Covid question : கோவிட் தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக்கொண்ட பிறகு எத்தனை நாள்கள் கழித்து கேட்டராக்ட் (கண்புரை) அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்?
- விஜயலக்ஷ்மி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.
``ஒருவர் நீரிழிவுக்காரராக இருந்தால் சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்வது சிறந்தது. மற்றபடி கேட்டராக்ட் செய்துகொள்வதற்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்கிற நபர்களுக்கு, அறுவைசிகிச்சை முடிந்த ஒரு வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவே அறிவுறுத்துகிறேன். கோவிஷீல்டு, கோவாக்ஸின் மற்றும் ஸ்புட்னிக் என எந்தத் தடுப்பூசி கிடைக்கிறதோ அதைப் போட்டுக்கொள்ளலாம். அந்த விஷயத்தில் ரொம்பவும் யோசிக்க வேண்டாம். இப்போதைக்கு கொரோனாவிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே.
எனவே கேட்டராக்ட் அறுவை செய்துகொள்வதற்கு முன்போ, செய்துகொண்ட பிறகோ உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நிச்சயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.
Also Read: Covid Questions: கொரோனா பெருந்தொற்றுக் கால மன உளைச்சலில் இருந்து எவ்வாறு மீள்வது?
இப்போதெல்லாம் ஊசிகூட போடாமல் கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆபரேஷன் முடிந்த ஒரு மணி நேரத்திலேயே சம்பந்தப்பட்ட நபர் வீட்டுக்குத் திரும்பிவிடலாம். எனவே மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்குமோ, அந்த நிலையில் தடுப்பூசி எடுத்துக்கொள்வது சரியா என்ற பயமும் தேவையில்லை".
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/when-the-person-who-undergoing-cataract-surgery-can-take-covid-vaccine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக