உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் பிரபாத் யாதவ். கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டும் அவர் இச்சேவையில் ஈடுபட்டிருந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொற்று பரவல் அதிகரித்த நிலையில், மீண்டும் முழு நேரமாக கொரோனா நோயாளிகளுக்கான ஆம்புலன்ஸ் சேவையில் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார் பிரபாத்.
கடந்த மே 15-ம் தேதி ஆம்புலன்ஸ் சேவையில் இருந்த அவருக்கு, மெயின்பூரில் இருந்த தனது தாய் உயிரிழந்த தகவல் கிடைத்திருக்கிறது. சோகம் ஒருபுறம் பிரபாத்தை ஆட்கொண்டாலும், அவர் தனது பணியை பாதியில் விட்டுவிட்டுச் செல்லவில்லை. தனது பணி நேரம் முடியும் வரை ஆம்புலன்ஸை இயக்கியிருக்கிறார். தாய் இறந்த செய்தி கிடைத்த பிறகு 15 நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்திருக்கிறார்.
அதன்பிறகே, 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது ஊருக்குச் சென்று தாயின் இறுதிச் சடங்கை முடித்திருக்கிறார். முடித்த கையோடு கிளம்பி அடுத்த நாளே மீண்டும் பணியைத் தொடங்கிவிட்டார்.
Also Read: மதுரை: ஆம்புலன்ஸ் தாமதம்... சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நோயாளி பலி! -அதிர்ச்சி சம்பவம்
சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டு, மனதை ஆற்றுப்படுத்துவிட்டு வரலாமே என, உயரதிகாரிகள் தெரிவித்த போதும், மறுத்துவிட்டாராம் பிரபாத். அதற்கு அவர் சொல்லும் காரணம், `` ஆம்புலன்ஸ் சேவைக்காக பல மக்கள் காத்துக்கிடப்பார்கள். இது அவசர சேவை. மக்களின் உயிர் முக்கியம். அப்படியே விட்டுவிட்டு என்னால் இருக்க முடியாது. என் அம்மா இறந்துவிட்டார். அதை நினைத்து நானும் சோகமாக உட்கார்ந்திருந்தால், மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியாது. 4 உயிர்களைக் காப்பாற்ற உதவினேன் எனத் தெரிந்தால் என் அம்மா பெருமைப்படுவார்" என்கிறார்.
கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது, தொற்றால் தனது தந்தையை இழந்தார் பிரபத். அப்போதும், 24 மணி நேரத்தில் மீண்டும் பணிக்கு திரும்பியிருக்கிறார். மக்கள் பணியில் இந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் காடும் கடமை உணர்வை அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் மெச்சுகின்றனர்.
source https://www.vikatan.com/news/general-news/up-agra-ambulance-driver-does-duty-even-after-his-mother-dies
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக