Ad

வியாழன், 27 மே, 2021

மாணவர் இறப்பு முதல் பாலியல் புகார் வரை - பத்ம சேஷாத்திரி பள்ளி மீதான தொடர் சர்ச்சைகள்!

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்புகளின் போதும், வாட்ஸப் மற்றும் பேஸ்புக் சாட்-களிலும் மாணவிகளிடம் பாலியல மீறலில் ஈடுபட்டதாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இந்த விவகாரத்தை கையில் எடுத்து போலீஸ், ராஜகோபாலை கைது செய்த, போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது . கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் பள்ளியில் மாணவர்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக எழும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் பாலியல் வன்கொடுமை தடுப்பு அமைப்பின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதான ராஜகோபாலன்

இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் பத்ம சேஷாத்திரி பால பவன் பள்ளியில் தொடர்ந்து இதேபோல பல புகார்கள் எழுந்துகொண்டே தான் இருக்கின்றன. இதுவரை இந்த பள்ளி தொடர்பாக எழுந்த சர்ச்சைகளின் தொகுப்பை இங்கேர் பார்க்கலாம்.

Also Read: `நீ அழகாக இருக்கிறாய், சினிமாவுக்குப் போகலாமா' - பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர்மீது பாலியல் புகார்

1. 2012-ஆம் ஆண்டில் திரைப்பட இயக்குநர், நடிகர் மனோகரனின் மகன் ரஞ்சன் இந்தப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்தபோது பள்ளி நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பள்ளியின் நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ரஞ்சன் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட போது அவனுடன் 26 மாணவர்கள் நீச்சல் பயிற்சி மேற்கொண்டதுதான் விபத்திற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.

2. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பத்ம சேஷாத்திரி பள்ளியின் முன்னாள் மாணவர் எனவும் சரியாகப் பள்ளிக்கு வராததாலும், கட்டணம் செலுத்தப்படாததாலும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். இது குறித்து பள்ளியின் நிர்வாக உறுப்பினர் ஒய்.ஜி மதுவந்தி ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் கரீமா பேகம்

பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டது தொடர்பாக 2012-ஆம் ஆண்டில் மூத்த பத்திரிகையாளர் சிமி கார்வாலுக்கு அளித்த நேர்காணலில்,``உங்கள் மகனை கோடம்பாக்கம் தெருக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். பணம் தருவார்கள். பள்ளிக்கு அழைத்து வர வேண்டாம்” எனத் தனது அம்மாவிடம் பள்ளி நிர்வாகம் சொன்னதாகக் கூறியுள்ளார். மேலும், Notes of a Dream என்ற தன் வாழ்க்கை வரலாறு பற்றிய நூலில், ``அதிக அளவில் இசை தொடர்பாக அலைய வேண்டியிருந்தது. இசை மீதுள்ள ஆர்வமும் கூடுதல் காரணம். எனவே பள்ளிக்கு அதிக நாட்கள் மட்டம் போட நேர்ந்ததால் பள்ளி நிர்வாகம் கண்டித்திருக்கிறது’ எனவும் பகிர்ந்திருக்கிறார்.

3. பள்ளியின் பெயரில் சட்டவிதிகளுக்கு மீறி கொடைக்கானலில் ஒரு இடம் வாங்கியதாகவும், அதற்காக வருமான வரித்துறை அதிக வரிவிதித்துவிட்டதாகவும் அதை சரிசெய்ய வருமான வரித்துறை செயலாளரைச் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு ஒய்.ஜி. ராஜலட்சுமி கேட்டுக்கொண்டதாகவும் நடிகை குட்டி பத்மினி ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

4. இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரான வம்சி சந்திரன், தான் பிராமணர் இல்லாததால் அந்தப் பள்ளியின் பிற பிராமண மாணவர்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளானதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ஆனால், அதற்குப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்ததால் அந்த ட்வீட்டை தற்போது டெலிட் செய்துவிட்டார்.

5. கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவும் பி.எஸ்.பி.பி-யில் சாதிய பாகுபாடு இருந்ததாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

டி.எம்.கிருஷ்ணா

பத்மா சேஷாத்திரி நிலம் தொடர்பான வழக்குகள்

1. பத்ம சேஷாத்திரி பள்ளி அமைந்துள்ள நிலம் பாலபவன் என்ற பெயரில் பொதுச்சேவையில் ஈடுபாடுகொண்ட பெண்கள் சிலர் இணைந்து சங்கம் அமைத்துக் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டது என்றும், அந்த மகளிர் கூட்டு முயற்சிக்குத்தான் அன்றைய காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு அரசாங்க நிலத்தை பொதுப் பள்ளியின் பயன்பாட்டுக்குக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் அந்த பள்ளியின் நிறுவன உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் ஒய்.ஜி.பி குடும்பம் ஓரம்கட்டி மொத்த பள்ளியையும் தானே கைப்பற்றிக்கொண்டார்கள் எனவும் அந்தப் பள்ளியின் நிலம் தொடர்பாக வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தப் புகாரில் பள்ளியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த திருமதி ஒய்.ஜி.பி.ராஜலட்சுமி, பள்ளியின் பெயரையும் பால பவன் என்பதிலிருந்து தன் பேருக்கு மாற்றிக் கொண்டதோடு பொது அமைப்பாக இருந்த அந்த பள்ளியை தன் குடும்ப நிறுவனமாக மாற்றிக் கொண்டார் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள பி.எஸ்.பி.பி-யில் எத்தனை கட்டிடம் அனுமதி இன்றி கட்டி இருக்கிறார்கள் என்றும் அதன் மீதான நடவடிக்கை என்ன என்பது குறித்தும் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Also Read: சென்னை: `செல்போன், லேப்டாப்பில் அழிக்கப்பட்ட மெஸேஜ்கள்' - பாலியல் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியர்

நிலம் தொடர்பாக சுற்றும் புகைப்படம்

2. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியிலிருந்தபோது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலமாக முதன் முதலாக அமைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நகர் என்ற பெயரில் அமைக்கப்பட்ட சமத்துவபுரத்தில் 4×3 என்று 12 செக்டர்களாக பிரித்து ஒவ்வொரு செக்டர்களிலும் ஒரு பூங்கா அமைக்க இடம் ஒதுக்கியிருந்ததாகவும், 1977-ல் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் 5வது செக்டரில் பூங்கா அமைக்க ஒதுக்கியிருந்த பகுதியை நீக்கி விட்டு ஏறத்தாழ 100 கிரவுண்ட் இடங்களை ஒய்.ஜி.பார்த்தசாரதி குடும்பத்திற்குக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த இடத்தில்தான் தற்போது இருக்கும் பி.எஸ்.பி.பி அமைத்துள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது.

இப்படி பத்ம சேஷாத்ரி பள்ளி மீது தொடர் சர்ச்சைகள் இருந்து வருகின்றன. மேலும் பல குற்றச்சாட்டுகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகின்றன.



source https://www.vikatan.com/government-and-politics/politics/list-of-issues-on-psbb-school

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக