Ad

சனி, 1 மே, 2021

பெரும்பாலான தொகுதிகளில் 3 -வது இடம்! - கவனம் ஈர்க்கும் நாம் தமிழர் கட்சி!

2021 சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டிவரும் வேளையில், தி.மு.க - அ.தி.மு.க என முன்னணி கட்சிகளுக்கு அடுத்து பெரும்பான்மையான இடங்களில் 3 - வது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வாக்குகள் பெற்றிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தி.மு.க - அ.தி.மு.க என பிரதான கட்சிகளுக்கிடையேதான் போட்டி என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனாலும் இந்த 2 திராவிடக் கட்சிகளுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தைப் பிடிக்கப்போவது யார் என்ற கேள்வி, அனைத்துத் தேர்தல்களிலும் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

சீமான் தேர்தல் பிரசாரம்

அந்தவகையில், 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசார களம் 5 முனை போட்டியாக பரபரப்பு கிளப்பியபோதே, '3-வது இடத்தைப் பிடிக்கப் போகிற கட்சி அல்லது கூட்டணி எது...' என்ற விவாதமும் சூடு பறந்தது.

இதில், அ.ம.மு.க - தே.மு.தி.க கூட்டணி, ம.நீ.ம - ச.ம.க - ஐ.ஜே.கே கூட்டணி என இந்த 2 கூட்டணிகளில் ஏதாவது ஒன்று 3-வது இடத்தைப் பிடிக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதேசமயம் நாம் தமிழர் கட்சி தனித்து தேர்தலை சந்திப்பதால், அந்தக் கட்சி 4-லிருந்து 5 % வாக்குகளைப் பெறும் என்றே பெரும்பான்மையானவர்கள் கணித்து வந்தனர்.

ஆனால், 'திராவிடக் கட்சிகளுக்கு மாற்று, தமிழ்த் தேசியம்' என அடிப்படைக் கொள்கைகளை வகுத்துக்கொண்ட நாம் தமிழர் கட்சி, வழக்கமான அரசியல் பாதையிலிருந்து விலகி, தனித்துக் களம் காண்பது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் வெளிப்பாடு தேர்தல் கருத்து கணிப்புகளிலேயேகூட வெளிப்பட்டது. குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு பெருகிவருகிறது. தற்போதைய வாக்கு எண்ணிக்கையின்போது, இது வெளிப்பட்டு வருகிறது! முழுமையான வாக்கு சதவிகிதம் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தான் தெரிய வரும்.!



source https://www.vikatan.com/government-and-politics/politics/2021-in-the-election-hope-will-sprout-naam-tamilar-katchi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக