீனாவும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஏப்ரல் மாதத்தில் மட்டும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகளின் மதிப்பு 400 சதவிகிதமும், அதைத் தொடர்ந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகளின் மதிப்பு 143.3 சதவிகிதமும் வளர்ச்சியடைந்துள்ளது.

இந்திய ஏற்றுமதிப் பொருள்களிலேயே இரும்பு மற்றும் எஃகு ஏற்றுமதி 210% வளர்ச்சியை எட்டியுள்ளது. அதேபோல, அலுமினியம், துத்தநாகம், நிக்கல், ஈயம், தகரம் போன்ற இரும்பு சாரா பிரிவுகளின் ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 110.5% வளர்ச்சி அடைந்துள்ளது.

மேலும், தொழில்துறை உபகரணங்களுக்கான ஏற்றுமதி 2020-ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 146.21 மில்லியன் டாலரிலிருந்து 2021-ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 1,174.23 மில்லியன் டாலராக உயர்ந்து, 703% வளர்ச்சியை எட்டியுள்ளது.

அதேபோல, மின்னணு உபகரணங்கள் பிரிவுக்கான ஏற்றுமதி 2020-ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 245.43 மில்லியன் டாலரிலிருந்து 2021-ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 853.1 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

விமானம், விண்கலம் மற்றும் அவற்றின் பாகங்களுக்கான ஏற்றுமதி 74.5 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதே சமயம், கப்பல்கள், படகுகள் மற்றும் மிதவைக் கட்டமைப்புகளின் ஏற்றுமதி 32.8% வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது" என்றார் தெளிவாக.

Export (Representational Image)

``சமீப காலமாக சீனா - இந்தியா இடையே ஏற்பட்ட எல்லை பிரச்னை காரணமாக உரசல் போக்குகள் அதிகரித்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக இந்தியாவிலிருந்து சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது. உலகில் உள்ள ஸ்டீல் உற்பத்தில் 60% பங்கை சீனா கொண்டிருந்தாலும், ஆறு சதவிகிதத்தைக் கொண்டிருக்கும் இந்தியாவிடமிருந்து அதிகமாக சீனா இறக்குமதி செய்வதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும், வர்த்தக ரீதியாக சீனா சொல்கிற தரவுகளில் உண்மைத்தன்மை இருப்பதாகத் தெரியவில்லை" என்றும் துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.



source https://www.vikatan.com/business/news/indias-export-business-does-not-affected-by-covid-second-wave

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக